வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (28/04/2018)

கடைசி தொடர்பு:17:46 (28/04/2018)

'ஆடும் லெவனில் கம்பீரைச் சேர்க்காதது என்னுடைய முடிவல்ல!' - மனம்திறந்த ஸ்ரேயாஸ் ஐயர் #DDvsKKR

'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக நேற்று நடந்த போட்டியில், கம்பீரை ஆடும் லெவனில் சேர்க்காதது, தன்னுடைய முடிவு அல்ல' என டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் தொடரில், டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட கம்பீர், அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். கொல்கத்தா அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டு, இரண்டு முறை  கோப்பையை வென்று தந்துள்ளார் கம்பீர். இதனால், டெல்லி கூடுதல் உற்சாகத்துடன் களமிறங்கியது. ஆனால், இந்த சீசன் டெல்லி அணிக்கு நினைத்த மாதிரி மகிழ்ச்சியாக அமையவில்லை. முதலில் விளையாடிய 6 போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. 

கம்பீர்இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளான கம்பீர், டெல்லி அணியின் 7-வது போட்டிக்கு முன்னதாகத் தாமாக முன்வந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி களமிறங்கியது. ஆனால், டெல்லி அணியின் ஆடும் லெவனில் கம்பீர் இடம்பெறாதது பெரிய அளவில் பேசுபொருளானது. அதேநேரம் கம்பீர் இல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் முதன்முறையாகக் களம்கண்ட டெல்லி அணி, தனது 2 வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், ‘கம்பீரை பெஞ்சில் அமரவைக்கும் முடிவு என்னுடைய முடிவு அல்ல. இந்த தைரியமான முடிவை அவரே எடுத்தார். நிச்சயமாக இது தைரியமான முடிவுதான். கடந்த போட்டி வரை கேப்டனாக இருந்தவர், வெளியில் இருக்கிறேன் என முடிவெடுப்பது நிச்சயம் சாதாரண முடிவு கிடையாது. அவர் மீது இருந்த மதிப்பு உயர்ந்துள்ளது’ என்றார். டெல்லி அணி தற்போது 5 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.