ஆஸ்திரேலிய தொடருக்கான அட்டவணை வெளியீடு; பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறதா இந்தியா?#AUSvIND | The schedule for Australia tour was announced

வெளியிடப்பட்ட நேரம்: 10:19 (30/04/2018)

கடைசி தொடர்பு:10:19 (30/04/2018)

ஆஸ்திரேலிய தொடருக்கான அட்டவணை வெளியீடு; பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறதா இந்தியா?#AUSvIND

இந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. 

இந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. 

கோலி

கிரிக்கெட் உலகில் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டிகளுக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இந்தாண்டுக்கான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாக தலைவர் ஜேம்ஸ் சதர்லாண்ட் வெளியிட்டார். 

நவம்பர் மாதம் மூன்று டி20 போட்டிகளுடன்  தொடங்கும் இந்தத் தொடர் ஜனவரி மாதம் ஒருநாள் தொடருடன் நிறைவடைகிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் 6-ம் தேதி அடிலைட்டில் தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்தியா விளையாடும் முதல் பகல் - இரவு போட்டியாக இருக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்தியா கிரிக்கெட் நிர்வாகம் பிங்க் நிற பந்தில் விளையாட தொடர்ந்து தயக்கம் காட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் அக்டோபர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகப் பகல் இரவு ஆட்டத்தில் விளையாட இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

ஆஸ்திரேலிய தொடர்

Photo: Twitter/CricketAus

''ஆஸ்திரேலியா அடிலைட்டில் நடக்கும் போட்டியில் இந்தியாவுடன் பகல் இரவு ஆட்டத்தில் ஆடத் தயாராக உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. உறுதியான அறிவிப்பு இனி வரும் நாள்களில் வெளிவரும்” என்றார் சதர்லாண்ட். 2 -வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்திலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு அடுத்த நாள் நடைபெறும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெர்போர்ன் மைதானத்திலும் நடைபெறுகிறது. இறுதி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் ஜனவரி 3-ல் தொடங்குகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 12 -ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.  2 -வது போட்டி (ஜனவரி 15) அடிலைட்டிலும், இறுதிப் போட்டி (ஜனவரி 18) மெல்போர்னிலும் நடைபெறுகிறது.