வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (03/05/2018)

கடைசி தொடர்பு:14:22 (03/05/2018)

பன்ட் தெறி... பட்லர் மெர்சல்... சிக்ஸர் மழையில் #RRvDD யுத்தம்

பன்ட் தெறி... பட்லர் மெர்சல்... சிக்ஸர் மழையில் #RRvDD யுத்தம்

நேற்று டெல்லியின் கோட்லா மைதானத்தில் இரண்டாம் முறையாக டெல்லியும் ராஜஸ்தானும் மோதிக்கொண்டன. இந்த ஐபிஎல்லின் ஆறாவது மேட்ச்சில் முதல் முறை #RRvDD மோதிக்கொண்டன. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, 153 ரன்கள் (17.5 ஓவர்) எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ஆறு ஓவர்களில் 71 ரன்கள் டார்கெட். ஆனால், டெல்லியால் நான்கு விக்கெட்டுக்களை இழந்தும் 60 ரன்கள் தான் எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் D/L முறைப்படி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த முறை டெல்லி முதலில் பேட் செய்தது. " டேய் அஷோக், நீ எப்படி உங்க ஊர்ல மழைய வர வச்சு, உன் டீம ஜெய்க்க வச்சியோ. அதே மாதிரி, நானும் எங்க ஊர்ல மழைய வர வச்சு, என் டீம ஜெய்க்க வைக்கல" மோடில் டெல்லியிலும் மழை வெளுத்து வாங்கியது. ராஜஸ்தான் அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால், டெல்லி அணி மொத்தமாய் மாறி இருந்தது. புது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா, அவேஷ் கான் என இன்னும் கொஞ்சம் இளமையாக மாறி இருந்தது டெல்லி. முடிவும் வேறாக அமைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். #RRvDD

#RRvDD

எப்போதும் மேட்சுக்கு நடுவே பெய்து, இரண்டாம் இன்னிங்ஸ் விளையாடுபவர்களை மட்டும் சோதிக்கும் மழை, இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே பெய்தது. ' காலைல எல்லாம் நல்லாத்தாம் இருக்கா, ராத்திரி ஆனா மோகினி ஆகிடுறா ' என்பது போல், ராஜஸ்தான் டாஸ் வென்று சேஸிங் சொல்லி டீம் அறிவிப்பது வரை அமைதி காத்தது மழை. அதன் பிறகு பெய்ய ஆரம்பித்த மழை, பெய்தது . பெய்து கொண்டேயிருந்தது... முதல் இன்னிங்ஸ் முடியும் நேரமான 9.30 மணியளவில் மழை தன்மை குறைய போட்டியை ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தனர் ஐபிஎல் விழா கமிட்டியினர். ஆளுக்கு 18 ஓவர்கள் . 

18 ஓவர்... எப்போது வேண்டுமானாலும், மழை மீண்டும் பெய்யலாம். மீண்டும் D/L என முடிவில் மண் விழலாம் என்பதால், முதலிலிருந்தே அடித்து ஆட வேண்டிய கட்டாயம். முன்ரோ சந்தித்த முதல் பந்திலேயே பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, முதல் ஓவர் முடிவில் 1 ரன்னுக்கு 1 விக்கெட் என இருந்தது டெல்லி. அட, டெல்லி மீண்டும் தன்னோட ' சொந்த' ஃபார்முக்கு வந்துடுச்சு போல, என நினைத்தால், அடுத்து நடந்தவை எல்லாமே அதிரடிதான். ஒட்டுமொத்த போட்டியிலும், குல்கர்னி வீசிய இந்த முதல் ஓவர் மட்டுமே, பவுலர்கள் வசம் இருந்தது. மீதி எல்லாமே பேட்ஸ்மேன்களின் அதிரடிதான். 

#RRvDD

குல்கர்னியின் இரண்டாவது ஓவரில் 16 ரன்கள் எடுத்தார் பிருத்வி ஷா. மிட்விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ், மிட் ஆன் திசையில் ஒரு சிக்ஸ் என இந்தப் போட்டிக்கான டோனை செட் செய்தார் 'ஜூனியர் சச்சின்' பிருத்வி.  90ஸ் கிட்ஸ் மட்டுமல்ல, 80ஸ், 70ஸ் கிட்ஸ் கூட டெல்லி அணியின் பிருத்வி ஷா பேட்டிங்கைப் பார்க்கும்போது, சொல்லும் ஒரு விஷயம் யார்றா இவன் சச்சின் மாதிரி ஆடுறான் என்பதுதான். அதற்கு அவர் வைத்திருக்கும் MRF பேட் ஒரு காரணம் என்றாலும், அண்டர் 19ல் கோப்பை வென்று கொடுத்தது, 14 வயதிலேயே பள்ளி போட்டி ஒன்றில் 546 ரன்கள் எடுத்தது, ரஞ்சி டிராபி, துலிப் டிராபி போன்ற தொடர்களில் முதல் போட்டியிலேயே சதம் கண்டது என பிருத்வி ஷாவும் தன் வயதுக்கு பல சாதனைகளை தன் வசம் வைத்திருக்கிறார். ஆனால், சச்சினா என்பதையெல்லாம், அவர் நிரூபிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.  

#RRvDD

மொத்தமே 18 ஓவர்கள்தான் என்பதால், இந்தப் போட்டியில் ஐந்து ஓவர்கள் மட்டுமே பவர்பிளே. பவர்பிளேவின் இறுதி ஓவரை வீச வந்தார் ராஜஸ்தான் அணியின் காஸ்ட்லி பௌலரான உனத்கட். அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி , ஒரு சிக்ஸர் என 18 பந்துகளில், 37 ரன்கள் எடுத்தார் பிருத்வி. மறுமுனையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இன்னும் அதிரடி மோடுக்கு மாறாமல் இருந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்ரேயாஸ் கோபால் பந்து வீசி, அதையும் நிவர்த்தி செய்தார். லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸ், டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அதுவரை அட்டகாசமாக ஆடி வந்த பிருத்வி ஷா, கோபால் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். 47 ரன்களில் (25b 4x4 4x6) ஷா அவுட்டானபோது, அணியின் ரன் ரேட் பத்தை நெருங்கி இருந்தது. 

#RRvDD

இந்தத் தொடரின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பன்ட், இந்தப் போட்டியிலும், தன் அதிரடியைத் தொடர்ந்தார். ஆர்ச்சர் , ஸ்டோக்ஸ் என யார் பந்துவீசினாலும் அதை சிக்ஸ்க்கு அனுப்பினார் பன்ட். தன் இரண்டாவது ஓவரே 16 ரன்களுக்கு போய்விட, பதற்றத்துடனே 13-வது ஓவரை வீச  வந்தார் குல்கர்னி. அதெப்படி 18 ஓவரில் மேட்ச் முடியலாமென நினைத்தாரோ என்னவோ, அந்த ஓவரில் 9 பந்துகள் வீசினார். ' உன்னால ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க முடியும்னா, என்னால ஹாட்ரிக் ஒய்டு போட முடியும் ' என தொடர்ச்சியாக ஒய்டு போட்டுக்கொண்டே இருந்தார். 12.5-வது பந்தை அவர் வீசிக்கொண்டே இருக்க, பொறுமையிழந்த பன்ட், ஒய்டாக சென்ற பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார். இந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் விட்டுக்கொடுத்தார் குல்கர்னி. ரிஷப் பன்ட் அடிப்பதெல்லாம் கோலி அடிப்பது போல் கிரிக்கெட் ஷாட்களா என்றால் இல்லைதான், ஆனால், டி20 மாதிரியான போட்டிகளில் சிறந்த என்டெர்டெய்னராக வருவார் பன்ட். கெவின் பீட்டர்சன், மேக்ஸ்வெல் ஆடுவது போல் ஸ்விட்ச் ஹிட் , ஏபிடி ஆடுவது போல் பேக் ஷாட் என எல்லாவற்றையும் ஆடுகிறார் பன்ட். அவரது உயரமும் அதற்கு நன்கு உதவுகிறது. 

#RRvDD

பவுண்டரி, சிக்ஸ் மட்டுமல்ல , ஓவர்த்ரோ செய்தெல்லாம் ஐந்து ரன்கள் வழங்கியது ராஜஸ்தான் அணி. அந்த ஐந்து ரன்கள் தான் கடைசியில் ராஜஸ்தானுக்கு வில்லனாக அமைந்தது. ஒரே ஓவரில் ஸ்ரேயாஸ்  50 (35b 3x4 3x6) , பன்ட்  69 (29b 7x4 5x6)  இருவரையும்  அவுட்டாக்கினார் உனத்கட். சென்ற போட்டியில், அடித்த விஜய் ஷங்கர் , அதே முரட்டுத்தனமான குருட்டுத்தனத்துடன் இந்த போட்டியிலும் பவுண்டரி, சிக்ஸ் என அடித்து மீண்டும் உனத்கட் பந்தில் அவுட்டானார். 17 (6b 2x4 1x6) . விஜய் ஷங்கரே இப்படி அடிக்கறார்னா, மேக்ஸ்வெல்  பொளப்பார்ல, என இன்னும் மேக்ஸ் 'நாட்' வெல் சேவல் மீது பந்தயம் கட்டும் சிறார்களைப் பார்த்து ' பொளப்பாரு... பொளப்பாரு ' என்றார் காலா டீசரில் வரும் அந்தப் பெண்மணி. ஐந்து பந்துகளில் ஐந்து ரன்கள் எடுத்து அவுட்டானார் மேக்ஸ்வெல். 18 ஓவர்தானே கேட்டோம் என விழா கமிட்டியினர் வானத்தைப் பார்க்க, 17.1 ஓவரிலேயே மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. 

ஊர் உலகமே குட் நைட் சொல்லி தூங்க, 11.30 மணிக்கு ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. 12 ஓவர்களில் 151 ரன்கள் டார்கெட். முதல் முறை மோதியபோது, எப்படி ஓப்பனர் கவுதம் கம்பீர், தன்னைத் தவிர மற்றவர்களை ஒவ்வொருவராய் களமிறக்கினாரோ, அதே வேலையை செய்தார் ரஹானே. 151 ரன்கள் அடிக்க, ரஹானேவுக்கு எப்படியும் 150 பந்துகள் தேவைப்படும் என்பதை உணர்ந்திருந்தார் ரஹானே. 

#RRvDD

டார்சி ஷார்ட், பட்லர் என இருபக்கமும் வெளிநாட்டு வீரர்களை களமிறக்கினார் ரஹானே. மிடில் ஆர்டரில் தடவிக்கொண்டிருந்த பட்லர், ஓப்பனிங் இறங்கியதால் வெளுத்து வாங்கினார். சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாவார் என நினைத்தால், பவுண்டரி , சிக்ஸ் என அடித்தார் பட்லர். கடந்த சில போட்டிகளாக, சிறப்பாக பந்துவீசிய டெல்லியின் அவேஷ் கான் தான் பட்லரின் அதிரடிக்குப் பலியான முதல் ஆடு. மூன்று சிக்ஸ், 1 பவுண்டரி என அதகளப்படுத்தினார் பட்லர். அமித் மிஷ்ரா பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து, 18 பந்துகளில் அரைசதம் கடந்தார் பட்லர். மீண்டும் அவேஷ் கான் பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என 24 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார் பட்லர். இறுதியாக மிஷ்ரா பந்தில் பன்ட் ஸ்டம்பிங் செய்ததில் பட்லர் அவுட்டானார்.  ராஜஸ்தானின் அடுத்த நம்பிக்கை வீரரான சஞ்சு சாம்சன் சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாக, ' வட்ட செய..லா..ள...ர் வ...ண்..டு....முருகன்' என இழுத்தனர் ராஜஸ்தான் ரசிகர்கள். ' உங்களுக்கு மேக்ஸ்வெல் எப்படியோ, அப்படி எங்களுக்கு ஸ்டோக்ஸ்' என களமிறங்கினார் ஸ்டோக்ஸ். தேவைப்படும் ரன்ரேட் 17ஐ தொட்டது. 'சோ வாட்' என 1 ரன் எடுத்து பெட்டிக்குள் மீண்டும் ஒளிந்துகொண்டார் ஸ்டோக்ஸ். 

#RRvDD

அதுவரை பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த டார்சி ஷார்ட், மேக்ஸ்வெல் பந்தில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அவுட்டானார். ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்ப கவுதம் என டீமில் இருக்கும் எல்லோரையும் அனுப்பிய ரஹானே, இறுதிவரை களமிறங்கவே இல்லை. அடியாட்களை ஒவ்வொருவராக அனுப்பும், வில்லனின் லாவகத்தை பின்பற்றினார் ரஹானே. ' நம்ம பெர்பாமன்ஸ் தான் நல்லாயிருக்காதேடா' என ரஹானே தெளிவாக இருப்பது ஒரு வகையில் நல்ல விஷயமே. 

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை. கௌதம் மீண்டும் மும்பைக்கு எதிராக அடித்தது போல் , ஏதாவது அற்புதம் நிகழ்த்துவாரா என பார்த்துக்கொண்டு இருந்தது ராஜஸ்தான் Dug Out. ஆனால், பந்துவீசியது பௌல்ட். அவரது பந்தில் அப்படி எதுவுமே செய்ய முடியவில்லை. 3 பந்துகளில் பத்து ரன் தேவைப்பட, ரன் அவுட் முறையில் அவுட்டாகி  ஸ்டிரைக்கர் எண்டுக்கு வந்து நின்றார் கௌதம். ஐந்தாவது பந்தை லாங் ஆன் திசையில் பவுண்டரிக்கு விளாசினார். ஒரு பந்து ஒரே பந்து, அதில் தேவை சிக்ஸ். ஆனால், அதில் கௌதமால் சிங்கிள் தான் தட்ட முடிந்தது. ராஜஸ்தான் ஓவர்த்ரோவில் விட்ட ஐந்து ரன்கள்தான் அந்த அணிக்கு எமனாக வந்து அமைந்தது. இறுதியாக 12 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானால் அடிக்க முடிந்தது. இரண்டு அணியும் சேர்ந்து 25 சிக்ஸர்கள் அடித்து மழைக்கே வேடிக்கை காட்டினர்.

#RRvDD

ஒன்பது போட்டிகளில் விளையாடி இருக்கும் டெல்லி, தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது. 'சின்னக்காலா இருந்தாலும் நல்லா இருக்குடா' என்பது போல் டீமின் நிலைதான் இப்படி. தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் ஆரஞ்ச் கேப் சொந்தக்காரர் ரிஷப் பன்ட் தான் (375 ரன்கள்).  அதேபோல், அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பர்ப்பிள் கேப் சொந்தக்காரரான பௌல்ட்டு இருவருமே டெல்லி தான் (13 விக்கெட்டுகள்)


டிரெண்டிங் @ விகடன்