Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷார்ட் பால்களில் கொல்கத்தாவைச் சாய்த்த மும்பை இந்தியன்ஸ் #MIvKKR

அருமையான பேட்டிங் பிட்ச். 181 என்ற இலக்கை டிஃபண்ட் செய்ய வேண்டும். சுழல் பெரிதாக எடுபடாது. ஸ்பின்னர்களையே நம்பியிருக்கும் நைட்ரைடர்ஸுக்கே இந்த ஆடுகளம் பெரிய ஏமாற்றம்தான். இத்தனைக்கும் இந்தப் போட்டியில் ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும். என்ன செய்வது? ஒரு சிம்பிள் ஆயுதத்தைத்தான் மும்பை இந்தியன்ஸ் கையில் எடுத்தது - ஷார்ட் பால்! ஷார்ட் பால்களால் கொல்கத்தா அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, 16 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது ரோஹித் அண்ட் கோ. #MIvKKR

#MIvKKR

ரோஹித் அண்ட் கோ-வின் வின்னிங் மொமன்ட்ஸ்! -படங்கள்

ஃபீல்டிங்கின்போது இரண்டு ஓவர்கள் களத்திலிருந்து வெளியேறியிருந்ததால் சுனில் நரைன் ஓப்பனிங் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. கிறிஸ் லின் உடன் சுப்மான் கில் களமிறங்கினார். முதல் ஓவரில் இருந்தே அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள் மும்பை பௌலர்கள். மெக்லனகன் வீசிய முதல் ஓவரில் தொடர்ந்து 4 டாட் பால்கள் வைத்தார் லின். அடுத்த ஓவர் பும்ராவும் அதையே தொடர்ந்தார். ஆனால், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசியதால் அடுத்தடுத்து பௌண்டரிகள் கிடைத்தன.

அடுத்த ஓவர் மீண்டும் மெக்லனகன்... முதல் இரண்டு பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார் கில். 3-வது பால் - இடுப்பு உயரத்தில் ஒரு ஷார்ட் பால்... பௌண்டரி. நான்காவது பந்து - இடுப்புக்கு மேலே ஷார்ட் பால்... பௌண்டரி. கொஞ்சம் கூட அசரவில்லை மெக்லனகன். மீண்டும் ஷார்ட் பால். இந்த முறை மார்பளவு எழுந்தது. ஃபைன் லெக்கில் நின்ற பும்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் லின். ஹர்டிக் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அவசரப்பட்டு ஆடிய கில் வெளியேறினார். 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா.

இந்தப் போட்டிக்கு முன்பு ஹர்டிக் பாண்டியாவின் எகானமி 9.55. இதுவரை ரன்களை வாரி வழங்கிய அவரின் ஓவரில் நைட்ரைடர்ஸ் தடுமாறியதுதான் உச்சகட்டக் கொடுமை. சும்மாவே ஷார்ட் பால் மட்டுமே வீசும் ஹர்டிக், இன்று அனைவரும் அதையே பயன்படுத்தியதால் ஜாலியாகப் பந்துவீசினார். பவர்பிளேயிலேயே மெக்லனகனுக்கு 3-வது ஓவரைக் கொடுத்தார் ரோஹித். காரணம் - இந்த முறை டார்கெட் நித்திஷ் ராணா. பாயின்ட், பேக்வேர்ட் பாயின்ட் போன்ற திசையில் பௌண்டரி அடிப்பதால் ராணா கில்லி. அதைவைத்தே அவரைத் தூக்கத் திட்டமிட்டது மும்பை. பாயின்ட்டில் ஒரு ஃபீல்டர், பேக்வேர்ட் பாயின்ட்டில் ஒரு ஃபீல்டர், தேர்ட் மேனில் ஒருவர் என பக்காவாக ஃபீல்டிங் செட் செய்தார்கள். இப்படி ஃபீல்டிங் நிற்கவைத்து ஷார்ட் பாலாகப் போட்டுத் தள்ளினார் மிட்ச். ஆனால், அதிலும் ஒரு பந்தை 'அப்பர் கட்' மூலம் சிக்ஸராக்கி மாஸ் காட்டினார் ராணா. 

ஒரு கேட்ச் = 50 ரன்கள்
அடுத்த ஓவர் ஹர்டிக்... அதே ஸ்லோ ஷார்ட் பால்கள்தான். இரண்டாவது பந்தை (5.2-வது ஓவர்) உத்தப்பா சரியாக அடிக்காமல் போக, மிட் ஆன் திசையில் நின்றிருந்த மயாங்க் மார்கண்டே கையிலேயே விழுந்தது பந்து. ஆனால், அதை அவர் தவறவிட, தப்பித்தார் உத்தப்பா. அப்போது அவர் அடித்திருந்தது வெறும் 4 ரன்கள். 43 பந்துகள் கழித்து (12.3-வது ஓவர்) அதே மார்கண்டே பந்துவீச்சில் உத்தப்பா அவுட்டானபோது அவர் அடித்திருந்தது 54 ரன்கள். ஆம், இந்த இடைப்பட்ட 43 பந்துகளில்தான் ஆட்டத்தை நைட்ரைடர்ஸ் பக்கம் எடுத்துச் சென்றார் ராபின்!

#MIvKKR

முதல் 12 பந்துகளில் அவர் எடுத்திருந்தது 6 ரன்கள். குருனால் பாண்டியா பந்தில் நேராக ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு கியரை மாற்றினார் உத்தப்பா. மார்கண்டே வீசிய அடுத்த ஓவரில் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸர் அடித்து ஐபிஎல் வரலாற்றில் 6-வது வீரராக 4,000 ரன்களைக் கடந்தார். அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்க, மும்பையின் சிறந்த பௌலர் ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. அடுத்து பும்ரா, ஹர்டிக் ஓவர்களில் கொஞ்சம் அடக்கி வாசித்தவர், பென் கட்டிங் ஓவரில் தொடர்ந்து 4 பௌண்டரிகள் அடித்து அமர்க்களப்படுத்தினார். அடுத்த ஓவரில், கொஞ்சம் டைமிங் மிஸ்ஸான ஒரு ஷாட்டால், மார்கண்டேவுக்குப் பலியாகி வெளியேறினார். 

மும்பை கம்பேக்
அதுவரை கொல்கத்தாவின் கையிலிருந்த ஆட்டம் மெல்ல மும்பை பக்கம் திரும்பியது. 14-வது ஓவர், ஹர்டிக் - 5 ரன்கள், 1 விக்கெட் (நித்திஷ் ரானா - 31 ரன்கள்). 15-வது ஓவர் மெக்லனகன் - 4 ரன்கள். 16-வது ஓவர், மார்கண்டே - 6 ரன்கள். ஸ்பின்னர் மார்கண்டே உள்பட அனைவரும் ஷார்ட் பால்களாக வீச ரஸ்ஸல், கார்த்திக் இருவரும் ரன் சேர்க்கத் தடுமாறினார்கள். இடுப்பு, மார்பு உயரத்துக்கு எழுந்த பந்துகளை அவர்களால் சரியாகக் கணிக்க முடியவில்லை. டாட் பால்களின் எண்ணிக்கை அதிகமானது. தேவையான ரன்ரேட் அதிகமானது. 

#MIvKKR

17-வது ஓவரை வீசினார் பும்ரா. டெத் ஓவர்களில் தன் பெர்ஃபெக்ட் யார்கர்களால் மிரட்டக்கூடியவரான பும்ரா, ஒரு யார்க்கர் கூட முயற்சி செய்யவில்லை. ஷார்ட் பால்கள்தான். முதல் 3 பந்துகளில் 3 ரன்கள். அடுத்த பந்தில், டாப் எட்ஜாகி அவுட்டானார் ரசல். 20 பந்துகளில் 51 ரன்கள் தேவை. அடுத்த இரண்டு பந்துகளையும் ஃபுல் லெந்த்தில் வீச, நைட்ரைடர்சுக்கு 8 ரன்கள் கிடைத்தது. 18-க்கு 43 தேவை. ஹர்டிக், பும்ரா ஆகியோருக்கு தலா 1 ஓவர்தான் இருக்கிறது. கட்டிங் மோசமாகப் பந்துவீசியதால் அவருக்கு ஓவர் கொடுப்பது ஆபத்து. மிச்சம் இருப்பது இரண்டு ஸ்பின்னர்கள். அவர்களுள் ஒருவருக்கு 1 ஓவர் கொடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலை.

பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் பல கேப்டன்கள் அந்த 3-வது பந்துவீச்சாளரையே அப்போது பயன்படுத்துவார்கள். ஆனால், ரோஹித் அப்படிச் செய்யவில்லை. ஹர்டிக், பும்ரா இருவருக்கும் அடுத்தடுத்து ஓவர் கொடுத்தார். இரண்டு ஓவர்களிலும் சேர்த்து 20 ரன்கள்தான். 6 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது கே.கே.ஆர். இப்போது குருனால் கையில் பந்தைக் கொடுத்தார் ரோஹித். ஒன்பதே ரன்கள், 1 விக்கெட்... கூலாக ஆட்டத்தை முடித்துவைத்தார். 16 ரன்களில் வெற்றி பெற்றது மும்பை.

#MIvKKR

ரோஹித் அண்ட் கோ-வின் வின்னிங் மொமன்ட்ஸ்! -படங்கள்

மும்பை பயன்படுத்திய இந்த யுக்தியைக் கையாண்டிருந்தால் கொல்கத்தா அணி 180 ரன்கள் விட்டுக்கொடுத்திருக்காது. ஸ்பின்னர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் டி.கே பவர்பிளேவிலேயே 5 பௌலர்களைப் பயன்படுத்தினார். ரோஹித் 6 ஓவர்களுக்கு மட்டுமே ஸ்பின் பயன்படுத்தினார். ஆனால், கார்த்திக் 11 ஓவர்கள் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தினார். அதைப் பயன்படுத்திய ஓப்பனர்கள் ஈவின் லூயிஸ், சூர்யகுமார் யாதவ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய சூர்யா 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். 

பந்துவீச்சில் கலக்குவதற்கு முன்பே பேட்டிங்கிலும் ஒரு கலக்கு கலக்கியிருந்தார் ஹர்டிக். 4 பௌண்டரி, 1 சிக்ஸர் உள்பட 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 4 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து ஆல்ரவுண்டராக அசத்தியதால் ஆட்டநாயகன் விருதும் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 8 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement