வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (01/05/2018)

கடைசி தொடர்பு:13:16 (01/05/2018)

சென்னை அதிரடித்தாலும், விரட்டி மிரட்டிய டெல்லி! #CSKvDD

சென்னை அதிரடித்தாலும், விரட்டி மிரட்டிய டெல்லி! #CSKvDD

இந்த ஐபிஎல்லில் சென்னையின் ஃபார்ம் வேறு லெவலில் இருக்கிறது. சென்னையில் இருந்து பூனேவுக்கு மைதானத்தை மாற்றினாலும், சென்னையின் வெற்றி பயணத்தில் மாற்றம் ஏதும் இல்லை. மும்பைக்கு எதிரான தோல்வியின் போது , இது போன்ற தொடர்களில் தோல்வியும் அவசியம் என்பதை நினைவூட்டினார் தோனி. நேற்று புள்ளிப் பட்டியலில் கீழ் இருக்கும் டெல்லி அணிக்கும், வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கும் சென்னைக்கும் போட்டி. #CSKvDD

சென்ற போட்டியில் வென்றதால், டெல்லி அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதே அணியை மீண்டும் களமிறக்கினார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆம், கொல்கத்தா அணி கேப்டனாக இருந்த போது, தோனிக்கு எதிரான ஒவ்வொரு போட்டியிலும் தோனியை சுற்றி 9 பேரையும் நிற்க வைத்து அட்டாக்கிங் ஃபீல்ட் செட் செய்யும் கம்பீர் இந்த போட்டியிலும் விளையாடவில்லை. 

#CSKvDD

டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் சேஸிங் தேர்வு செய்தார். டெல்லி மாதிரியான அணிகளுக்கு எதிராக பென்ச் ஸ்டிரெந்த்தை பரிசோதனை செய்து பார்க்கலாம் என முடிவு செய்தார் தோனி. அதன்படி, இம்ரான் தாஹிர், சாம் பில்லிங்ஸ், தீபக் சஹார் மற்றும் ஸ்ரதுல் தாகுர் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்காவின் லுங்கி இங்கிடி, கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப், சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா மற்றும் டூபிளஸி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக தென்னாப்பிரிக்க வேகம் இங்கிடிக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும். 

முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் பந்திலேயே அட்டகாசமான ஒரு இன்ஸ்விங்கர். ஒட்டுமொத்த டெல்லி அணியும் கதற, கூலாக நின்றார் அம்பயர். ஸ்ரேயாஸ் ஐயர் DRS ரிவ்யூ கேட்டார். DRS , கேமரா, மூன்றாவது அம்பயர், டிவியில் பார்க்கு ரசிகர்கள், நேரில் போட்டியை பார்க்கும் நபர்கள் என யார் பார்த்தாலும், பந்து முதலில் பேடில் பட்டதா இல்லை பேட்டில் பட்டதா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. பேட்டில் பட்டது என்பவர்கள் சென்னை ரசிகர்களாகவும், பேடில் பட்டது என்பவர்கள் சென்னை ஹேட்டர்ஸாகவும் பார்க்கப்பட்டனர். இறுதியில் டெக்னாலஜி சாலமன் பாப்பையாவைப் போல், கையைப் பிசைய, அம்பயர் தீர்ப்பே இறுதியானது என சொல்லி, நாட் அவுட் என்றது அரங்கில் இருக்கும் ஸ்கிரீன். அதற்குப் பின்னர் வாட்சன் நடத்தியது எல்லாம் அசுர வேட்டை. அடுத்த பந்தில் மீண்டும் ஒரு இன்ஸ்விங்கர், அதை அப்படியே ஸ்குயர் லெக் திசையில் பவுண்டரிக்கு விளாசினார் வாட்சன். 

#CSKvDD

அடுத்த ஓவரை 21 வயதான அவேஷ் கான் வீசினார். டூபிளஸி அந்த ஓவர் முழுக்கவே திணறினார். அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார் அவேஷ். ஐந்தாவது ஓவரில் வாட்சன் ' வாட்டோ' மோடுக்கு மாறினார். பஞ்சாபுக்கு எதிராக 3 மூன்று விக்கெட், கொல்கத்தாவுக்கு எதிராக 6 ரன்கள் எக்கானமி என இருந்த டெல்லியின் புதிய நம்பிக்கை பிளங்கட் தான் பந்து வீசினார். இந்தப் போட்டி அவர் மறக்க வேண்டிய ஒன்று என அப்போது பிளங்கட்டுக்கு தெரிந்திருக்காது. காலம் காலமாக ஷார்ட் பால்களில் ஊறிப்போன ஆஸ்திரேலிய வீரர் வாட்சனுக்கு ஷார்ட் பால் வீசினார் பிளங்கட். ஆட்டத்தின் முதல் சிக்ஸ். அடுத்த பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ். ' டேய் டேய், நானும் ஒன்னு அடிச்சுக்கறேண்டா' என தடவிக் கொண்டிருந்த டூபிளஸியும் , ஷார்ட் ஃபைன் லெக் திசையில் ஒரு சிக்ஸ் அடிக்க, ஐந்தாவது ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுத்தது சென்னை. பவர் பிளே இறுதியில், விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. 

#CSKvDD

மீண்டும் பிளங்கட்டை பந்து வீச அழைத்தார் ஸ்ரேயாஸ் ஐயர். ' ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்ப்பா' என ஸ்ரேயாஸைப் பார்த்தனர் ரசிகர்கள். பந்தை வந்த வேகத்தில் அதே திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் வாட்சன். அடுத்த பந்திலும் ஒரு சிக்ஸ். 25 பந்துகளில் அரைசதம் கடந்தார் வாட்சன். ராகுல் திவேதியா ஓவரில் மீண்டும் இரண்டு சிக்ஸ். இந்த முறை ஸ்குயர் லெக் திசையில் ஒன்று, மிட்விக்கெட் திசையில் ஒன்று. 10 ஓவர் முடிவில் 96 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. " 31 பந்துகளில் 64 ரன் எடுத்த வாட்சன் எங்க, 29 பந்தில் 30 ரன் எடுத்த டூபிளஸி எங்க " என அப்போதே சூரிய வம்சம் மீம் போடத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்ஸ். 

 

#CSKvDD

விஜய் ஷங்கர் வீசிய 11 வது ஓவரின் எல்லாம் பந்தையும் அடிக்க ஆசைப்பட்டார் டூபிளஸி . அதிலும் ஒரு ஃப்ரீஹிட் வேறு  . வாட்சனால் கூட அதில் சிங்கிள் தான் அடிக்க முடிந்தது. இறுதியாக லாங்க் ஆஃபில் நின்று கொண்டிருந்த போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாரானார் டூபிளஸி . டெல்லி ரசிகர்களோடு, சென்னை ரசிகர்களும் துள்ளிக்குதித்தனர். காரணம் இன் - ஃபார்ம் ரெய்னா களமிறங்கினார். மேக்ஸ்வெல் பந்தில் ஒரு ரன்னுக்கு போல்ட் ஆனார் ரெய்னா. ஒவ்வொரு விக்கெட் இழப்பின் போதும், சென்னை அணி நம்பிக்கையை இழக்கவில்லை. ஏனெனில் அவர்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென் முழுக்க ஃபுல் பார்மில் இருந்தனர், இரண்டாண்டுகள் தடையில் இருந்தது காரணமோ என்னவோ, இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டிய முனைப்பில் இருந்தது சென்னை. 

இந்தத் தொடரில் அதிக ரன்களைக் குவித்த அம்பதி ராயுடு களமிறங்கினார். விஜய் ஷங்கர் இந்த ஓவரில் 15 ரன்களை வாரி வழங்கினார், இந்தப் போட்டியில், மிஷ்ராவின் பந்துகளில் மட்டுமே, நிதானமாக ஆடியது சென்னை அணி. மிஷ்ரா பந்துவீச்சீல் பிளங்கட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் வாட்சன்.  78 (40b 4x4 7x6)

#CSKvDD

இந்த சீசனில் முதல் சில போட்டிகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால், தோனி வெர்சன்  2.0வில் விளையாடுகிறார் என தோன்றியது. அதிக பந்துகளை சாப்பிட்டுவிட்டு, பின்னர் அதை சமாளிக்க டீசல் இஞ்சின் போல் வேகமெடுப்பார் தோனி. ஆனால், இந்த முறை நிலைமையே தலைகீழ். 37 வயதை நெருங்கும் தோனியை விட வேகமாக Running between the wicketsல் ஓட இன்னும் ஒருவர் கிரிக்கெட்டில் உருவாகவில்லை கட்டப்பா நிலை தான் இன்றுவரை.  எல்லோரும் திணறிய அமித் மிஷ்ரா பந்து வீச்சிலேயே , தன் முதல் சிக்ஸை அடித்தார் தோனி. 

' போல்ட்ட நான் பார்த்துக்கறேன், பிளங்கட்ட நீ பார்த்துக்க' மோடில் விளையாடினர் தோனியும், ராயுடுவும். 6 6 4 என அமர்க்களப்படுத்தினார் தோனி. போல்ட்டின் இந்த ஓவரில் 21 ரன்கள் எடுத்தது சென்னை. அடுத்து பிளங்கட்டின் பந்துவீச்சில் 4 6 4 அடித்து தன் பங்குக்கு அசரடித்தார் அம்பதி ராயுடு. 

19வது ஓவரை அவேஷ் கான் வீசினார். எளிதாக பிடிக்க வேண்டிய கேட்சை கோட்டைவிட்டார் முன்ரோ. ' இதெல்லாம், நாம தான திருப்பி அடிக்கணும், நம்ம பெர்பாமன்ஸ் வேற நல்லா இருக்காதேடா' மோடில் யோசித்துக்கொண்டிருந்தார் முன்ரோ. இறுதி ஓவரை வீசினார் போல்ட். மீண்டும் ஒரு சிக்ஸ். அடுத்து ஒரு பவுண்டரி. அடுத்த பந்தில் எல்லா காமெடிகளும் அரங்கேறியது. பந்து கீப்பர் பன்ட்டிடம் தான் இருந்தது. அதற்குள் என்ன நினைத்தாரோ, ராயுடு வேகமாக சிங்கிள் ஓட, ஸ்டிரைக்கர் எண்டுக்கு வந்துவிட்டார். தோனி கூலாக அங்கேயே நின்று கொண்டிருந்தார். சரி, மறுபடியும் வந்த இடத்துலேயே போய் நிப்போம் என ராயுடு ரிட்டர்ன் ரன்னுக்கு ஆயுத்தமாக , அவரை ரன் அவுட் செய்தார் போல்ட். 22 பந்துகளில் அரைசதம் கடந்தார் தோனி. அதில் ஐந்து சிக்ஸர்களும் அடக்கம்.

#CSKvDD

212 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடினமான இலக்குடன் களமிறங்கியது டெல்லி. சென்னை அணி முழுக்கவே சீனியர்கள் பட்டாளம் என்றால், டெல்லி முழுக்கவே கிட்ஸ் செக்சன் தான். பிருத்வி ஷா (18), ஸ்ரேயாஸ் ஐயர் (23 ), ரிஷப் பன்ட் (20), திவேதியா (24 ), அவேஷ் கான் (21 ) என பலரும் ஜூனியர்ஸ். 

முதல் ஓவரை தென் ஆப்பிரிக்காவின் இங்கிடி வீசினார். வெறும் ஒரு ரன். முதல் இரண்டு ஓவர்களிலும் , புதுமுகங்களை பரிசோதித்தது சென்னை. கேரளாவின் ஆசிஃப் இரண்டாவது ஓவரை வீசினார். இரண்டு பவுண்டரிகளை அடித்திருந்த ப்ருத்வி ஷா, ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தேவைப்படும் ரன் ரேட் பத்துக்கும் மேல் என்பதால், விக்கெட்டுகளை இழந்தாலும் , விரட்டிபிடித்து ஆடியது டெல்லி.  வாட்சன் பந்தில் சிக்ஸ், பவுண்டரி; ஆசிஃப் பந்தில் ( 4 4 6 ) என அதிரடியாக ஆடினார் முன்ரோ. அடுத்த பந்தையும் அடிக்க ஆசைப்பட்ட முன்ரோ, ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து தன் விக்கெட்டை இழந்தார். 26 (16b 3x4 2x6). 

#CSKvDD

இந்த சீசனில் ரிஷப் பன்ட்டின் அதிரடி நேற்றும் தொடர்ந்தது. சந்தித்த முதல் பந்தையே லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு அனுப்பினார் பன்ட். அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி. மிகவும் முக்கியமான போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயரும் ரன் அவுட் ஆகிவிட, களமிறங்கினார் மேக்ஸ்வெல். " நாம யாரு , நம்மள எதுக்கு ஒவ்வொரு அணியும் இவ்வளவு காசு கொடுத்து எடுக்குது " என எதுவும் புரியாமலேயே தொடர்ந்து ஆடிவருகிறார் மேக்ஸ்வெல். ரோஹித் ஷ்ரமாவை 'நோ' ஹிட் ஷர்மா என அழைத்தது போல், மேக்ஸ்வெல்லை மேக்ஸ்'நாட்' வெல் என்று தன் இனி அழைக்க வேண்டும் போல. நேற்றும் ஆறு ரன்கள் எடுத்துவிட்டு, பொறுப்பின்றி ஜடேஜா பந்தில் போல்டானார். 9 ஓவர் முடிவில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, தனது டிரேட்மார்க் தோல்வி மோடுக்கு தயாரானது டெல்லி. அடுத்து களமிறங்கியது விஜய் ஷங்கர். அப்போதே, போட்டி முடிந்தது என பலரும் நினைத்தனர்.

#CSKvDD

நேற்றைய போட்டியின் சைலன்ட் ஹீரோ விஜய் ஷங்கர் தான். பங்களாதேஷுக்கு எதிராக டி20 இறுதி போட்டியில், இந்தியாவின் வெற்றியை பறிக்க முயற்சி செய்தவர் என்பது தான் விஜய் ஷங்கருக்கு இருக்கும் ஒரே வரலாறு. அந்த 17 ரன்களை எடுக்க, அவர் அன்று எடுத்துக்கொண்ட 19 பந்துகளும், பந்தைத் தொடக்கூட முடியாமல் திணறியதும், போட்டியைக் கண்ட அனைவருமே அறிவர். ஒட்டு மொத்த இணையத்தில் பேச்சுக்கு ஆளானார் விஜய் ஷங்கர். இந்த ஐபிஎல்லில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்ட போதும், பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் நேற்றைய நிலைமையே வேறு.   தேவையான ரன்ரேட் 15ஐக் கடந்தது. ஜடேஜா பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ். மீண்டும் ஹர்பஜன் பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் என பன்ட் அடித்தாலும், அது வெற்றிக்கு போதவில்லை என்பது தான் உண்மை. ஆச்ஃப் வீசிய ஓவரில் வெறி கொண்டு ஆடினார் பன்ட். அந்த ஓவரின் இறுதியில் 18 ரன்கள். 37 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார் பன்ட். ஒற்றை ஆளாக போராடிய பன்ட் இறுதியில் இங்கிடி பந்துவீச்சில் அவுட்டானார் 79 (45b 7x4 4x6). 

அப்புறமென்ன, ஆகற வேலையைப் பார்ப்போம் என ஜாலியாக பந்து வீச வந்தார் பிரேவோ. லாங் ஆனில் இரண்டு சிக்ஸ், டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ் என அடித்தார் விஜய் ஷங்கர். " இந்தப் பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன் " என கிளாப் தட்டினர் ரசிகர்கள். ஆனால், இதை முன்பே செய்திருக்க வேண்டுமே. கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட, இங்கிடி பந்துவீச வந்தார். அதில் விஜயால் ஒரு சிக்ஸ் மட்டுமே அடிக்க முடிந்தது. 

#CSKvDD

இமாலய வெற்றி பெறும் என எதிர்பார்த்த சென்னை, டெல்லியின் அதிரடி ஆட்டத்தால், 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது சென்னை. 40 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய வாட்சன் , மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார்.

#CSKvDD

 


டிரெண்டிங் @ விகடன்