Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுழலில் சுருட்டிய பஞ்சாப் புயல்... ராங் ரூட்டிலேயே பயணிக்கும் ராயல்ஸ்! #KXIPvRR

ஒரு பெரிய வெக்கேஷனுக்குப் பின் கடந்த வெள்ளிக்கிழமைதான் திரும்ப ஐ.பி.எல்லில் களமிறங்கியது பஞ்சாப். எண்ணெய்க்குளியல், வெரைட்டி சாப்பாடு எல்லாம் வெளுத்துக்கட்டிவிட்டு புத்துணர்ச்சியோடு களமிறங்கினாலும் வெற்றி என்னவோ அந்த ஆட்டத்தில் மும்பைக்குத்தான். அதனால் நேற்று நடந்த ஆட்டத்தில் வென்றால் கிடைக்கும் இரண்டு புள்ளிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இன்னும் நெருக்கமாக்கும் என்ற நெருக்கடியை சுமந்துதான் களமிறங்கியது. மறுபக்கமோ, கடைசி நான்கு இடங்களில் இருக்கும் டீம்கள் அனைத்தும் மாறி மாறி தொட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றன. கடைசி இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் லாங் ஜம்ப்பில் முன்னேற நேற்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயம். இப்படி சூழ்நிலையில்தான் சுண்டிவிடப்பட்டது டாஸ் காயின்.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி வழக்கம்போல பீல்டிங்கையே தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் ஓபனர்களாக பட்லரும் டார்சி ஷார்ட்டும் களமிறங்கினார்கள். தொடர் ஆரம்பிக்கும் முன் 'அவர் அடிச்சா பந்து பறக்காது, கிழியும்' என்றெல்லாம் பில்டப் தரப்பட்ட டார்சி ஷார்ட் வழக்கம்போல இந்த மேட்சிலும் பொசுக்கென முதல் ஓவரிலேயே அவுட்டானார். ஒன்டவுனில் இறங்கினார் ரஹானே. ஆனாலும் அவருக்கு வேலையே வைக்காமல் அடித்து ஆடினார் பட்லர். 'எப்பா நீயே ஆடுறதுன்னா அப்புறம் நான் என்னத்துக்கு இங்க' என நினைத்தாரோ என்னவோ, அக்சர் படேல் பாலில் கெயிலிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார் ரஹானே. கெயில் குனிந்து பந்தை எடுப்பதைப் பார்ப்பதே அதிசயம். இதில் படுத்துப் பந்தை பிடித்ததெல்லாம் 'வாவ்'! அதுக்காகவே ஹைலைட்ஸ் பாருங்க பாஸ்!

பஞ்சாப்

இரண்டு பெரிய விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்ததால், கட்டாயம் ஒரு பார்ட்னர்ஷிப் தேவையாக இருந்தது ராஜஸ்தானுக்கு. வந்தார் மேஜிக் சாம்சன். இருவரும் மெதுவாக ஸ்கோரை உயர்த்தினார்கள். 11 ஓவர்களுக்கு 84 ரன்கள் என்பது கவுரவமான நிலைதான். ஆனால் தன் வீக்னஸான ஷார்ட் பாலை லெக் சைடில் இழுத்தடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்துக் கிளம்பினார் சாம்சன். களத்தில் இறங்கினார் 'பதினோரு கோடிப்பே' புகழ் பென் ஸ்டோக்ஸ். வந்ததுக்கு இரண்டு பவுண்டரிகள் அடித்துவிட்டு இளம்புயல் முஜீப் ரஹ்மானின் பந்தையும் தூக்கியடித்தார். கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தால் சிக்ஸ். பந்தை பவுண்டரி லைன் அருகே பிடித்த அகர்வால் பேலன்ஸ் தடுமாறுவதை உணர்ந்து கடைசி நிமிடத்தில் லாங் ஆனில் நின்றிருந்த மனோஜ் திவாரியிடம் எறிய, 'இணைந்த கைகள்' ராம்கி அலெக்ஸ்பாண்டியன் போல அவுட்டாக்கினார்கள் ஸ்டோக்ஸை!

பஞ்சாப்

ஒத்தையாக நின்று ஒருமணிநேரமாக வெள்ளையடித்துக்கொண்டிருந்த பட்லரையும் தன் அடுத்த ஓவரின் முதல் பாலில் வெளியேற்றினார் முஜீப். ஆட்டத்தின் டர்னிங் பாயின்ட் இதுதான். 'யூத்துக்கு யூத்து' என எதிர்பார்க்கப்பட்ட ஆர்ச்சரோ அடுத்த பாலிலேயே கோல்டன் டக். அதன்பின் ஓவருக்கு ஒரு விக்கெட் என விழ, ஒன்பதாவது ஆளாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் கோபால் மட்டும் 24 ரன்கள் அடித்து 20 ஓவர்களில் 152 ரன்கள் என்ற கவுரவமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தினார். இளம்புயல் முஜீப் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று மெயின் விக்கெட்களை சாய்த்திருந்தார்.

பஞ்சாப் அணியின் பிரச்னையே அதன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதுதான். ஓபனர்களாக களமிறங்கும் ராகுலும் கெயிலும் அதிரடி காட்டி முதலிலேயே ஸ்கோரை உயர்த்தினால்தான் பஞ்சாப் வண்டி ஸ்டெடியாக ஓடுகிறது. ஆனால், நேற்றோ, 'அதான் டைவ் எல்லாம் அடிச்சு கேட்ச் பிடிச்சேன்ல, ரன்னும் அடிக்க சொன்னா எப்படிப்பா? காலு வேற நோவுது' என்ற ரீதியில் சாம்சன் கைக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார் கெயில். பாவம் பிடித்த சாம்சனுக்கு கை செக்கச் சிவந்த வானம் போலாகியிருக்கும். 'ஒன் டவுனும் மிடில் ஆர்டர்லதான வரும்? அப்புறம் அவுட்டாகாம எப்படி?' என அதற்கடுத்த ஓவரில் வெளியேறினார் மயாங் அகர்வால். 

கிட்டத்தட்ட ராஜஸ்தானுக்கு நடந்த அதே கதி! அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள். பார்ட்னர்ஷிப் அவசியம். பொறுப்புணர்ந்து கருண் நாயரும் ராகுலும் நிதானமாக ஸ்கோரை உயர்த்தினார்கள். 10 ஓவர்கள் முடிவில் 68 ரன்கள்தான். அதற்கடுத்த ஓவரில் கருண் நாயரும் அவுட்! ஆனாலும் பதட்டமில்லாமல் பொறுமையாக சில க்ளாஸிக் ஷாட்கள் ஆடினார் ராகுல். நாயருக்குப் பின் இறங்கிய அக்‌ஷரும் 4 ரன்களில் அவுட். 13 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிறகு 87 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். மிட் ஓவர்கள் முழுக்க ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தார்கள் ராஜஸ்தான் அணியின் பவுலர்களும் பீல்டர்களும். ஆனால் ஐ.பி.எல்லின் விதியே ஸ்லாக் ஓவர்களில் நடக்கும் எகிடுதகிடு மாற்றங்கள்தானே!

பஞ்சாப்

கடைசி ஐந்து ஓவர்களில் 51 ரன்கள் தேவை. முதல் ஓவரில் வெறும் எட்டு ரன்கள்தான். 'ம்ஹூம் இது சரிப்படாது' என மாணிக்கமாக இருந்த ராகுல் மாணிக் பாட்ஷாவாக மாறினார். 17-வது ஓவரில் 16 ரன்கள், 18-வது ஓவரில் 15 ரன்கள், 19-வது ஓவரில்... இன்னும் என்னத்த பார்த்துகிட்டு? மேட்ச் முடிஞ்சது பாஸ்! 54 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார் ராகுல். மேன் ஆஃப் தி மேட்ச் விருது சுழலில் சுருட்டிய முஜிப் ரஹ்மானுக்குத் தரப்பட்டது.

ஐ.பி.எல்லில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. கம்பேக் சீசன் என்பதைத் தாண்டி, சாம்சன், உனட்கட், த்ரிபாதி, ஸ்ரேயாஸ் கோபால், கெளதம், ஷார்ட், ஆர்ச்சர் என முழுக்க முழுக்க இளம் வீரர்கள் என்பதால் வந்த ஹைப் அது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமுடியாமல் தத்தளிக்கிறார்கள் அவர்கள். அதிலும் சீசனின் காஸ்ட்லி பிளேயர்களான ஸ்டோக்ஸும் உனட்கட்டும் இன்னும் ஒரு மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸ் கூட தரவில்லை. மறுபக்கம், கிடைத்தவரை லாபம் என ஏலத்தில் எடுக்கப்பட்ட கெயிலும் முஜிப் ரஹ்மானும் பஞ்சாபுக்கு ஏகப்பட்ட ஆட்டங்களை வென்று கொடுத்துவிட்டார்கள். ஐ.பி.எல்லின் டிசைன் இதுதான்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement