எட்டாவது ஓவரிலேயே ஆர்.சி.பி-யின் கதை முடிந்தது, எப்படி?! #CSKvsRCB | IT seems RCB can never win CSK

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (06/05/2018)

கடைசி தொடர்பு:13:55 (06/05/2018)

எட்டாவது ஓவரிலேயே ஆர்.சி.பி-யின் கதை முடிந்தது, எப்படி?! #CSKvsRCB

 

சென்றமுறை சொந்த புற்றிலேயே அடிவாங்கி ஓடிய ஆர்.சி.பி எனும் பாம்பு, `டேய், பாம்புக்கு பாயா போட்டாலும் சரி, பனியாரம் போட்டாலும் சரி, அது என்னைக்குமே பணியாது. இந்த பாம்பு பலநாள் தேக்கி வெச்சிருக்க விஷத்தை உன் மேல இந்தமுறை கக்கியே தீரும்' என வெறியோடு புனேவுக்கு ஃபிளைட் ஏறியது. ஃப்ளைட்டில் கூடவே ஏபிடி வில்லியர்ஸும் ஆரோக்கியமாய் ஏற, இன்னும் நம்பிக்கையுடன் சென்னையோடு களமாட கிளம்பிவந்தார்கள். முந்தைய போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவிய சென்னை அணியும், இந்தப் போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் வண்டியை வெற்றிப்பாதைக்கு திருப்பிவிட வேண்டுமென திடமாய் இருந்தது.  டேவிட் வில்லி மற்றும் துருவ் ஷோரியை கேப்டன் கூல் அணிக்குள் அழைத்தது ரசிகர்களுக்கு நிறைய புத்துணர்ச்சி ஊட்டினாலும், `இந்த மேட்ச்லேயும் ஜடேஜா ஆட்றாப்லயா, ஆத்தி' என கொஞ்சம் அதிர்ச்சியும் அடைந்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் ஜெயித்து, ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன் பிறகு நடந்தவை... #CSKvsRCB

#CSKvsRCB

`சோட்டா ஹைடன்' பார்த்தீவ் படேலும் பிரென்டன் மெக்கலும் ஆர்.சி.பி அணிக்கு ஓபன் செய்தனர். தனது முதல் ஐ.பி.எல் போட்டியை டாட் பாலோடு ஆரம்பித்தார் டேவிட் வில்லி. முதல் ஓவரின் கடைசி பந்தை, பேக்வார்ட் பாயிண்ட் மற்றும் ஷார்ட் தர்ட் மேனுக்கு இடையிலிருந்த கேப்பை பயன்படுத்தி பவுண்டரிக்கு தட்டிவிட்டார் மெக்கலம் - 5 (3). அடுத்த ஓவரிலேயே, இங்கிடியின் ஆஃப் கட்டரில் தாகூரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார். `எல்லா சீசன்லேயும் ஒரு நாலு மேட்ச் மட்டும் நல்லா அடிப்பார். அந்த நாலு மேட்ச்ல இந்த மேட்ச் இல்லை. ஈ சாலா கப்பும் நம்மளுதில்லை' என தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டார்கள் ஆர்.சி.பி.ரசிகர்கள். அதே ஓவரில் பார்த்தீவ் படேல், இரண்டு பவுண்டரிகளை விரட்டி கொஞ்சம் நம்பிக்கையளிக்க, `வந்துட்டார்யா சிங்கக்குட்டி, ஈ சாலா கப் நம்தே' என மறுபடியும் ஆரவாரமானர்கள். பார்த்தீவ் - கோலி பார்டனர்ஷிப்பில் அணிக்கு 38 ரன்கள் கிடைத்தது. அந்த நேரத்தில்தான் ஏழாவது ஓவரை வீச, ஜடேஜா வந்தார். போட்ட முதல் பந்திலேயே கேப்டன் கோலி - 8 (11) க்ளீன் போல்டு. அவுட்டான கோலியைவிட, அவுட்டாக்கிய ஜடேஜாதான் அதிகமாய் அதிர்ச்சியானார். மனிதரின் முகத்தில் சென்டிமீட்டர் சைஸ்கூட சிரிப்பில்லை. அதற்கடுத்த ஓவரிலேயே ஹர்பஜன் வீசிய பந்தைப் பிடித்து ஏபிடி வில்லியர்ஸை - 1 (4) ஸ்டம்பிங் செய்தார் தோனி. ஹர்பஜன் வீசிய ஆஃப் ஸ்பின்னை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போய் ஏபிடி மிஸ் செய்ய, அந்த வாய்ப்பை மிஸ் செய்யாமல் பெயில்களை மின்னல் வேகத்தில் தோனி தட்டிவிட்டார் . அடுத்தடுத்த ஓவர்களில் கோலியையும் ஏபிடியையும் இழந்து 8வது ஓவரிலேயே தவழ்ந்து கொண்டிருந்தது ஆர்.சி.பி.

#CSKvsRCB

ஒருபுறம் ரன்ரேட் குறைந்து கொண்டுபோக, மறுபுறம் மந்தீப் - 7 (13) மற்றும் பார்த்தீவ் - 53 (41) விக்கெட்டுகளை கழட்டிக் கொண்டிருந்தார் ஜடேஜா. எப்போதும் ஃப்ளாட்டாக `வ்ரூட் வ்ரூட்' என வீசும் ஜடேஜா, இந்த போட்டியில் பந்தைக் கொஞ்சம் தூக்கிப்போட்டு பேட்ஸ்மேன்களுக்கு அடித்தாட ஆசையைத் தூண்டினார். அதற்கேற்றார்போல் தோனியும் லாவகமாக ஃபீல்ட் செட் செய்ய, `ஒருத்தனை ஏமாத்தனும்னா அவனுக்கு ஆசையை தூண்டனும்' என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு சதுரங்கவேட்டை ஆடினார்கள் இருவரும். 'ஜடேஜா ஃபேன்டஸி லீக் விளையாடினால் அவரே அவரை டீம்ல எடுக்கமாட்டார், அவரை ஏன் தோனி ஒவ்வொரு மேட்ச்சிலும் ஆடவைக்கிறார்' எனும் பெரும் குழப்பத்துக்கு இன்று பதில் கிடைத்தது. ஆனால், எந்த விக்கெட்டிற்கும் துளியளவுகூட அவர் முகத்தில் புன்னகையில்லை, ஒருவித ஜென் நிலையிலேயே இருந்தார். அவரின் சுழலில் சிக்கிய ஆர்.சி.பி பிறகு மீளவேயில்லை. பார்த்தீவ், சவுதி எனும் இரண்டு வீரர்களை தவிர அணியில் யாருமே இரண்டு இலக்க ஸ்கோரை தொடவில்லை. சவுதியின் கடைசி நேர அதிரடியில் 127 எனும் ஓரளவு சுமாரான ஸ்கோரை எட்டியது ஆர்.சி.பி.

`127-தானே. இரண்டு பாயிண்ட் நமக்குத்தான்' என ஆசுவாசமானார்கள் சென்னை ரசிகர்கள். ஏதோ பத்து ஓவரிலேயே மேட்சை முடித்துவிட்டு செல்ல முடிவெடுத்தாற்போல், சவுதி வீசிய முதல் பந்தையே ஸ்வீப்பர் கவர் திசையைப் பார்த்து `பளார்'  என வைத்தார் வாட்சன். முதல் ஓவரில் ஒன்பது ரன்கள் எடுத்து இலக்கை நோக்கி முன்னேற ஆரம்பித்தது சி.எஸ்.கே. அதற்கடுத்த ஓவரிலேயே அதற்கு முட்டுக்கட்டைப் போட்டார் சாஹல். மெய்டன் ஓவர்! பவர் ப்ளேயில் ஒரு மெய்டன் ஓவர். அரங்கமே அரண்டுபோனது! மூன்றாவது ஓவரில் உமேஷ் வீசிய புயல்வேக யார்க்கருக்கு ஆஃப் ஸ்டெம்ப்பை காவு கொடுத்துவிட்டு கிளம்பினார் வாட்சன் - 11 (14). இரண்டாவது விக்கெட்டுக்கு, ராயுடுவும் ரெய்னாவும் இணைந்து 44 ரன்கள் சேர்த்தனர். சவுதி வீசிய ஆறாவது ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசி கெத்து காட்டினார் `ஆரஞ்சு கேப்' அம்பதி ராயுடு. ஒன்பதாவது ஓவரில் ரெய்னாவின் - 25 (21) விக்கெட்டையும் சாய்த்தார் உமேஷ். பவுண்டரி லைனில் வைத்து `ஆக்குபாக்கு வெத்தலைபாக்கு' கேட்ச் பிடித்து தாறுமாறு காட்டினார் சவுதி. பிறகு, அறிமுக வீரர் ஷோரி களமிறங்கினார். 

#CSKvsRCB

முருகன் அஸ்வின் வீசிய 12-வது ஓவர், ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை சென்னையின் பக்கம் பிரகாசமாய் டாலடித்துக் கொண்டிருந்த வெற்றி வாய்ப்பு, கொஞ்சமாய் டல்லடிக்க ஆரம்பித்தது. அஸ்வினின் ஓவரில் வெறும் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்து, அம்பதி ராயுடுவின் - 32 (25) விக்கெட்டையும் இழந்தது சி.எஸ்.கே. அதற்கடுத்த ஓவரிலேயே ஷோரியும் - 8 (9) கிராந்தோம் பந்தில் அவுட்டாக, `எங்கடா அந்த பிரஷ்ஷர் மாத்திரை' என சி.எஸ்.கே ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர். தோனியும் பிராவோவும் கட்டையைப் போட்டு, மேட்ச்சை உருட்ட ஆரம்பிக்க, மைதானத்தில் இருந்தவர்கள் தலையில் கைவைத்தார்கள். 17-வது ஓவரின் முடிவில் 18 பந்துகளுக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில், நிறைய நம்பிக்கையோடு பந்துபோட வந்த சாஹலை நொந்து போகவைத்தார் தோனி. சாஹல் போட்ட ஒரே ஓவரில் 22 ரன்களையும் அடித்து ( 3 சிக்ஸர்கள் அடக்கம் ) மேட்ச்சை முடித்து வைத்தார்கள்.  ஆட்டநாயகனாக 'ஜென் துறவி' ஜடேஜா ( 4 - 18 - 3) தேர்ந்தெடுக்கபட்டார். சி.எஸ்.கே முன்பு படமெடுத்து ஆடவேண்டுமென வந்த ஆர்.சி.பி, மறுபடியும் சி.எஸ்.கே காட்டிய படத்தில் ஆடிப்போனார்கள். இந்த சீசனில் கோலி ஆர்.சி.பி டீமை அல்ல, அவெஞ்சர்ஸ் டீமையே கூட்டிவந்து விளையாடினாலும் கப் அவருக்கில்லை என்பது தெள்ளத்தெளிவாய் தெரிகிறது. வெஞ்சன கின்னம் கூட கிடைக்காது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close