`ஜாவ்லின் த்ரோ’ நீரஜ் சோப்ரா... டோக்கியோ ஒலிம்பிக்கின் நம்பிக்கை நாயகன்!

``ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்காக முதல் தங்கப்பதக்கத்தை இந்தச் சிறுவன் பெற்றுத்தருவான். இவன்தான்  இந்தியாவின் புதிய ஹீரோ" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா பூனியா. ``நீரஜ், என்னைவிட மிகச் சிறப்பான இடத்தைப் பிடிப்பார். அவரின் வளர்ச்சி அபரிமிதமானது" என்று பிரமித்துள்ளார் உலக ஈட்டி எறிதல் சாம்பியன் வெட்டர். நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதலில் தொடர்ந்து சாதித்துவரும் இளம் இந்திய வீரர், ஒலிம்பிக் அரங்கில் இந்தியா வெல்லும் முதல் தடகளப் பதக்கத்துக்கான உத்தரவாதம்.

நீரஜ் சோப்ரா

மே 4-ம் தேதி தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் தனது இரண்டாவது வாய்ப்பில்  87.43 மீட்டர் தூரம் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்ததுடன் தேசிய சாதனையையும் படைத்துள்ளார். அந்த பர்ஃபாமன்ஸைப் பார்த்துதான், போட்டி முடிந்ததுமே அவரைப் பாராட்டினார் தங்கம் வென்ற வெட்டர். யார் இந்த ரைசிங் ஸ்டார் நீரஜ் சோப்ரா?

1997-ம் ஆண்டு ஹரியானாவில் உள்ள பானிபட் மாவட்டத்தின் காந்த்ரா கிராமத்தில் பிறந்தார் நீரஜ் சோப்ரா. இவரின் தந்தை ஒரு விவசாயி. சிறுவயதில் கிரிக்கெட்டின் மீது மிகுந்த நாட்டம்கொண்டவராக இருந்தார். ஒருகட்டத்தில் தன்னுடைய திறன் ஈட்டி எறிதலில் பிரகாசமாக உள்ளது என்பதை உணர்ந்த அவர், அந்த விளையாட்டில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்.  பிறகு, இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்ந்து பயிற்சிபெற்றார்.

2015-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்  போட்டியில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா, 68.4 மீட்டர் தூரம் எறிந்து, இளையோருக்கான தேசிய சாதனையைப் படைத்தார். 2016-ம் ஆண்டில் போலாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டியில் பங்கேற்ற அவர், 86.48 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரம் அதிகமாக வீசும் அளவுக்கு முன்னேறினார் நீரஜ்.

நீரஜ்

2016-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய தடகளப் போட்டியில் 82.23 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்ற அவர், அடுத்த ஆண்டே இந்தியாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தங்கம் வென்று தனது வேட்டையைத் தொடர்ந்தார். அடுத்தடுத்து வெற்றி கண்ட நீரஜ் சோப்ரா, கடந்த  ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெற்ற உலக சாமியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறத் தவறினார்.

தான் செய்த தவறுகளை உடனே திருத்திக்கொண்ட அவர், அடுத்து நடைபெற்ற பாட்டியாலா சாம்பியன்ஷிப் போட்டியில் 85.94 மீட்டர் வீசி, மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்டார். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் க்ளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 86.47 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் இந்திய தடகள விளையாட்டில் புது நட்சத்திரமாக நீரஜ் சோப்ரா திகழ்கிறார் 

காமன்வெல்த் போட்டியை அடுத்து, கடந்த வாரம்  துபாயின் தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தனது ரோல்மாடலாக அவர் எண்ணிய  தாமஸ் ரோஹல்லேர், ஜோஹன்னஸ் வெட்டேர், ஹாஃப்மண் போன்ற ஜாம்பவான் வீரர்களுடன் போட்டியிட நேர்ந்தது. தனது சிறு வயதில் இவர்களின் ஈட்டி எறிதல் வீடியோவைக் கண்டே தான்  பயிற்சிபெற்றதாக நீரஜ் கூறியுள்ளார்.

நீரஜ்

தனது ரோல்மாடல்களுடன் போட்டியிட்ட நீரஜ், தனது இரண்டாவது வாய்ப்பில் 87.43 மீட்டர் தூரம் வீசி தேசிய சாதனையை முறியடித்தார். இதன் மூலம் இந்தத் தொடரில் 4-வது இடத்தைப் பிடித்தார். 20 வயதே நிரம்பிய நீரஜ் சோப்ராவின் திறமையைக் கண்ட சகவீரர்கள், அவரை வெகுவாக பாராட்டினார். சோப்ராவுக்கு ஒளிமயமான எதிர்காலாம் இருப்பதாகவும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்.

கலந்துகொள்ளும் ஒவ்வொரு போட்டியிலும் சாதனை படைத்ததுவரும் நீரஜ் சோப்ரா, அடுத்து ஜகார்த்தாவில் நடைபெற உள்ள ஆசிய போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ``பெரிய போட்டிகளில் கலந்துகொள்ளும்போது போட்டி கடுமையாக இருக்கும். தொடர்ந்து 90 மீட்டர் தூரம் வீச வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காக எனது உத்தியில் சிறிது மாற்றம் செய்ய உள்ளேன். மேலும் எனது உடலிலும் சிறிது கவனம் செலுத்தவேண்டியுள்ளது. சிறப்பாகச் செயல்படுவேன் என நம்புகிறேன்" என்றார். 

இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டி தடகளத்தில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற பல்லாண்டு கனவை, இளம் வீரர் நீரஜ் சோப்ரா தீர்த்துவைப்பார் என்பதே முன்னாள் மற்றும் சகவீரர்களின் கருத்து.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!