'சொதப்பல் பந்துவீச்சு; மிரட்டல் பட்லர்' - கடைசி ஓவரில் திரில் வெற்றிபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

photo credit: twitter/ipl

ஐ.பி.எல் இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கத்திலேயே மழை பெய்ததால் தாமதமாகத் தொடங்கப்பட்டதுடன், 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் சோதி மற்றும் மஹிபால், லாம்ரோர் ஆகியோருக்குப் பதிலாக டிஆர்கி ஷார்ட் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். டெல்லி அணியில் ராகுல் டீவாட்டியாவுக்குப் பதிலாக ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டிருந்தார்.

முதலில் களமிறங்கிய  டெல்லி அணியில் இளம் வீரர்கள் பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பாண்ட் ஆகியோர் சிறப்பாக ஆடினர். மூவரும் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். பிருத்வி ஷா 47 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள், ரிஷப் பாண்ட் 69 ரன்கள் எடுக்க டெல்லி அணி 196 ரன்கள் குவித்தது. ஆனால் 17.1 ஓவரின் போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் டெல்லி அணிக்கு 12 ஓவர்களுக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் மிரட்டினார். டெல்லி பந்துவீச்சை புரட்டி எடுத்த பட்லர் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் அதிவேக அரைசதம் அடித்த ராஜஸ்தான் வீரர் என்ற பெருமையை படைத்தார். 

தொடர்ந்து அதிரடி காட்டிய பட்லர், 26 பந்துகளில் 67 எடுத்திருந்த போது அவுட் ஆனார். பின்னர் வந்த சஞ்சு சாம்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் இருந்த ஷார்ட் அதிரடி காட்டினார். அவினேஷ் கான் வீசிய 9வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த ஷார்ட், அந்த ஓவரிலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன்பின் வந்த வீரர்கள் சொதப்ப கடைசி ஓவரில் டெல்லி அணி திரில் வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ட்ரெண்ட் பவுல்ட் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!