ரஞ்சி முதல் ஐபிஎல் வரை... யார் இந்த ரிஷப் பன்ட்? | Article About Delhi Daredevils Team Player Rishabh Pant

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (01/05/2018)

கடைசி தொடர்பு:16:00 (01/05/2018)

ரஞ்சி முதல் ஐபிஎல் வரை... யார் இந்த ரிஷப் பன்ட்?

ரஞ்சி முதல் ஐபிஎல் வரை... யார் இந்த ரிஷப் பன்ட்?

ஒரு போர்வீரனின் அடிப்படை குணமே, தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையிலும், தன் நாட்டிற்காக இறுதி வரை வெற்றி , தோல்விகளைக் கடந்து உறுதியுடன் போராடுவது. தோல்வியை முடிந்தவரையிலும் நெருங்கவிடாமல் எல்லைக்கு அப்பால் விரட்டி அடிக்க முயற்சிப்பது தான். நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பன்ட்டும், விஜய் ஷங்கரும் இதை தான் செய்ய முயற்சித்தனர். 

கேப்டன் தோனி ரொம்பவே கூல் . எந்த சூழலிலும் நிதானத்தை இழந்து பதற்றப்பட மாட்டார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் தோனி அப்படியில்லை.ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை 4 பந்துகளுக்கு 20 ரன் அடித்தால் என்ற நிலை வரும் வரை தோனி சற்று பதற்றமாகவே காணப்பட்டார். தோனி மட்டுமல்ல, அம்பத்தி ராயுடு, பிராவோ என சென்னை அணியில் அனைவருமே ஒருவித பதற்றத்துடனே காணப்பட்டனர். சென்னை ரசிகர்களுமே ஒருவித பதற்றத்துடனேயே அமர்திருந்தனர். அந்தப் பதற்றத்திற்கு வித்திட்டது ரிஷப் பன்ட் என்ற 20 வயது இளைஞன். உத்தர்காண்டைச் சேர்ந்த ரிஷப் பன்ட். கிரிக்கெட்டில்  பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இளைஞன். ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 300 கடந்த இளம் வீரர்களுள் ஒருவர். ரஞ்சிக் கோப்பையில் ரிஷப் பன்ட் அடித்த சாதனை சதமும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

ரிஷப் பன்ட்

 2016 ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியவர்.  அதே தொடரில்   சதமடித்தும் அசத்தினார். அவர் சதமடித்த அதே நாளில் தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 1.9 கோடி ரூபாய்க்காக ஏலம் எடுக்கப்பட்டார். 19 வயதில் இங்கிலாந்திற்கு எதிரான டி-20 தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார். 2017 ஐ.பி.எல்லில் 14 போட்டிகளில் 366 ரன்களை குவித்த ரிஷப் பன்ட் இந்த முறை 8 போட்களிலேயே 306 ரன்கள் விளாசியிருக்கிறார். இந்த ஐ.பி.எல்லில் ஆர்.சி.பி க்கு எதிரான போட்டியில் 85 ரன்கள் விளாசி டெல்லி அணியின் ஸ்டார் ப்ளேயராக மாறியுள்ளார் ரிஷப் பன்ட்.இந்திய அணிக்காக டி-20 தொடர்களில் கலக்கவுள்ள ரிஷப் பன்ட் நேற்றைய ஆட்டத்தில் ஒரு புதிய நம்பிக்கையை பாய்ச்சி இருக்கிறார்.  

ரிஷப்

தான் விளையாடும் அணி தொடர் தோல்விகளால் அடிபட்டு கிடக்கிறது. கேப்டன் கம்பீர் தனக்கு கேப்டன்ஷிப் வேண்டாமென வெளியேறுகிறார். அணிக்கு புதிய கேப்டனாக அனுபவமில்லாத ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்கிறார். இப்படிப் பல்வேறு சொதப்பல்களுக்கிடையே தனது அணி நேற்று களளமிறங்குகிறது.  எதிரணியோ பலம் வாய்ந்த அணி.  இந்த வருட கம் -பேக்கிற்கு பின் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன், தொடர் வெற்றிகளை குவித்து வரும் அணி.இப்படி எவ்வித அச்சமும் இல்லாமல் கோடையின் ஒட்டுமொத்த உஷ்னத்தையும் வெளிப்படுத்தினார் ரிஷப் பன்ட்.

டாஸ் ஜெயித்து பவுலிங்கை செலக்ட் செய்த டெல்லி அணியின் பவுலிங்கை வெரட்டி, வெரட்டி வெளுத்து வாங்கியது சென்னை அணி. 212 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணி முதல் ஓவரிலேயே திணற ஆரம்பித்தது. சிறிய தடுமாற்றத்திற்குப் பின் கோலின் முன்ரோ 2 சிக்சர் அடித்து ஆட்டத்தை சூடுபிடிக்க வைத்தார். ஆனால் சிறிது நேரத்திலயே ஆட்டமிழந்து டெல்லி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன் பிறகு களமிறங்கிய ரிஷப் பன்ட் சிக்ஸருடன் தனது  வருகையை பதிவு செய்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி டெல்லி பேன்சை சற்று நம்பிக்கையுடன் அமர வைத்தார். சில நிமிடங்களிலேயே சொதப்பலான ரன் அவுட் மூலம் ஸ்ரோயஸ் ஐயரும் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து மேக்ஸ்வெல்லை நம்பிய டெல்லி பேன்ஸ்க்கும் அதிர்ச்சியே காத்திருந்தது.

ரிஷப்

8.5 ஓவர்களில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தோல்வியின் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருந்தது டெல்லி அணி. பவுண்டரி லைன்களுக்கு வெளியே அமர்ந்திருந்த டெல்லி ப்ளேயர்ஸ் சோர்வாக அமர்ந்திருந்தனர். டெல்லி கொடியை கையில் வைத்திருந்த டெல்லி பேன்ஸ் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக இருந்தனர். ஹர்பஜன் வீசிய 10 வது ஓவரிலும் ஷாட்கள் தேறவில்லை.

ஜடேஜா வீசிய 11 வது ஓவரில் ஒரு பவுண்டரி , ஒரு சிக்சர் என பாண்ட் கணக்கைத் தொடங்கினார். டெல்லி ப்ளேயர்கள்  கைகளைத் தட்டி உற்சாகமாகினர். மடக்கி வைத்திருந்த டெல்லி டேர்டெவில்ஸ் கொடிகள் ரசிகர்களின் கைகளில் கம்பீரமாக ஆடத் தொடங்கியது. தங்களால் முடிந்தவரை விஜய் சங்கரும், ரிஷப் பன்ட்டும் அடிக்க ஆரம்பித்தனர். சென்னை அணியின் அசத்தலான பீல்டிங்கையும் மீறி துளிகளாக ரன் சேர்த்தனர். ரிஷப் பன்ட் ஒவ்வொரு ஷாட்டிலும் கீழே விழுகிறார். ஷாட்களுக்காக முயற்சி செய்கிறார். ஒரு பெரும் யானைப் படையுடன் எளிய போர்வீரன் ஒருவன் ஒற்றை ஆளாக போர் புரிவது போலக் காட்சி  அளித்தது ரிஷப் பன்ட்டின் ஆட்டம். 

கே. எம். ஆசிப் வீசிய 16 ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து ஐம்பது ரன்களைக் கடந்த ரிஷப் பன்ட் தன் கைகளை உயர்த்தி தன் அணியினருக்கு 'தம்ஸ் அப்' காட்டினார். இருள் அடர்ந்த காட்டில் ஒரு சிறு மின்மினிப் பூச்சி தன் ஒளியைப் பாய்ச்சிய நம்பிக்கைத் தருணங்கள் அவை. பிராவோ வீசிய 17 ஆவது ஓவரிலும் இரண்டு பவுண்டரிகளை விளாசினார் பன்ட். 

விஜய் ஷங்கர்

18 பந்துகளில் 55 ரன்கள் தேவை என்ற மிகக் கடினமாக இலக்கில் லுங்கி நிகிடி வீசிய 18 வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் பன்ட். அந்த ஓவரின் நான்காவது பந்து டெல்லி அணியின் நம்பிக்கையை தகர்த்தது. அவுட் சைடு ஆப் ஸ்டம்ப்பை நோக்கி வந்த ஸ்லோ டெலிவரியை பன்ட் விளாச அதை கவர் திசையில் ஜடேஜா கேட்ச் பிடித்தார். சென்னை அணி வீரர்கள் அத்தனை பேரின் முகத்திலும் அவ்வளவு நிம்மதி. 45 பந்துகளில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பன்ட் வெளியேறினார். தன் அணியினை தோல்வியிலிருந்து மீட்க முடியவில்லை என்ற ஏக்கம் முகமெல்லாம் பரவ பெவிலியன் நோக்கித் திரும்பினான் அந்த அசகாய வீரன். ஒரு விளையாட்டு வீரனின் போர்குணம், நம்பிக்கையான ஆட்டம் சக வீரனுக்குள்ளும் ஒரு உத்வகத்தை உண்டாக்கும். பிராவோ வீசிய 19 வது ஓவரில் விஜய் சங்கர் அடித்த மூன்று சிக்சர்கள் அந்த நம்பிக்கையினால் ஏற்பட்ட உத்வேகம் போன்றே தோன்றியது. அந்த இரண்டு வீரர்களும் தன் அணியினை தோல்வியிலிருந்து மீட்க நடத்திய போராட்டம் பாராட்ட வேண்டியது. நேற்றைய போட்டியில் ஒருவேளை டெல்லி வெற்றி பெற்றிருந்தால் ரிஷப் பன்ட்டும், விஜய் ஷங்கரும் இன்றைய தினத்தின் பேசு பொருளாக மாறியிருப்பார்கள். எப்போதுமே போராட்டத்தைவிட வெற்றிக்கு தான் கவன ஈர்ப்பு அதிகமாக கிடைக்கும். ஆனால் வரலாறு வெற்றி, தோல்விகளைத் தாண்டி போராட்டத்தையும் ஞாபகம் வைத்திருக்கும். வரும் தலைமுறையின் நம்பிக்கைக்காக அதை சுமந்து நிற்கும். அந்த நம்பிக்கைக்குரிய டேர் டெவில்ஸ்களாக ரிஷப் பன்ட்டும், விஜய் ஷங்கரும் இருப்பார்கள்.


டிரெண்டிங் @ விகடன்