ப்ரித்வி ஷா என்னும் சச்சின்... ஷ்ரேயாஸ் ஐயர் என்னும் ஷேவாக்! - டெல்லி வெற்றி சொல்வது என்ன?! DDvKKR | How Delhi Daredevils won the battle against KKR

வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (28/04/2018)

கடைசி தொடர்பு:14:31 (28/04/2018)

ப்ரித்வி ஷா என்னும் சச்சின்... ஷ்ரேயாஸ் ஐயர் என்னும் ஷேவாக்! - டெல்லி வெற்றி சொல்வது என்ன?! DDvKKR

ப்ரித்வி ஷா என்னும் சச்சின்... ஷ்ரேயாஸ் ஐயர் என்னும் ஷேவாக்! - டெல்லி வெற்றி சொல்வது என்ன?! DDvKKR

மும்பையைத் தவிர எதிர்த்து விளையாடிய அத்தனை அணிகளுடனும் தோல்வி, தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று கேப்டன் கம்பீர் தொடரின் பாதியில் கேப்டன் பதவியில் இருந்து விலகல், புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் எனப் பலவித நெருக்கடிகளுடன் கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியை சந்தித்தது டெல்லி டேர்டெவில்ஸ்.

கொல்கத்தா அணி  விளையாடிய 6 போட்டிகளில், மூன்றில் வெற்றிபெற்று நான்காவது வெற்றியைக் கொண்டாட டெல்லி வந்தது. ஆனால் கொல்கத்தாவின் கனவு பலிக்கவில்லை!

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். கொல்கத்தா அணியில் கடைசியாக விளையாடிய போட்டியில் இருந்து ஒரே ஒரு மாற்றம்தான். குரானுக்கு பதிலாக மிட்செல் ஜான்சன் அணிக்குள் இடம்பிடித்தார். ஆனால் டெல்லியில் முந்தைய மேட்ச் வரை கேப்டனாக இருந்த கெளதம் கம்பீர் அணியிலேயே இல்லை. பஞ்சாபுக்கு எதிரானப் போட்டியில் ஐபிஎல்-க்கு அறிமுகமான மும்பை பொடியன் ப்ரித்வி ஷா அணியில் இடம்பிடித்திருந்தார்.

ஸ்பின் அட்டாக்!

கொல்கத்தா அணியின் மிகப்பெரிய பலமே ஸ்பின் அட்டாக்தான் என்பதால் பவர் ப்ளே ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்தே தொடங்கினார் தினேஷ் கார்த்திக். முதல் ஓவர் வீசிய பியூஷ் சாவ்லாவின் ஸ்பின் வேரியேஷன்களை ப்ரித்வி ஷாவால் எதிர்கொள்ள முடியவில்லை. முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே டெல்லிக்கு கிடைத்தது. அடுத்த ஓவர் குல்தீப் யாதவ். ஆட்டத்தின் முதல் சிக்ஸரை இந்த ஓவரில் பறக்கவிட்டார் முன்ரோ. அடுத்த பியூஷ் சாவ்லாவின் ஓவரை தெறிக்கவிட்டது காலின் முன்ரோ, ப்ரித்வி ஷா பார்ட்னர்ஷிப். 

இந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளை முன்ரோ பவுண்டரிகளுக்கு விரட்ட, நான்காவது, ஐந்தாவது பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினார் 18 வயதான ப்ரித்வி ஷா.

ப்ரித்வி ஷாவின் பேட்டிங் சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துகிறது. சச்சினின் பேட்டிங் பொசிசஷன், சச்சினின் ஷார்ட் செலக்ஷன், சச்சினின் கான்ஃபிடன்ஸ் என ப்ரித்வி ஷா அப்படியே ஜூனியர் சச்சின் போலவே விளையாடினார். இருவரின் பேட்டிலும் எம்.ஆர்.எஃப் ஸ்டிக்கர் இருந்நதும் ஒரு ஒற்றுமை.

மூன்றாவது ஓவரில் இருந்து களைகட்ட ஆரம்பித்த ப்ரித்வி ஷாவின் ஆட்டம் உச்சம் தொட ஆரம்பித்தது. ''யார்ரா இந்த சின்னப்பையன்?'' என ஆஸ்திரேலிய கமென்டேட்டர்கள் எல்லாம் கலகமாக, சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாச ஆரம்பித்தார் ப்ரித்வி.

பவர் ப்ளே முடிந்த அடுத்த ஓவரில் ஷிவம் மவி பந்து வீச்சில் காலின் முன்ரோ அவுட் ஆக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களத்துக்கு வந்தார். ஷ்ரேயாஸ் சிங்கிள் தட்டி ப்ரித்வி ஷாவின் பேட்டிங்கை ரசிக்க ஆரம்பித்தார்.

ஆஸ்திரேலியாவின் ஸ்பீடு லெஜண்ட் மிட்செல் ஜான்சன். ஆனால் அவரின் ஓவரை 1 பவுண்டரி, 1 சிக்ஸர் என அசால்ட்டாக டீல் செய்தார் ப்ரித்வி. அதில் அந்த சிக்ஸர் கிளாஸ் ரகம். மிடில் ஸ்டம்ப்பை நோக்கிவந்தப் பந்தை சின்ன ஃபிளிக் செய்து பந்து வந்தவேகத்தில் டீப் மிட்விக்கெட்டை நோக்கி சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் ஷா. 

38 பந்துகளில் அரை சதம் அடித்த ஷாவின் பேட்டிங்கைப் பார்த்து மிரண்டது கொல்கத்தா. ஆண்ட்ரி ரஸலின் பெளலிங்கில் 142 கிமீட்டர் வேகத்தில் வந்தப் பந்தை சச்சின் அடிப்பதுபோல மிட் ஆஃபில் அழகாகத் தட்டி பவுண்டரி ஆக்கினார் பிரித்வி. மீண்டும் 13வது ஓவரில் மிட்செல் ஜான்சனின் கடைசிப்பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் ஷா. இடுப்புக்கு வந்தப் பந்தை ஸ்கொயர் லெக்கில் அடித்தார்.
14வது ஓவரில் பியுஷ் சாவ்லா ப்ரித்விஷாவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டினார். 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்த ஷா, க்ளீன் போல்டானர். பிட்ச்சின் நடுவிலேயே பிட்ச் ஆனப் பந்து நல்ல பவுன்சாகி வரும் சிக்ஸருக்கு விரட்டலாம் என பேட்டை சுழற்றிய ஷாவுக்கு அதிர்ச்சி. பந்து பவுன்சாகமால் மிடில் ஸ்டம்ப்பில் மோதியது.

சச்சின் போனால் ஷேவாக்!

சச்சின் போனால் என்ன ஷேவாக் இருக்கிறார் என்பதுபோல இருந்தது ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம். அதகளப்படுத்தினார். கடைசி 6 ஓவர்களில் மட்டும் 92 ரன்கள் அடித்தது டெல்லி. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் 61 ரன்கள் அடித்தார். கடைசி ஓவர் வீசிய இளம் பந்து வீச்சாளர் ஷிவம் மவியின் கனவுகளை மொத்தமாக நொறுக்கினார் ஐயர். இந்த ஓவரில் மட்டும் 4 சிக்ஸர், 1 பவுண்டரி என மவியின் பெளலிங்கை மொத்தமாக முடித்தார் ஐயர். 40 பந்துகளில் 93 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்த இன்னிங்ஸில் ஐயரின் சிக்ஸர்கள் மட்டும் 10.

20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது டெல்லி.

சுமார் பெளலிங் சூப்பரான கதை!

220 ரன்கள் டார்கெட் என்பது அதிகம்தான் என்றாலும், டெல்லியின் பெளலிங் செம சுமார் என்பதால் நம்பிக்கையோடு களம் இறங்கியது கொல்கத்தா. ஸ்பின்னுக்கு சாதகமான டெல்லி பிட்ச்சில் டெல்லி அணிக்கு ஸ்பின்போட குவாலிட்டி ஸ்பின்னர்கள் இல்லை. அமித் மிஷ்ரா மட்டுமே சரியாக ஸ்பின் செய்யக்கூடியவர் என்பதால் கொல்கத்தா 220 ரன்கள் அடித்துவிடும் என்கிற எதிர்பார்ப்புடனேயே மேட்ச் தொடங்கியது.

ஆனால் இரண்டாவது ஓவரிலேயே ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் கிளென் மேக்ஸ்வெல். கிறிஸ் லின் போல்டு.அடுத்த ட்ரென்ட் போல்ட்டின் ஓவரில் ராபின் உத்தப்பா அவுட். ஆனால், அந்த ஓவரின் அடுத்தடுத்த பந்துகளை சிக்ஸர்களாக மாற்றி டெல்லி அணிக்கு தலைவலியைக் கொடுத்தார் சுனில் நரேன். 8 பந்துகளில் 26 ரன்கள் என சுனில் நரேன் சூப்பர் ஃபார்மில் இருக்க, போல்ட்டின் கடைசிப் பந்தில் அவுட் ஆனார். எக்ஸ்ட்ரா பவுன்சாகி வந்தப் பந்தை நரேனால் பேட்டில் சரியாக கனெக்ட் செய்யமுடியவில்லை. கவரில் நின்ற ஷ்ரேயாஸ் ஐயர் ஈஸியாகப் பிடிக்க, கொல்கத்தாவின் கதை கிட்டத்தட்ட முடிந்தது. 3 ஓவர்களின் முடிவில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது கொல்கத்தா. 

அவேஷ் கான் வீசிய ஆறாவது ஓவரில் நித்திஷ் ராணா அவுட் ஆனார். கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னுடைய பங்குக்கு ஒரே ஒரு சிக்ஸர் மட்டும் அடித்து 18 ரன்களில் அவுட் ஆனார். கொல்கத்தாவின் கான்ஃபிடன்ஸ் மொத்தமாக குலைந்திருந்த நேரத்தில் கிரீஸுக்குள் வந்தார் ஆண்ட்ரி ரஸல். அவர் உள்ளே வரும்போது கொல்கத்தா 63 பந்துகளில் 142 ரன்கள் அடிக்க வேண்டும். ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட 14 ரன்கள் தேவை என்கிற நிலை. 


 

ஷுப்மான் கில் கொஞ்சம் பக்குவமான ஆட்டம் ஆடிக்கொண்டிருக்க 12வது ஓவரில் இருந்து ஆண்ட்ரி ரஸல் பேட்டிங்கை கைப்பற்றினார். அவேஷ் கான் வீசிய ஓவரில் 2 சிக்ஸர்கள். அடுத்த டிம் பெளல்ட்டின் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என ரஸல் ஆட்டம் அனல் பறந்ததது. 15வது ஓவரில் டெவாட்டியா வீசய ஓவரிலும் ஒரு சிக்ஸர், 1 பவுண்டரி. 20 பந்துகளில் 43 ரன்கள் அடித்துவிட்டார் ரஸல்.

ரஸல்- ஷுப்மான் கில் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் டெல்லியின் பெளலிங் திணறிக்கொண்டிருக்க, தனக்குத்தானே மண் அள்ளிப்போட்டுக்கொண்டது கொல்கத்தா. 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு ரஸல் ஓட, கொஞ்சம் தயங்கிப்பின்னர் ஓட ஆரம்பித்த ஷுப்மான் கில் ரன் அவுட். ரஸல் களத்தில் இருந்தாலும் ரன் ரேட் கன்னாபின்னாவென உயர ஆட்டம் டெல்லியின் கைகளுக்குள் அடக்கம் ஆனது.

தோல்வியை ஒப்புக்கொண்டவர் போல விளையாட ஆரம்பித்தார் ரஸல். 24 பந்துகளில் 79 ரன்கள் தேவை என்கிற நிலையில் பந்து வீசிய பிளங்கட்டின் ஓவரில் பிக் ஹிட்டரான ரஸல் ஒரு ஷாட்கூட ஆட முடியாமல் திணறினார். இந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டும்தான் எடுத்தது கொல்கத்தா. 18வது ஓவரில் ரஸலும் அவுட் ஆக கொல்கத்தாவின் கதை மொத்தமாக முடிந்தது. 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது கொல்கத்தா. 

கொல்கத்தாவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் பெளலிங்கைவிட ஃபீல்டிங்தான். மிக மோசமான ஃபீல்டிங்கால் கேட்சுகளை கோட்டைவிட்டதோடு, பவுண்டரிகளை வாரி வழங்கிக்கொண்டிருந்தார்கள் ஃபீல்டர்கள்.

கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றியோடு தொடங்கியிருக்கிறார். இன்னும் டெல்லிக்கு 7 போட்டிகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்துப்போட்டிகளிலும் வெற்றிபெற்றால் ப்ளே ஆஃப்க்குள் நுழையலாம். ப்ரித்வி ஷா என்னும் ஜூனியர் சச்சினும் ஃபார்மில் இருக்கிறார். ஆனால் மிகவும் சுமாரான பெளலிங்கை வைத்துக்கொண்டு டெல்லி முன்னேறுவது சிரமம்தான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close