வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (30/04/2018)

கடைசி தொடர்பு:15:01 (30/04/2018)

சிக்ஸர் சீஸனில் பெளலிங்கில் மெர்சல் காட்டும் சன் ரைசர்ஸ்! #RRvSRH

சிக்ஸர் சீஸனில் பெளலிங்கில் மெர்சல் காட்டும் சன் ரைசர்ஸ்! #RRvSRH

டி20 போட்டிகள் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களை நம்பியே இருக்கும். இந்த ஐபிஎல்லிலும் எல்லா அணிகளுக்கும் அதே கதை தான். சென்னைக்கு வாட்சன், தோனி, ரெய்னா, ராயுடு ; பஞ்சாபுக்கு கெயில், ராகுல் ; கொல்கத்தாவுக்கு லின், நரேன், ரஸல், கார்த்திக், உத்தப்பா ; என டேபிள் டாப்பர்களின் ரகசியம் இதுதான். அணியின் வெற்றியில் இவர்களின் பங்கு அதிகம். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் எல்லாம் அணிகள் இல்லை தேவையில்லாத ஆணிகள் என்பதாலும், அந்த ஆணியே பிடுங்க வேணாம் என்பதாலும், அடுத்த பாயின்ட்டுக்குப் போவோம்.  #RRvSRH

#RRvSRH

ஆனால், டேபிள் டாப்பரான ஐதரபாத் சன் ரைசர்ஸின் நிலையே வேறு. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரும், கேப்டனுமான டேவிட் வார்னர் சர்ச்சையில் சிக்கி, ஓராண்டு தடை வாங்க, ஐபிஎல்லிலும் தடை தொடர்ந்தது. இறுதி நிமிடத்தில் கேன் வில்லியம்சன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். நன்றாக இருந்த தவானும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு போட்டியில் ரிட்டயர் ஹர்ட், அடுத்த போட்டியில் ஓய்வு, அதற்கடுத்த போட்டியில் ஃபார்ம் அவுட் என ஒதுங்கிவிட்டார். ஐதரபாத் அணியின் பவுலிங் கேப்டனான புவனேஷ் குமாரும் கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், என்ன நடந்தாலும் சரி என தொடர்ந்து அசத்துகிறது சன்ரைசர்ஸ். காரணம், அதன் பவுலிங் யூனிட்டும், கேப்டன் கேன் வில்லியம்சனின் பேட்டிங் திறமையும்தான். 8 போட்டிகளில் ஆறு வெற்றியென, பிளே ஆஃப் சுற்றுக்கான நுழைவு வாசலில் ஜம்மென்று உட்காந்திருக்கிறது ஐதராபாத் அணி. 

இந்தத் தொடர் முழுக்கவே டாஸ் வென்றால், சேஸிங்தான் தேர்வு செய்வார்கள். கேன் வில்லியம்ஸன் அவரது பவுலர்கள் மேல் வைத்த நம்பிக்கையில் பேட்டிங் தேர்வு செய்தார். மொஹம்மத் நபிக்குப் பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸை களமிறக்கினார் வில்லியம்சன். ராஜஸ்தானின் ரஹானேவும் தன் பங்குக்கு நாமும் யாரையாவது மாற்றலாம் என சோதியையும், லொம்ரோரையும் களமிறக்கினார். 


ஹேல்ஸும், தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த கிருஷ்ணப்ப கௌதம் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்தது ஐதராபாத். அடுத்து குல்கர்னி வீசிய ஓவரில் மூன்று பவுண்டரி அடித்து 14 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ். தவானின் சோக கீதம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது . கௌதம் பந்தில் 6 ரன்களில் போல்டானார் தவான். கடந்த ஐந்து போட்டிகளில் தவான் அடித்தது எல்லாமே ஒற்றை இலக்க ரன்கள்தான். ( 6 , 11 , 5 , 0* (ரிட்டயர் ஹர்ட் ), 7 ) 

#RRvSRH

சன்ரைசர்ஸின் நம்பிக்கை நாயகனான கேன் வில்லியம்சன் ஒன் டவுனில் களமிறங்கினார். வில்லியம்சனை அவுட் ஆக்கினாலே, ஆட்டம் பாதி முடிந்த நிலை தான். ஆர்ச்சர் வீசிய பந்தில் சுலபான கேட்ச்சை கோட்டைவிட்டார் ராகுல் த்ரிபாதி. கேன் வில்லியம்சன் போன்ற பேட்ஸ்மேன்கள் மிஸ்ஹிட் அடிப்பதெல்லாம் அரிதிலும் அரிதான ஒன்று. அதை மிஸ் செய்த போதே, ராஜஸ்தான் தன்னை தோல்வி பக்கம் ஒதுக்கிக்கொண்டது என்றுதான் தோன்றியது. பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது சன்ரைசர்ஸ். 

ஹேல்ஸ், வில்லியம்சன் இருவரும் எந்த அதிரடியிலும் ஈடுபடாமல், ரன்கள் சேர்த்து வந்தனர். சோதி வீசிய 9-வது ஓவரில், ஸ்டோக்ஸ் அட்டகாசமாக கேட்ச் பிடித்தார். ஒட்டுமொத்த கிரவுண்டும் ஆர்ப்பரிக்க, ஸ்டோக்ஸ் கூலாக NO என்றார். காரணம், பந்து தரையில் பட்டுவிட்டது. கிரிக்கெட் இன்னும் உயிர்ப்போடு இருப்பது , இதுபோன்ற சில ஜென்டில்மேன் நிகழ்வுகளால் தான்.   பத்து ஓவர் முடிவில் விக்கெட்டுகள் இருந்தும், 70 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.  160 ரன்கள் எடுத்துவிட்டாலே போதும் என்கிற நிலைதான். ரஷித் கான், ஷகிபுல் ஹசன், சந்தீப் ஷர்மா,  சித்தார்த் கவுல், யூசஃப் பதான், பசில் தம்பி என பவுலர்கள் ஐதராபாத்தில் எக்கச்சக்கம். 

#RRvSRH

ஐபிஎல் ஏலத்தில் 11.5 கோடிக்கு எடுக்கப்பட்ட ஜெய்தேவ் உனத்கட் தான் சோதனை செய்வார் என ராஜஸ்தான் நினைத்திருக்காது. 'பாயின்ட் வரட்டும் தம்பி பேசுவோம் ' என காத்துக்கொண்டிருந்த சன்ரைசர்ஸ் , உனத்கட் வீசிய 12-வது ஓவரை வெளுத்து வாங்கியது. நான் கொடுத்த கோடியெல்லாம் இப்படி பவுண்டரியா போகுதே என சோகத்தில் அமர்ந்திருந்தது ராஜஸ்தான் Dug Out.  (4 6 4 2 4 1 ) அடித்து 32 பந்தில் அரைசதம் கடந்தார் வில்லியம்சன். தேர்ட் மேன் திசையில் ஒரு பவுண்டரி, எக்ஸ்டிரா கவர் திசையில் ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் அசத்தினார் வில்லியம்சன். 

கௌதம் வீசிய பந்தில் ஹேல்ஸும், சோதி வீசிய பந்தில் வில்லியம்சனும் அடுத்தடுத்து அவுட்டாக, 15 ஓவர் முடிவில் 120 ரன்கள் எடுத்திருந்தது சன்ரைசர்ஸ். ஷகிபுல் ஹசனுடன் , மனிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். ஆர்ச்சர் பந்து வீச்சில் ஒரே ஓவரில் ஹசனும், யூசஃப் பதானும் அவுட். இறுதியாக 20 ஓவர் முடிவில் 151 ரன்கள் எடுத்தது சன் ரைசர்ஸ். டி20 போட்டிகளில் 151 ரன்கள் என்பது மிகவும் எளிய இலக்குதான். ஆனால், சன்ரைஸர்ஸ்க்கு எதிராக மிகவும் கடினம். 

#RRvSRH

தேவையான ரன்ரேட் குறைவு. கேப்டன் ரஹேனேவும், ராகுல் த்ரிபாதியும் ஓப்பனிங் இறங்கினார்கள். சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் த்ரிபாதி போல்ட். பசில் தம்பி வீசிய ஓவரை வெளுத்து வாங்கினார் ஒன் டவுனில் இறங்கிய சஞ்சு சாம்சன். ( 4 6 0 4 2 1) அந்த ஓவர் மட்டும்தான் ராஜஸ்தான் அடித்த ஒரே ஒவர். மற்ற எல்லா ஓவர்களிலும், ஏனோ 50 ஓவர் இருப்பதுபோல், விளையாடிக்கொண்டிருந்தது ராஜஸ்தான். பவர் பிளே இறுதியில் 41 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். 

ரஷித் கான், ஷகிபுல் ஹசன், சித்தார்த் கவுல் என பவுலர்களை மாற்றிக்கொண்டே இருந்தார் கேன் வில்லியம்சன். அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சஞ்சு சாம்சன், அவசரப்பட்டு ஆடி, சித்தார்த் கவுல் பந்துவீச்சில் அவுட்டானார். ஸ்டோக்ஸ் இந்தத் தொடரில் இரண்டு முறை 40 ரன்கள் எடுத்திருந்தாலும், பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை. இந்த முறையும் சோபிக்கத் தவறினார் ஸ்டோக்ஸ். ரஷித் கான் பந்துவீச்சில் திணறுவார் என எதிர்பார்த்தால், பார்ட் டைம் பவுலரான யூசப் பதான் பந்தில் போல்டாகி டக் அவுட்டானார் ஸ்டோக்ஸ். இந்த சீசனில் முதல் முறையாக பந்துவீசினார் யூசப் . வில்லியம்சன் பந்தை யாரிடம் கொடுத்தாலும், அவர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்தனர். 

#RRvSRH

தேவையான ரன் ரேட் ஏறிக்கொண்டே சென்றது . ஆனால், அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல், பொறுப்பின்றி ஆடினார் கேப்டன் ரஹானே. ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாபுக்கு எதிராக பார்த்த அதே வேலையைப் பார்த்தார் ரஹானே.  அந்தப் போட்டியில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில், 45 பந்துகள் பிடித்து 57 ரன்கள் எடுத்தார் ஸ்ரேயாஸ். சிங்கிள்ஸ் தட்டிவிட்டு, எதிரே சென்று நின்றுகொள்வது என ஒரு பேட்ஸ்மேன் என்னென்னவெல்லாம் செய்யக்கூடாதோ, அதைச் செய்தார். அவராவது சின்னப் பையன். இந்திய அணியின் துணைக் கேப்டன், ராஜஸ்தான் அணியின் கேப்டன் நிலையில் இருக்கும் ரஹேனாவும் அதே மோடில்தான் விளையாடினார். 

ரஷித் கான் பந்தில் பட்லரும் 10 (11b 0x4 0x6) அவுட்டாக, தேவைப்படும் ரன்ரேட் பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ரஷித் கான் பந்துவீச்சில் ஒரு சிக்ஸ் தவிர, எல்லாமே சிங்கிள்தான். விளைவு இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவை. முதல் ஓவரிலேயே 17 ரன்கள் விட்டுக்கொடுத்த பசில் தம்பியை, ' தம்பி, நீயே கடைசி ஓவரை வீசு ' என அழைத்தார் வில்லியம்சன். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 11 பந்துகளில் 33 ரன்கள் (4x4 2x6 ) எடுத்து வெற்றி பெற வைத்த கிருஷ்ணப்ப கவுதம் ஸ்டிரைக் எடுத்து நின்றுகொண்டு இருந்தார்.

முதல் பந்திலேயே ஸ்குயர் லெக் திசையில் ஒரு பவுண்டரி. ரைட்டு, எல்லாம் முடிந்தது என நினைத்தால், அடுத்தடுத்து அட்டகாசமாக பந்து வீசினார் பசில். அடுத்த பந்தில் கவுதம் சிங்கிள் தட்டிவிட, ' என்னைய அடிக்க சொல்றியா' என்பதுபோல், மீண்டும் சிங்கிள் தட்டிவிட்டு, நான் - ஸ்டிரைக்கர் எண்டில் பாதுக்காப்பாக நின்றுகொண்டார். ஐந்தாவது பந்தில் கௌதமும் அவுட்டாக, ராஜஸ்தான் தோல்வியைத் தழுவியது. 53 பந்துகளில் 65 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 122.64) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரஹானே.

எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகள் பெற்று, சன்ரைசர்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. டேபிள் டாப்பில் இருக்கும் அணிகளுமே எதோவொரு வகையில் தமிழ்நாடு தான். கொல்கத்தா பஞ்சான் அணிகளின் கேப்டன் சென்னைப் பசங்க என்றால், சென்னை, ஐதராபாத் அணிகளின் உரிமையாளர்கள் சென்னைதான் . எப்படியெல்லாம் மேட்ச் பண்ண வேண்டியதிருக்கு!. 
இன்று நடக்க இருக்கும் சென்னை போட்டிக்காக காத்திருப்போம்.      


டிரெண்டிங் @ விகடன்