வெளியிடப்பட்ட நேரம்: 00:29 (06/05/2018)

கடைசி தொடர்பு:00:43 (06/05/2018)

யூசப், ஹேல்ஸ் அதிரடியில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய ஹைதராபாத்!

ஐ.பி.எல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்று மீண்டும் முதலிடத்தைப் பெற்றது. 

Photo: Twitter/ipl

ஹைதராபாத் மைதானத்தில் இன்று ஹைதராபாத், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, மேக்ஸ்வெல் களமிறங்கினர். மேக்ஸ்வெல் இந்த முறையும் சொதப்பினார். 2 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்ரேயஸ் களமிறங்கினர். ஸ்ரேயஸ் ஐயர், பிரித்வி ஷா அதிரடியாக விளையாடினர். அதிலும் குறிப்பாக பிரித்வி ஷா சிக்ஸர், பவுண்டரிகள் என அடித்து நொறுக்கினார். இருவரும் அடித்து விளையாடும் போது ரன்கள் 200 -ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், ரஷித் கான் பிரித்வி ஷாவின் விக்கெட்டை எடுத்ததும், ஆட்டம் ஹைதராபாத் பக்கம் சென்றது. இறுதியில் விஜய் ஷங்கர் அதிரடியாக விளையாடினார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் சிறப்பாக விளையாடி 2 விக்கெட்டுகள் எடுத்தார். 

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹைதராபாத் அணி. அந்த அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ், தவான் சிறப்பான தொடக்கம் அளித்தனர். ஹேல்ஸ் 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 33 ரன்களின் ஆட்டமிழந்த பின்னர் அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது. இறுதி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவை என்ற நிலையில் கிறிஸ்டியன் பந்து வீசினார். இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்த யூசப், மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை எளிதாக்கினார். இறுதியில் 19.5 ஓவர்களில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ரஷித் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்தப் வெற்றியின் மூலம், 9 போட்டிகள் விளையாடிய ஹைதராபாத் அணி 7 வெற்றிகளுடன் மீண்டும் ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.