வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (03/05/2018)

கடைசி தொடர்பு:19:20 (03/05/2018)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 போட்டி! - உலக லெவன் அணியில் தினேஷ் கார்த்திக், பாண்ட்யா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ள உலக லெவன் அணியில் இந்தியாவின் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தினேஷ் கர்த்திக், பாண்ட்யா

கரீபியன் தீவுக் கூட்டத்தில் கடந்த வருடம் 'இர்மா' மற்றும் மரியா புயலினால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் ஆண்டிகுவா, டோமினிகா உள்ளிட்ட 5 கிரிக்கெட் மைதானங்களும் அதிக சேதத்துக்குள்ளாகின. இந்த மைதானங்களைச் சீரமைக்க நிதி திரட்டுவதற்காக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ரெஸ்ட் ஆஃப் வேர்ல்ட் லெவன் (Rest of woreld XI) அணிகள் மோதும் டி20 போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 31-ம் தேதி நடைபெறும் அந்தப் போட்டியில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வெஸ்ட் இண்டீஸில் சேதமடைந்த மைதானங்கள் சீரமைக்கப்பட உள்ளன. இந்தப் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பரத்வைட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கிறிஸ் கெயில், ரஸல், சாமுவேல்ஸ் என முன்னணி வீரர்கள் அந்தப் போட்டியில் விளையாடவுள்ளனர்.   

அந்த அணியை எதிர்த்து ஆடும் உலக லெவன் அணிக்கு இங்கிலாந்தின் மார்கன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு தற்போது இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட மொத்தம் 9 வீரர்களின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக இங்கிலாந்து மைதானத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சாம்பின்ஸ் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பாண்ட்யா 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல், பாகிஸ்தானின் சோயப் மாலிக், ஷாகித் அஃப்ரிடி, இலங்கையின் திசாரா பெரேரா, ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் உலக லெவன் அணியில் உள்ளனர். அணியில் இணைய மேலும் பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் வீரர்களின் முழு பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.