வெளியிடப்பட்ட நேரம்: 00:01 (09/05/2018)

கடைசி தொடர்பு:00:02 (09/05/2018)

தனி ஒருவனாகப் போராடிய ராகுல்! புள்ளி பட்டியலில் முன்னேறிய ராஜஸ்தான்!#RRvKXIP

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ராஜஸ்தான்

Photo: Twitter/ipl

ஐ.பி.எல் தொடரில் இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய பட்லர் அதிரடியாக விளையாடினார். முன் வரிசை ஆட்டகாரர்கள் ரஹானே(9) மற்றும் கவுதம்(8) துவக்கத்திலே ஆட்டமிழக்க, பட்லர் சாம்சனுடன் இணைந்தார். பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ஒரு கட்டத்தில் 200 ரன்கள் எடுக்கும் என்றே தோன்றியது. ஆனால், 82 ரன்னில் பட்லர் ஆட்டமிழந்ததும், ராஜஸ்தான் அணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தினர் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு  158 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் டை சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்குத் தொடக்கமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.   கிரிஸ் கெயில் 1 ரன்னில் ஆட்டமிழக்க, மூன்றாவதாகக் களமிறங்கினார் அஷ்வின். அதே ஓவரில் அவரும் டக் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய கருண் நாயர்(3), அக்‌ஷ்தீப் நாத்(9), மனோஜ் திவாரி(7), அக்‌ஷர் படேல்(9) என அனைவரும் ஒற்றை இலக்குடன் திரும்பினர். ஒருபுறம் விக்கெட்டுகள் இழந்தாலும் நம்பிக்கையுடன் போராடினார் ராகுல். இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடினாலும், அவரால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. 

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 70 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். ராகுல் மற்றும் ஸ்டோனிஸ்(11) மட்டுமே இரட்டை இலக்கு ரன்னை தொட்டனர்.  ராஜஸ்தான் சார்பில், கவுதம் 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஆட்டநாயகனாக பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த வெற்றியின் மூலம், கடைசி இடத்தில் இருந்த ராஜஸ்தான் தற்போது 6 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அதே 3 வது இடத்தில் நீடிக்கிறது.