வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (29/04/2018)

கடைசி தொடர்பு:14:34 (29/04/2018)

பவர் இல்லா பேட்டிங்... எனர்ஜி இல்லா பெளலிங்... மும்பைக்கு தோனியின் பரிசு! #CSKvsMI

பவர் இல்லா பேட்டிங்... எனர்ஜி இல்லா பெளலிங்... மும்பைக்கு தோனியின் பரிசு! #CSKvsMI

பேட்டிங் பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்கத்திணறினால் என்ன ஆகும் என்பதே சென்னை வெர்ஸஸ் மும்பை மேட்சின் ஒன்லைன்! #CSkvsMI 

சென்னையைவிட அதிகப் பிரஷருடன், அதிக டென்ஷனுடன் புனேவுக்கு விளையாடவந்தது மும்பை. ஆறு போட்டிகளில் 5-ல் தோல்வி, இனியும் தோல்வியடைந்தால் முன்னாள் சாம்பியன்கள் என்கிற பெருமையோடு ஓரங்கட்டவேண்டியதுதான் என்கிற நிலையிலேயே போட்டியைத் தொடங்கியது.

#CSKvsMI

டாஸ் தந்த வெற்றி!

டல்லாக டாஸ் போட கிரவுண்டுக்குள் வந்தவருக்கு முதல் நல்ல செய்தி டாஸ் வென்றதுதான். டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா சென்னையை முதலில் பேட்டிங் விளையாட அழைத்தார். கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து கீரான் பொலார்ட் இல்லாத அணியாக மும்பை ஆடும் லெவனைத் தேர்ந்தெடுத்திருந்தது. பொலார்டுக்கு பதிலாக தென் ஆப்ரிக்க பேட்ஸ்மென் ஜேபி டிமினியையும், முதல் மேட்சில் பிராவோ அடித்து நொறுக்கிய வங்கதேச பெளலர் முஸ்டஃபைசூருக்கு பதிலாக பென் கட்டிங்கையும் அணியில் சேர்த்திருந்தது மும்பை.

சென்னை அணியில் எந்த மாற்றமும் இல்லை.பெங்களூரு அணிக்கு எதிராக ஆடிய அதே லெவன். டுப்ளெஸ்ஸி சேர்கக்ப்படவில்லை. பெங்களூரு அணிக்கு எதிராக டுப்ளெஸ்ஸி சேர்க்கப்படாததற்கு காரணம் பெங்களூருவின் பேட்டிங்கை சமாளிக்க கூடுதல் பெளலர்கள் இருந்தால்போதும் என்பதுதான். ஆனால் மும்பையை சமாளிக்க கூடுதல் பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்கிற நிலையிலும் தோனி எந்த மாறுதலும் இல்லாமல் களமிறங்கியது ஆச்சர்யமே.

நினைச்சா ரன் அடிப்போம்!

முதலில் பேட்  செய்யும் அணி குறைந்தபட்சம் 180 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் வெற்றிபெற முடியும் என்கிற இலக்கைத் தெரிந்துகொண்டே ஆட்டத்தை தொடங்கியது சென்னை. வாட்ஸன், அம்பதி ராயுடு ஓப்பனிங் இறங்க, மும்பை  மெக்லீனெகனுடன் பெளலிங்கை ஆரம்பித்தது. ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே பிட்ச்சில் இருந்து இறங்கிவந்து ஸ்ட்ரெய்ட் சிக்ஸருக்கு அடித்தார் ராயுடு. ஆனால் அடுத்தடுத்தப் பந்துகளில் மெக்லீனெகன் மீண்டு வந்தார். முதல் ஓவர் முடிவில்  8 ரன்கள் அடித்தது சென்னை. 

இரண்டாவது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசினார். முதல் ஓவரில் அட்டகாச சிக்ஸர் அடித்த ராயுடு பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார். முதல் நான்கு பந்துகளுமே டாட் பால். இந்த ஓவரில் சென்னையால் 2 சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. மீண்டும் மெக்லீனெகன். 1 பவுண்டரி அடிக்க முடிந்ததே தவிர பவர்பிளேவின் மூன்றாவது ஓவரிலும் சென்னையின் பவர் எடுபடவில்லை. 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாவது ஓவரை சூப்பராக  வீசிய பும்ராவுக்கு ஓவர் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா கையில் பந்தைக் கொடுத்தார் ரோஹித் ஷர்மா. இந்த ஓவரில் கல்லி திசையில் ஒரு பவுண்டரி ராயுடு அடித்தார் அவ்வளவுதான். 6 ரன்கள் மட்டுமே பாண்டியாவின் ஓவரில்.  

#CSKvsMI

அடுத்த ஓவர் பாண்டியாவின் சகோதரர் க்ருணால் பாண்டியா கையில். இரண்டாவது பாலிலேயே விக்கெட் எடுத்து சென்னையின் தடுமாற்றத்தை ஆரம்பித்துவைத்தார் க்ருணால்.

ரெய்னா  உள்ளே வந்த உற்சாகத்தில், விக்கெட் விழுந்ததற்கு அடுத்தப் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ராயுடு. இந்த ஓவரின் கடைசிப் பந்து ரெய்னாவுக்கு அல்வாவாக மாட்டியது. கேஷுவலாகத் தட்டியதுபோல்தான் இருந்தது ஆனால் பந்து டீப்மிட் விக்கெட்  ஏரியாவில் போய் விழுந்தது. பவர் ப்ளேவின் ஐந்தாவது ஓவரில் 1 விக்கெட் விழுந்திருந்தாலும் சென்னை 15 ரன்கள் அடித்ததால் ரன் ரேட் கொஞ்சம் உயர்ந்தது.

பவர் ப்ளேவின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் நான்கு பந்துகளுமே செம டைட்டாகப் போட்டார் பாண்டியா. அடித்து ஆட வேண்டும் என்று நினைத்த ராயுடு, ரெய்னா இருவராலுமே பந்தை சரியாக கனெக்ட் செய்யமுடியவில்லை. ஆனால், கடைசி ரெண்டு பந்துகளை ஹர்திக் கொஞ்சம் லூஸ் பாலாகப் போட ராயுடு அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடிக்க, பவர்ப்ளேவின் முடிவில் 51 ரன்கள் எடுத்தது சென்னை.

ரெய்னா ஃபார்முக்கு வந்தார்... ஆனால் ரன்?

எட்டாவது ஓவரை மார்க்கண்டே வீச ராயுடு, ரெய்னா இருவருமே ஜூனியர் பேட்ஸ்மேன்கள் போல சரியான ஷாட்களை அடிக்கமுடியாமல் திணறினர். இந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை. முஸ்டஃபைசருக்கு பதிலாக வந்த பென் கட்டிங் பந்துவீசினார். கடைசி 12 பந்துகளாக வெறும் சிங்கிள் மட்டுமே எடுத்துகொண்டிருந்த சென்னை கட்டிங்கின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு வெளுத்தது. இந்த சிக்ஸரை ராயுடு அடிக்க, இரண்டு பந்துகள் கழித்து பவுண்டரி அடித்தார் ரெய்னா. 10வது ஓவர் மார்க்கண்டே கையில். முதல் ஓவரில் வெறும் 3 ரன்களே  எடுக்க முடிந்ததால் மார்க்கண்டேவின் இந்த ஓவரில் அடி  வெளுக்க வேண்டும் என ரெய்னா முடிவெடுத்திருந்தது அவரது பேட்டிங் ஸ்டைலில் தெரிந்தது. அடுத்தடுத்து 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்தார் ரெய்னா.

#CSKvsMI

10 ஓவர்களின் முடிவில் சென்னை 91 ரன்கள் அடித்து 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. எப்படியும் 200 ரன்கள் அடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை சென்னையின் பேட்டிங்கில் தெரிந்தது. ஆனால் ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்கிற கதைதான்.  முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் அடிக்கமுடிந்த சென்னையால், விக்கெட்டுகள் இருந்தும், பவர் ஹிட்டர்கள் இருந்தும், ரெய்னா கடைசி ஓவர் வரை இருந்தும் 60 பந்துகளில் 72 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த 10 ஓவர்கள்தான் சென்னையின் தோல்விக்கும், மும்பையின் வெற்றிக்கும் காரணம்.

பும்ரா வீசிய 13வது ஓவரில் அநியாயத்துக்கு கட்டைபோட்டார் தோனி. இந்த ஓவரின் கடைசி 4 பந்துகளையுமே டாட் பாலாக்கினார். பும்ராவின் இந்த ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தது சென்னை. அடுத்த ஓவர் க்ருணால் பாண்டியா. தோனியும், ரெய்னாவும் ரசித்து ரசித்து சிங்கிள்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர். இந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை.

ஹர்திக் பாண்டியா வீசிய பதினைந்தாவது ஓவரில்தான் கொஞ்சம் ஃபார்முக்கு வந்தார் தோனி. அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடிக்க 15 ஓவர்களின் முடிவில் சென்னை 117 ரன்கள் எடுத்திருந்தது. கையில் 8 விக்கெட்டுகள், தோனி-ரெய்னா என பவர்ஃபுல் பார்ட்னர்ஷிப்போடு மிரட்டலாகவே இருந்தது சென்னை. மார்க்கண்டேவின் 16வது ஓவரில் மீண்டும் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்தார் தோனி. 

தோனி பேக் டு பெவிலியன்!

'தோனி இஸ் பேக்' என ரசிகர்கள் எல்லோரும் விசில் போட, பும்ராவின் அடுத்த ஓவரில் ரெய்னா இரண்டு பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை கொஞ்சம் உயர்த்தினார். கடைசி 3 ஓவர்கள்தான் இருக்கின்றன. ஸ்கோர் 143. 18 பந்துகளில் குறைந்தபட்சம் இன்னும் 40 ரன்களாவது அடித்தால் தப்பிக்க முடியும் என்கிற நிலையில் கடைசி மூன்று ஓவர்களில் செம சொதப்பு சொதப்பியது சென்னை.

 மெக்லீனெகனின் முதல் பந்திலேயே தோனி அவுட். ஃபுல் டாஸை சரியான பவரில் அடிக்காததால் கேட்ச் ஆனது. இந்த ஓவரில் பிராவோ சந்தித்த முதல் பந்திலேயே அவுட். பாயின்ட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பிராவோ. 19வது ஓவர் மீண்டும் பும்ரா கையில். ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே ரெய்னாவால் அடிக்க முடிந்தது. ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் பில்லிங்ஸ் அவுட் ஆக, ஆட்டத்தின் கடைசிப் பந்தை சிக்ஸருக்கு அடித்து தனது ஸ்கோரை 75 ரன்களுக்கு உயர்த்தினார் ரெய்னா. ஆனால் அணியின் ஸ்கோர் வெறும் 169 ரன்கள்தான். பவர்ஹிட்டரான ரெய்னா 75 ரன்கள் அடிக்க 47 பந்துகளை எடுத்துக்கொண்டார். கடைசி 3 ஓவர்களில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை.

மும்பையின் பொறுத்திரு பேட்டிங்!

120 பந்துகளில் 170 ரன்கள் என ஈஸி டார்கெட். அதுவும் பேட்டிங் பிட்ச்சில். நிதானமான ஆட்டத்துடன் கணக்கைத் தொடங்கியது மும்பை.  ரோஹித் ஓப்பனிங் வருவார் என எதிர்பார்க்கப்பட, அவருக்கு பதில் சூர்யகுமார் வந்தார். லூயிஸ்- சூர்யகுமார் பார்ட்னர்ஷிப் அவசரப்படாமல் ஆடியது. பெளலிங் அட்டாக்கை சாஹர், தாக்கூர், வாட்ஸன் என வேகப்பந்து வீச்சாளர்களுடனேயே ஆரம்பித்தார் தோனி. முதல் நான்கு ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 34 ரன்கள் எடுத்தது மும்பை. 

#CSKvsmi

ஐந்தாவது ஓவர் மீண்டும் சாஹர் கையில் வந்தது. ஆனால் முதல் பந்து வீசிய கையோடு, காயம் ஏற்பட்டதால் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார் சாஹர். வேகப்பந்து வீச்சாளரிடம் இருந்து ஸ்பின்னுக்கு மாற்றினார் தோனி. ஹர்பஜன் சிங் ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தில் இருந்து தனது பெளலிங்கை தொடங்கினார். இந்த ஓவரில் மும்பையால்  7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது என்றாலும் விக்கெட் விழவில்லை.பவர்ப்ளேவின் முடிவில் விக்கெட் இழக்காமல் 50 ரன்கள் எடுத்தது மும்பை. அவசரப்பட்டு அடித்து அவுட் ஆகும் லூயிஸ் சென்னைக்கு எதிராக மிக மிக நிதானமான ஆட்டத்தை ஆடினார்.

ஹர்பஜனின் மூன்றாவது ஓவரில் முதல் விக்கெட் விழுந்தது. ரவீந்திர ஜடேஜாவால் நிகழ்ந்த ஒரே நன்மை. டீப் மிட்வெக்கெட்டில் அற்புதமாக கேட்ச் பிடித்து சூர்யகுமார் யாதவை அவுட் ஆக்கினார் ஜடேஜா. சூர்யகுமார் 44 ரன்கள் அடித்தார். 10 ஓவர்களின் முடிவில் சென்னையைவிட 20 ரன்கள் குறைவாக அதாவது 71 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை. ஆனால், சென்னையின் பெளலர்களிடம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை இல்லை.

பலன் அளிக்காத தோனியின் பெளலிங் மாற்றம்!

ரோஹித் ஷர்மா, இம்ரான் தாஹிரின் ஸ்பின்னில் திணறுவார் என்பதால் 11வது ஓவரை தாஹிரிடம் கொடுத்தார் தோனி. ஆனால், தோனி எதிர்பாராத ட்விஸ்ட். முதல் பந்தில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை லூயிஸிடம் கொடுத்துவிட்டார் ரோஹித். 2 சிக்ஸர்கள் அடித்து தாஹிரை விரட்டினார் லூயிஸ்.ஹர்பஜன் சிங்கை 12வது ஓவரோடு முடித்தார் தோனி. இந்த ஓவரின் 6 பந்துகளிலுமே ரோஹித், லூயிஸ் இருவரும் மாறி மாறி 6 சிங்கிள் எடுத்தனர்.

டெத் ஓவர்களின் ஸ்பெஷலிஸ்ட் பிராவோ வந்தார். முதல் 5 பந்துகளை சிறப்பாக வீசிய பிராவோவின் 6வது பந்தை  பவுண்டரியாக்கினார் லூயிஸ். வாட்ஸனின் 14வது ஓவரில் ரோஹித் ஷர்மா நீண்ட நாள்கள் கழித்து மீண்டும் ரோ'ஹிட்'மேன் ஆனார். முதல் பந்தில் ஒற்றைக்கையால் அடித்த சிக்ஸர் லாங் ஆஃபில் போய் விழுந்தது. இந்த ஓவரின் நான்காவது பந்திலும் பெரிய எஃபர்ட் எதுவுமே இல்லாமல் சிக்ஸர் அடித்தார் ரோஹித். ஆனால், அடுத்த 2 ஓவர்களையும் பிராவோ, தாக்கூர் இருவரும் அற்புதமாக வீசினார்கள். இந்த இரண்டு ஓவர்களிலும் மும்பை 14 ரன்கள் மட்டுமே எடுத்தது.

#CSKvsmi

கடைசி 24 பந்துகளில் 42 ரன்கள் தேவை என்கிற நிலையில் பிராவோவின் முதல் பந்தில் விக்கெட் விழுந்தது. லூயிஸ் அவுட் ஆக, இந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பிராவோ. ஆனால் வாட்ஸனின்  18வது ஓவர் மும்பை பக்கம் ஆட்டத்தை மாற்றியது. ரோஹித் 1 பவுண்டரி அடிக்க, பாண்டியா 1 சிக்ஸர் அடித்தார். கடைசி ஓவர் வீசுவதற்காக 19வது ஒவரை பிராவோவிடம் கொடுக்காமல் தாக்கூரிடம் கொடுத்தார் தோனி.

தாக்கூரின் இந்த ஓவரில் சென்னையின் கதையை முடித்தார் ரோஹித் ஷர்மா. தொடர்ந்து ஹாட்ரிக் பவுண்டரி அடித்தவர் இந்த ஓவரில் மொத்தம் 4 பவுண்டரிகள் அடித்தார். ஆட்டம் கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டும் போதும் என்கிற நிலைக்கு வந்தது.

மும்பையின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் பிராவோவிடம் பந்தை கொடுக்காமல் மீண்டும் இம்ரான் தாஹிரிடம் கொடுத்தார் தோனி. நான்காவது பந்தில் பவுண்டரியோடு ஆட்டத்தை முடித்தார் பாண்டியா.

7 போட்டிகளில் சென்னை சந்தித்த இரண்டாவது தோல்வி இது. ''இந்தத்தோல்வி எங்களை அடக்கமானவர்களாக இருக்க உதவுகிறது. தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டேயிருந்தால் நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள் என்பது தெரியமாலேயே போய்விடும். இதுவரை தனிப்பட்ட வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் வெற்றிபெற்றோம். இன்றைய போட்டியில் 20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம்'' என்றார் தோல்விக்குப் பின் தோனி! #CSKvsMi

7 போட்டிகள் முடிந்தபின்னும் சென்னை அணியில் இன்னும் புரியாத புதிராக இருப்பது ரவீந்திர ஜடேஜாவின் இடம்தான். இன்றைய போட்டியிலும் அவர் பந்துவீசவில்லை. இதுவரை ஆடிய 6 போட்டிகளிலுமே விளையாடி 47 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் ஜடேஜா.பெளலிங்கில் இதுவரை 1 விக்கெட் மட்டுமே எடுத்திருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து சென்னை அணியில் இடம்பெற்றுவருகிறார் என்பதுதான் ஆச்சர்யம். 

ஜடேஜாவின் இடத்துக்கு டெல்லி பேட்ஸ்மென் துருவ் ஷோரி அல்லது ஆல்ரவுண்டர் டேவிட் வில்லியை தோனி பயன்படுத்தலாம். பெளலிங், பேட்டிங் என இரண்டையுமே இன்னும் வலுவாக்கினால்தான் ப்ளே ஆஃப்களில் சென்னை வெற்றிபெறும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்