ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்! | New head coach for Australian cricket team was announced today

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (03/05/2018)

கடைசி தொடர்பு:11:05 (03/05/2018)

ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்!

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியை டேரன் லெமேன் ராஜினாமா செய்ததால், தற்போது அந்த அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜஸ்டின் லாங்கர்

ஆஸ்திரேலிய அணி, தற்போது சோதனையான காலகட்டத்தில் உள்ளது. பந்து சேதப்படுத்தப்பட்ட  விவகாரத்தில், முன்னாள் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தடையில் உள்ளனர். அப்போது பயிற்சியாளராக இருந்த டேரன் லெமேனுக்குத் தடை எதுவும் வழங்காதபோதும் நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, தனது தலைமைப்  பயிற்சியாளர் பதவியை ராஜினாமாசெய்தார். 

இதனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் புதிய பயிற்சியாளரைத்  தேர்வுசெய்வதில் தீவிரம் காட்டியது. கடந்த சில நாள்களாக நடைபெற்றுவந்த இந்தத் தேர்வுப் பணிகள் முடிவடைந்த  நிலையில், இன்று ஆஸ்திரேலிய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் லாங்கர் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாக இயக்குநர் சதர்லாண்ட் தெரிவித்துள்ளார். பயிற்சியாளராக அவரது சமீபத்திய பங்களிப்பைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஜஸ்டின் லாங்கர் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் பெர்த் ஸ்கோட்சர்ஸ் அணிகளுக்குப் பயிற்சியாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
47 வயதாகும் ஜஸ்டின் லாங்கர், ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அனுபவம் கொண்டவர். வரும் மே 22 -ம் தேதி, ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்கும் லாங்கர், அடுத்த 4 அண்டுகளுக்குப் பயிற்சியாளராகச் செயல்படுவார். இந்தக் காலகட்டத்தில், இரண்டு ஆஷஸ் தொடர், உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளதால், மிக முக்கிய காலகட்டத்தில் பயிற்சியாளராகப் பதவியேற்றுள்ளார் லாங்கர். 

“இது, நிச்சயம் சவாலான ஒன்றுதான். எனினும், ஆஸ்திரேலியாவில் திறமையானவர்களுக்குப் பஞ்சமில்லை. எல்லோரும் ஒன்றிணைந்து, மக்களின் ஆதரவுடன் ஆஸ்திரேலியாவைப் பெருமைபடச் செய்வோம்” என நம்பிக்கை அளிக்கிறார், ஜஸ்டின் லாங்கர்.


[X] Close

[X] Close