வெளியிடப்பட்ட நேரம்: 23:43 (30/04/2018)

கடைசி தொடர்பு:23:43 (30/04/2018)

'ரிஷப் பாண்ட், விஜய் சங்கர் போராட்டம் வீண்' - முதலிடத்துக்கு முன்னேறியது சென்னை அணி! 

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 

photo credit : twitter/ipl 

புனே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் வழக்கத்திற்கு மாறாக 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இம்ரான் தாஹிர், சாம் பில்லிங்ஸ், தீபக் சஹார் மற்றும் ஸ்ரதுல் தாகுர் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி, கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப், சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா மற்றும் டூபிளஸி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி சிறப்பாக ஆடியது. வாட்சன், ராயுடு மற்றும் தோனி அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. 

இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய டெல்லி அணிக்கு 2வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய பிரிதிவி ஷா 9 ரன்களுக்கு வெளியேற, முன்ரோவும் 26 ரன்களுக்கு அவுட் ஆகினார். அடுத்தடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மேக்ஸ்வெல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் இணைந்த ரிஷப் பாண்ட் தமிழக வீரர் விஜய் சங்கர் இணை அணியைச் சரிவில் இருந்து மீட்டது. எனினும் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 79 ரன்களுக்கு ரிஷப் பாண்ட் வெளியேறக் கடைசி கட்டத்தில் விஜய் சங்கர் சென்னை பந்துவீச்சாளர்களைச் சோதித்தார். 19வது ஓவரில் பிராவோ பந்துவீச்சை நொறுக்கிய விஜய் அந்த ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டமுடியாத டெல்லி அணி தோல்வியை தழுவியது. 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் சங்கர் 54 ரன்களும், ராகுல் 3 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க