வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (30/04/2018)

கடைசி தொடர்பு:13:14 (30/04/2018)

தோல்வி பயம்... நம்பிக்கையில்லா மனம்... கோலியின் சொதப்பல் லெவன்! #RCBvKKR

தன் அணியின் மீது முழு நம்பிக்கையையும் இழந்துவிட்ட தலைவன் என்னவெல்லாம் செய்வான் என்பதை கோலியைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். நல்ல தலைவன் நல்ல அணியை உருவாக்குவான். அதேபோல் நல்ல அணி நல்ல தலைவனை உருவாக்குகிறது என்பார்கள். ஆனால் நல்ல அணியும் இல்லை, தோல்வியில் இருந்து பாடம்படிக்கும் சிறந்தத் தலைவனும் இல்லை என்றால் இதுதான் நடக்கும்.

தோல்வி பயம்... நம்பிக்கையில்லா மனம்... கோலியின் சொதப்பல் லெவன்! #RCBvKKR

தன் அணியின் மீது முழு நம்பிக்கையையும் இழந்துவிட்ட தலைவன் என்னவெல்லாம் செய்வான் என்பதை கோலியைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். நல்ல தலைவன் நல்ல அணியை உருவாக்குவான். அதேபோல் நல்ல அணி நல்ல தலைவனை உருவாக்குகிறது என்பார்கள். ஆனால் நல்ல அணியும் இல்லை, தோல்வியில் இருந்து பாடம்படிக்கும் சிறந்தத் தலைவனும் இல்லை என்றால் இதுதான் நடக்கும். நேற்று  2018 IPL சீசனின் ஐந்தாவது தோல்வியை கொல்கத்தா கோலிக்குப் பரிசளித்தது!

சென்னைக்கு எதிரானப் போட்டியில் 205 ரன்கள் அடித்தும் தோல்வியடைந்தது பெங்களூரு. இந்தத் தோல்விக்கு பெளலர்களை மட்டுமே காரணம் சொல்ல முடியாது. சரியான இடைவெளிகளில் சரியான பெளலர்களை மாற்றாத கோலிக்கும் இந்தத் தோல்வியில் பெரும் பங்குண்டு. வாஷிங்டன் சுந்தரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் ஒரே ஒரு ஓவர் மட்டும் போடவிட்டு நிறுத்திய கோலி, அடுத்தப்போட்டியில் அவரை ஆட்டத்தில் இருந்தே வெளியேற்றி தான் எப்படிப்பட்ட அனுபவம் இல்லாத கேப்டன் என்பதை நிரூபித்திருக்கிறார். நேற்று கொல்கத்தாவின் வெற்றியை மிகச்சுலபமாக்கியது கோலியின் கேப்டன்ஸியும், பெங்களூருவின் ஃபீல்டிங் மற்றும் பெளலிங்கும்தான்!

IPL


சொந்த ஸ்டேடியத்திலேயே தொடர் சறுக்கல்!

ஸ்டேடியம் மாற்றங்கள் எதுவும் இல்லாமல், ட்ராவல் சிரமங்கள் ஏதும் இல்லாமல் பெங்களூருவின் சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு அணி தொடர்ந்து ஆடும் மூன்றாவது ஆட்டம் இது. சென்னையிடம் பெற்ற தோல்வியில் இருந்து என் தலைக்குள் எதுவும் ஏறவில்லை என்பதுபோலவே இருந்தது கோலியின் ப்ளேயிங் லெவனில் செய்யப்பட்டிருந்த மாற்றங்கள். பெங்களூரு அணியில் செய்யப்பட்டிருந்த நான்கு மாற்றங்களில் இரண்டு மட்டுமே அவசியமானது. கோரி ஆண்டர்சனுக்குப் பதிலாக டிம் சவுத்தி, வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஏபி டிவில்லியர்ஸுக்குப் பதிலாக பிரண்டன் மெக்கல்லம் . ஆனால், மற்ற இரண்டுமே தேவையில்லாத ஆணிகள். வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மற்றுமொரு தமிழ்நாடு வீரர் முருகன் அஷ்வின், பவான் நெகிக்குப் பதிலாக மன்னன் வோராவை அணிக்குள் கொண்டுவந்திருந்தார் கோலி. பெங்களூரு பிட்சில் ஸ்பின் நன்றாக எடுக்கிறது என்று தெரிந்தும் சாஹல், அஷ்வின் என இரண்டே ஸ்பின்னர்கள்தான். உமேஷ், சவுத்தி, சிராஜ் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என பெளலிங்கை இன்னும் மோசமாகவே மாற்றினார் கோலி. 

டெத் ஓவர்களில் சரியான பெளலர்கள் இல்லை என்பதுதான் கோலியின் பிரச்னையே. அதனால் டிம் செளத்தி அணிக்குள் வந்தது நல்ல மாற்றம். ஆனால். வாஷிங்டன் சுந்தர் அணியில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு. பார்ட்னர்ஷிப்களை உடைப்பதில் மிகச்சிறந்த பெளலர் சுந்தர். ஆனால், சுந்தரை கழற்றிவிட்டுவிட்டார் கோலி.

எதிர்பக்கம் கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் இல்லை. டெல்லியிடம் தோல்வியடைந்திருந்தாலும் அணியில் எந்த மாற்றத்தையும் செய்யாதது அணியின் மீதான தினேஷ் கார்த்திக்கின் நம்பிக்கையை வெளிப்படுத்தியது. நரேன், சாவ்லா, குல்தீப் என மூன்று தரமான ஸ்பின்னர்களுடன் களம் இறங்கினார் கார்த்திக். டாஸ் வென்ற கார்த்திக் பெங்களூருவை பேட்டிங் செய்ய அழைக்க, குவின்ட்டன் டி-காக்குடன் ஓப்பனிங் ஆடவந்தார் பிரண்டன் மெக்கல்லம்.

IPL


பொறுப்பை உணர்ந்த மெக்கல்லம்!

'அடிப்பேன் இல்லையென்றால் அவுட் ஆவேன்' என்கிற தனது வழக்கமான பேட்டிங் ஸ்டைலில் இருந்து மாறி பெங்களூருவுக்கு மிக நல்ல ஸ்டார்ட்டை கொடுக்க வேண்டும் என்பது மெக்கல்லத்தின் பேட்டிங்கில் தெரிந்தது. பியுஷ் சாவ்லாவின் முதல் ஓவரை மெக்கல்லம், டிகாக் இருவருமே நிதானமாக ஆடினர். முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே அடித்தது பெங்களூரு. அடுத்த ஓவரை சுனில் நரேனிடம் கொடுத்தார் கார்த்திக். இந்த ஓவரில் டி காக் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடிக்க, மூன்றாவது ஓவர் ஸ்பின்னில் இருந்து வேகப்பந்து வீச்சுக்கு மாறியது. மிட்செல் ஜான்சன் வீசிய இந்த ஓவரில் மெக்கல்லம் ஒரு பவுண்டரி அடிக்க, டி காக் ஒரு சிக்ஸர் அடித்தார். பெங்களூருவின் பேட்டிங் ஃபார்முக்கு வந்ததுபோல் இருந்தது. இதனால் நான்காவது ஓவரில் மீண்டும் பியுஷ் சாவ்லாவைக் கொண்டுவந்தார் கார்த்திக். இந்த ஓவரின் முதல் பந்தில் மெக்கல்லம் 1 பவுண்டரி அடித்தாலும், கடைசி மூன்று பந்துகளை டாட் பாலாக்கினார்  சாவ்லா. பவர் ப்ளேவின் கடைசி ஓவரை வீசியவர் ஷிவம் மவி. பவர்ப்ளேவின் கடைசி ஓவர் அடித்து ஆடி ரன்ரேட்டை உயர்த்த வேண்டும் என்று டி காக்கும் ஆர்வம் காட்டவில்லை. மெக்கல்லமும் அவசரப்படவில்லை. விக்கெட்டுகளை காத்துக்கொள்ளலாம் என பொறுமை காக்க 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழக்காமல் 50 ரன்கள் எடுத்தது பெங்களூரு.

பெங்களூரு இதுவரை ஆடிய 7 போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களில் மிகக்குறைவான ரன் எடுத்தது இந்தப்போட்டியில்தான். அதேபோல் விக்கெட் இழக்காமல் இருந்ததும் இந்த ஆட்டத்தில்தான். 

கோலியின் டிஃபென்ஸ்!

மெக்கல்லம் பவர்ப்ளே முடிந்ததும் அடிக்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்போல. குல்தீப் யாதவின் பந்தில் ஒரு சிக்ஸர், சாவ்லாவின் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என மிரட்டினார். ஒன்பதாவது ஓவரின் முதல் பந்தில் கொல்கத்தாவுக்கு முதல் விக்கெட் கிடைத்தது. குல்தீப் யாதவின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானர் டி காக். கேப்டன் கோலி உள்ளே வந்தார். அடுத்த ஓவரில் மெக்கல்லம் அவுட். ரஸலின் ஷார்ட் பிட்ச் பாலை மெக்கல்லம் லெக் சைடில் அடிக்கமுயல அது பேட்டின் முனையில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனது. 28 பந்துகளில் 38 ரன்களுடன் வெளியேறினார் மெக்கல்லம். பவான் நெகிக்குப் பதிலாக அணிக்குள் வந்த மன்னன் வோரா, முதல் பந்திலேயே போல்டு. டக் அவுட். 10 ஓவர்களின் முடிவில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது பெங்களூரு.

விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் டிஃபென்சிவ் ஆட்டம் ஆட ஆரம்பித்தார் கோலி. குல்தீப் யாதவின் ஓவரை அடித்து ஆடவேயில்லை. குல்தீப் யாதவ் நான்கு ஓவர்களையும் முடிக்கும்வரை காத்திருந்தார் கோலி. 4 ஓவர்கள் வீசிய குல்தீப் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து டி காக்கின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். 15 ஓவர்களின் முடிவில் 109 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு. கோலி 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.
 

IPL


கோலியின் 68 ரன்கள்!

கடைசி 5 ஓவர்களில் அடித்தால்தான் உண்டு என்பதால் ஷிவம் மவியின் ஓவரை அடிக்க ஆரம்பித்தார் கோலி. இரண்டு பவுண்டரிகள். அடுத்த நரேனின் ஓவரில் மந்தீப் சிங் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அடுத்த ஆண்ட்ரி ரஸலின் ஓவரின் முதல் பந்தில் கோலி சிக்ஸர். ஆனால், மூன்றாவது பந்தில் மந்தீப் அவுட். ஆனால், கோலி இன் ஃபுல் ஃபார்ம். அந்த ஓவரின் கடைசிப் பந்தையும் சிக்ஸராக்கினார் கோலி. 

மந்தீப் அவுட் ஆனதால் உள்ளே வந்த நியூஸிலாந்து பேட்ஸ்மேன் காலின் டி கிராண்ட்ஹோமி, ஷிவம் மவியின் பந்துகளைப் பவர் கொண்டு அடிக்க முடியாமல் திணறினார். 19-வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு. கடைசி ஓவரை மிட்செல் ஜான்சன் வீச, கிராண்ட்ஹோமி 1 சிக்ஸரும், கோலி 1 சிக்ஸரும் அடித்து ஸ்கோரை 175 ரன்களுக்கு கொண்டுவந்தனர். 
தடதடவென மூன்று விக்கெட்டுகளை இழந்தபோது, பொறுமையாக களத்தில் நின்று ஆட்டத்தின் இறுதிப்பந்து வரை இருந்து 68 ரன்கள் அடித்து பெங்களூருவை சரிவில் இருந்து மீட்டார் கோலி. ஆனால், பேட்ஸ்மென் கோலியால் பேட்டிங்கைத்தான் சரிசெய்ய முடியும். பெளலிங்?!

வேகப்பந்தே முதலில்!

பவர்ப்ளே ஓவர்களை கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் ஸ்பின்னர்களை வைத்து தொடங்கினார். ஆனால், கோலி வேகப்பந்து வீச்சாளர்களிடமே பந்தை கொடுத்தார். டிம் சவுத்தியிடம் முதல் ஓவரைக் கொடுத்தார் கோலி. முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா. ஆனால், அடுத்த ஓவரில் உமேஷ் யாதவின் பந்துகளை பறக்கவிட்டார் சுனில் நரேன். இரண்டாவது ஓவரில் 13 ரன்கள் அடித்தது கொல்கத்தா. டிம் சவுத்தியிடம் மீண்டும் மூன்றாவது ஓவரை கொடுத்தார் கோலி. இந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் நரேன். நான்காவது ஓவர் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கையில் வந்தது. லின், நரேன் இருவரையும் அற்புதமாக சமாளித்தார் சாஹல். லின்னுக்கு சாஹல் வீசிய நான்காவது பால் லீடிங் எட்ஜாகி எக்ஸ்ட்ரா கவர் பக்கம் பறந்தது. செம ஈஸியான கேட்ச். இந்த சீசனில் முதல் மேட்ச் ஆடும் முருகன் அஷ்வின்  பிடித்திருக்கவேண்டிய கேட்ச் அது. கேட்சையும் விட்டார். மேட்சையும் விட்டார். இந்த கேட்ச் டிராப் ஆனதும் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த கோலி, தனது முகத்தை மூடிக்கொண்டார். ஆனால், இந்த நேரத்தில் அஷ்வினிடம் கோலி போய் பேசியிருக்க வேண்டும். அவரை மோட்டிவேட் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்து நான்கு ஓவர்கள் வீசப்போகிற முக்கிய பெளலர் அவர்தான். அவருக்கு நம்பிக்கைத் தராமல் ஒதுங்கிக்கொண்டார் கோலி.இந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார் சாஹல். 

IPL


ஸ்பின் ரன்களைக் கட்டுப்படுத்துவதோடு, விக்கெட் விழவும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் ஐந்தாவது ஓவரில் மீண்டும் உமேஷ் யாதவைக் கொண்டுவந்தார் கோலி. 1 பவுண்டரி, 1 சிக்ஸர் என இந்த ஓவரில் 11 ரன்கள் அடித்தது கொல்கத்தா. பவர் ப்ளேவின் கடைசி ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் லின்னால் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்ததே தவிர மற்ற ஐந்து பால்களுமே டாட் பால்ஸ். பவர் ப்ளேவின் முடிவில் விக்கெட் இழக்காமல் 51 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா. 

மழை... மழை..!

மொகமது சிராஜ் ஏழாவது ஓவரை வீசிக்கொண்டிருக்க, மழை குறுக்கிட்டது. மழை நின்று மீண்டும் ஆட்டம் ஆரம்பிக்க அரை மணி நேரம் ஆனது. ஆனால், ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. ஏழாவது ஓவரை முருகன் அஷ்வின் வீசினார். சுழற்பந்தின் முதல் பந்திலேயே விக்கெட். சுனில் நரேன் அவுட். அடுத்துவந்த உத்தப்பா  1 சிக்ஸர் அடிக்க அஷ்வினின் முதல் ஓவரில் மொத்தம் 8 ரன்கள். 10-வது ஓவரை மீண்டும் அஷ்வின் வீசினார். உத்தப்பா இரண்டு பவுண்டரிகள் அடிக்க, லின் ஒரு பவுண்டரி என 14 ரன்கள் கொடுத்தார் அஷ்வின். மூன்று பவுண்டரிகள் அடித்துவிட்டார்கள் என்பதற்காக 12-வது ஓவரை மீண்டும் அஷ்வினிடம் கொடுக்காமல், உமேஷ் யாதவிடம் கொடுத்தார் கோலி. அந்த ஓவரில் உத்தப்பாவுக்கு ஒரு சிக்ஸர் போனஸ். ஆனால், 13-வது ஓவர் மீண்டும் அஷ்வின் கையில். 
உத்தப்பாவை வீழ்த்தியது அஷ்வின்தான். 21 பந்துகளில் 36 ரன்கள் அடித்திருந்த உத்தப்பா பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், அடுத்த இரண்டு ஓவர்களில் 1 விக்கெட்டையாவது வீழ்த்த வேண்டும் என்கிற கோலியின் எதிர்பார்ப்பு வீணாய்ப் போனது. சாஹல், சவுத்தி, அஷ்வின் என மூவரின் ஓவர்களிலும் விக்கெட் விழவில்லை. 17-வது ஓவரை சிராஜிடம் கொடுத்தார் கோலி. இந்த ஓவரில் ரானா காயம் காரணமாக வெளியேற, ஆண்ட்ரு ரஸல் முதல் பந்திலேயே அவுட் ஆனார். ஆனால், இந்த ஓவரில் இரண்டு வைடுகள் போட்ட சிராஜ், மொத்தம் 14 ரன்கள் கொடுத்தார். 

IPL


கைகொடுக்காத டிம் சவுத்தி!

வெற்றிக்கு 18 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்கிற நிலையில் இருந்தது கொல்கத்தா. பந்து வீச வந்தவர் சவுத்தி. 2011 ஐபிஎல் போட்டிகளில் சென்னைக்காக விளையாடினார் டிம் சவுத்தி. அப்போது கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்கிற நிலையில் பந்து வீசிய டிம் சவுத்தி, 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சென்னைக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தவர். ஆனால், அந்த மேஜிக் நேற்று நடக்கவில்லை. சவுத்தியின் ஓவரில் லின் ஒரு பவுண்டரி, கார்த்திக் 1 பவுண்டரி. இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் அடித்தது கொல்கத்தா. மேட்ச் கையில் இருந்து போய்விட்டது என்பதை உணர்ந்தார் கோலி. மொத்தமாக நம்பிக்கையை இழந்தார். சிராஜிடம் ஓவரைக் கொடுத்தார். சிராஜின் ஓவரில் சிக்ஸர் அடித்தார் கார்த்திக். முதல் நான்கு பந்துகளில் 10 ரன்களைக் கொடுத்துவிட்டார் சிராஜ். வெற்றிக்கு 5 ரன்களே தேவை என்கிற நிலையில் தினேஷ் கார்த்திக்கின் பேட்டில் பட்டு லாங் ஆனுக்குப் பறந்துவந்தப் பந்தை அற்புதமாக டைவ் அடித்துப் பிடித்தார் கோலி. 2018 ஐபிஎல்-ன் மிகச்சிறந்த கேட்ச்களில் இதுவும் ஒன்று. ஆனால், கேட்ச் பிடித்தால் வெறிபிடித்தபடி கொண்டாடும் கோலி, பந்தை அம்பயரிடம் தூக்கிப்போட்டுவிட்டு அமைதியாக அதே இடத்தில் நின்றுவிட்டார். கடைசி ஓவரை யாதவ் வீச முதல் பந்தையே ஷுப்மான் கில் பவுண்டரிக்கு விரட்ட, 8 போட்டிகளில் தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா. கோலிக்கு 5-வது தோல்வி.

இனிவரும் 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே பெங்களூரு ப்ளே-ஆஃப்க்கு தகுதிபெறமுடியும். ஆனால், இதேநிலையில் உள்ள அதாவது 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்கிற நிலையில் இருக்கும் மும்பையைத்தான் நாளை சந்திக்கிறது பெங்களூரு!

கோலியா... ரோஹித்தா?!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்