'ஸ்ரேயாஸின் மாஸ் இன்னிங்ஸ்!’ - கொல்கத்தாவுக்கு 220 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. 

ஸ்ரேயாஸ் ஐயர்

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டெல்லி அணி புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், வழக்கம்போல் ஃபீல்டிங் தேர்வு செய்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக கவுதம் கம்பீர் இல்லாமல் டெல்லி அணி களமிறங்கியது.

முதல் விக்கெட்டுக்கு காலின் முன்ரோ, பிரித்வி ஷா ஜோடி டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது. 7 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 33 ரன்களுடன் முன்ரோ ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷாவுடன் இணைந்து அதிரடி காட்டினார். இந்த ஜோடி 7 ஓவர்களில் 67 ரன்கள் சேர்த்தது. பிரித்வி ஷா 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரிஷாப் பண்ட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறவே, ஸ்ரேயாஸூடன், மேக்ஸ்வெல் கைகோத்தார். இந்த ஜோடி கொல்கத்தா பந்துவீச்சாளர்களைக் கடுமையாகச் சோதித்தது. மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்த ஸ்ரேயாஸ் ஐயர், அரை சதம் அடித்து அசத்தினார். கடைசி ஓவர்களில் இந்த ஜோடி அதிரடி காட்டவே, டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். மறுமுனையில் வானவேடிக்கை நிகழ்த்திய ஸ்ரேயாஸ் ஐயர் 40 பந்துகளில் 93 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 200 ரன்களைக் கடப்பது இதுவே முதல்முறையாகும். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!