கோலி திணறுகிறார்... தோனி பதுங்குகிறார்... முஜீப் நிகழ்த்தும் மாயாஜாலம்! | Magical spinner Mujeeb ur Rahman KXIP's trump card

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (09/05/2018)

கடைசி தொடர்பு:12:53 (09/05/2018)

கோலி திணறுகிறார்... தோனி பதுங்குகிறார்... முஜீப் நிகழ்த்தும் மாயாஜாலம்!

கோலி திணறுகிறார்... தோனி பதுங்குகிறார்... முஜீப் நிகழ்த்தும் மாயாஜாலம்!

ப்கானிஸ்தானில் இருந்து வந்து ஒருவன் இந்தியாவுக்கு சுழற்பந்து சொல்லிக்கொடுப்பான் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பெயருக்குத்தான் லெக் ஸ்பின்னர். கூக்ளி, கேரம் பால், ஆஃப் ஸ்பின் என சுழற்பந்தின் 360 டிகிரியிலும் பந்துவீசுகிறான் இந்த 17 வயது பொடியன் முஜீப் உர் ரஹ்மான்!

முஜீப்

மூன்று ஆண்டுகளுக்கு முன், ஐபிஎல் தொடரின் ஆகச்சிறந்த பௌலர்களாக, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவர் இருப்பார்கள் என யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருப்போமா? ரஷித் கானும், முஜீப் உர் ரஹ்மானும் அப்படித்தான் இருக்கிறார்கள் என ட்வீட் செய்திருந்தார் ஹர்ஷா போக்ளே. உண்மையில் யாருமே கணிக்காத ஒரு விஷயம் இது. 2018 ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்சேஷன் இந்த முஜீப் உர் ரஹ்மான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் இவர், இதுவரையிலான 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். பெரும்பாலானோர் மணிக்கட்டைப் பயன்படுத்திதான் கூக்ளி வீசுவார்கள். ஆனால், முஜீப் விரல்களில் பவர் கொடுத்து கூக்ளி வீசுகிறார். லெக் ஸ்பின் என்பது (வலது கை பேட்ஸ்மேனுக்கு) ஸ்டம்புகளுக்கு நேராக பிட்ச்சாகி வெளியே செல்வது. ஆனால், ஸ்டம்புகளுக்கு நேராக பிட்ச்சாகி வெளியேபோவது போல இருந்து, அது ஸ்டம்ப்பை நோக்கி திரும்பினால் அது கூக்ளி. 17 ஆயிரம் ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலியால் கூட முஜீப்பின் கூக்ளியை கணிக்க முடியவில்லை. பிட்ச்சில் பட்டு ஸ்டம்ப்பைவிட்டு வெளியேபோகும் என கோலி நினைக்க, நேராக உள்ளே வந்து மிடில் ஸ்டம்ப்பை வீழ்த்தியது அந்த பந்து. முஜீப் நிகழ்த்திய மேஜிக் அது. 

யூடியூப் கற்றுத்தந்த சுழல் வித்தை!

5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் முஜீப் கிரிக்கெட்டே ஆட ஆரம்பித்தார் என்றால் நம்ப முடியுமா? `யூடியூப்பில் அஷ்வின், சுனில் நரேன், அஜந்தா மென்டீஸ் பெளலிங்கைப் பார்த்துதான் கேரம் பால் போடக்கற்றுக்கொண்டேன்’ என்கிறார் முஜீப். விரல்களால் கிரிக்கெட் பந்தை ஃப்ளிக் செய்யவேண்டுமென்றால் அதற்கு விரல்களில் அதீத பவர் வேண்டும். பல மணி நேர இடைவிடா பயிற்சி வேண்டும். இரண்டையும் கச்சிதமாக செய்ததால்தான் உலக அரங்கில் வந்து மிரட்டலாக நிற்கிறார் முஜீப்!

முஜீப்

முஜீப் மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தவர். ஆனால், செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் வறுமைக்கும் முஜீப்புக்கும் சம்பந்தம் இல்லை. ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரத்தில் பல நூறு ஏக்கர் நிலம் முஜிபின் தாய்க்கு சொந்தமானது. இந்த இடத்தில்தான் முஜீப்பின் மாமா மகன் நூர் அலி ஸ்ர்தான் கிரிக்கெட் விளையாடப் பயிற்சி எடுக்கிறார். இவர்தான் இப்போது ஆப்கானிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். முஜீபைவிட 12 வயது மூத்தவரான ஸர்தானோடு சேர்ந்து முஜீப்பும் வீட்டுக்குள்ளேயே விளையாட ஆரம்பிக்கிறார். அப்படித்தான் முஜீபுக்கு கிரிக்கெட் அறிமுகமாகிறது.

டேப் பாலில்தான் பயிற்சி. டேப் பால் என்பது டென்னிஸ் பாலில் எலெக்ட்ரிக்கல் டேப்பை சுற்றி விளையாடுவது. இப்படி டேப்பை சுற்றுவதால் டென்னிஸ் பாலின் எடை அதிகமாகும். இதனால் பந்தில் வேரியேஷன்ஸ் அதிகரிக்கும். பந்து வேகமாகப் பறக்கும். இந்தப் பந்தில் விளையாடி உருவானவர்கள்தான் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள். அப்படித்தான் டேப் பாலில் விளையாட ஆரம்பிக்கிறார் முஜீப். 

இனிமேலாவது படி... இனிமேல்தான் கிரிக்கெட்!

ஆப்கானிஸ்தானில் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணித் தேர்வு நடக்கிறது. 13 வயதான முஜீப் கலந்துகொள்கிறார். விளையாட ஆரம்பித்து ஓராண்டே ஆன முஜீப்புக்கு இடம்கிடைக்கவில்லை. ''இனிமேலாவது படிப்பில் கவனம் செலுத்து'' என்கிறார் முஜீப்பின் அம்மா. `இனிமேல்தான் கிரிக்கெட்டில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்’ என்று முடிவெடுக்கிறார் முஜீப். 

ஆப்கானிஸ்தானின் தேசிய அணிக்குப் பயிற்சி ஆட்டத்தில் பந்துவீச முஜீப்புக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பயிற்சி ஆட்டத்தில் நாட்டின் சீனியர் வீரர்கள் 6 பேரின் விக்கெட்டை சாய்க்கிறார் முஜீப். அவரின் ஸ்பின் வேரியன்ஷன்களை ரீட் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். இப்படித்தான் சீனியர் வீரர்களின் கவனம் ஈர்க்கிறார். ஆப்கானிஸ்தானின் அண்டர் - 19 அணியில் இடம்பிடிக்கிறார்.

அண்டர் 19 அணி வங்கதேசம் செல்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைகிறது ஆப்கானிஸ்தான். ''எல்லா போட்டிகளிலுமே ஆப்கானிஸ்தான் எங்களிடம் தோல்வியடையும். இது  வாஷ் அவுட் சீரிஸாக இருக்கும்'' என முதல் வெற்றி தந்த மிதப்பில் பேசுகிறார் வங்கதேச அணியின் கேப்டன். ஆனால், ஒரு போட்டி மழையால் ரத்தாக மூன்று போட்டிகளிலுமே ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைகிறது வங்கதேசம். 3-1 என கோப்பையை வெல்கிறது ஆப்கானிஸ்தான். 4 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைப் பறிக்கிறார் முஜீப். அடுத்ததாக ஆசிய கோப்பை அண்டர் -19 போட்டியில் விளையாடுகிறது ஆப்கானிஸ்தான். 20 விக்கெட்டுகள் எடுக்கிறார் முஜீப். இங்கேயும் ஆப்கானிஸ்தான்தான் சாம்பியன்!

ஆப்கானிஸ்தானின் தேசிய அணியில் இடம்பிடிக்கிறார் முஜீப். அயர்லாந்துக்கு எதிராக ஆடும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி. முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்து `ப்ளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருது வெல்கிறார் முஜீப். எந்தப் பதற்றமும் பரபரப்பும் அவரிடம் இல்லை. பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு வேரியஷனுடன் வந்துவிழுகிறது. வங்கதேச 20/20 கிரிக்கெட்டில் விளையாடுகிறார். ஐபிஎல் வாய்ப்பு காத்திருக்கிறது

50 லட்சம் டு 4 கோடி!

ஐபிஎல் ஏலத்தில் முஜீப் உர் ரஹ்மானுக்கு 50 லட்சம் ரூபாயை அடிப்படை விலையாக அறிவிக்கிறார் ஏலத்தை நடத்திய ரிச்சர்ட். டெல்லியும், பஞ்சாபும் மாறிமாறி முஜீப்பை தங்கள் அணியில் எடுக்க விலையை ஏற்றிக்கொண்டே போகிறார்கள். விட்டுக்கொடுக்கவே இல்லை ப்ரீத்தி ஜிந்தா. 8 மடங்கு விலை உயர்ந்து 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார் ப்ரீத்தி ஜிந்தா. 

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியிருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அணியின் கேப்டனும் இந்தியாவின் முன்னணி ஸ்பின்னருமான அஷ்வினே, சுழற்பந்தில் முஜீப்பைதான் நம்பிக்கொண்டிருக்கிறார். இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 9 போட்டிகளில் முழுமையாக நான்கு ஓவர்கள் வீசியிருக்கிறார் முஜீப். சராசரியாக ஒரு போட்டியில், தான் வீசும் 24 பந்துகளில் 10 டாட் பால்கள் வீசுகிறார் முஜீப். எக்ஸ்ட்ராக்கள் குறைவு. பஞ்சாப் இறுதிப்போட்டிவரை விளையாடினால் முஜீப்தான் இந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருப்பார்.

ஆங்கிலம் தெரியாது. இந்தி, உருதும் தெரியாது. தெரிந்த ஒரே மொழி பாஷ்டோ (Pashto) மட்டுமே. அதனால் விமானப் பயணங்களில் காதில் ஹெட்போனை மாட்டுக்கொண்டு அமைதியாகப் பயணிக்கிறார். இவரின் ரோல் மாடல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் ஆப்கானிஸ்தானின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.

முஜீப்

டெல்லி டேர்டெவில்ஸ் உடன் இரண்டாவது ஆட்டத்தில் ஆடுகிறது பஞ்சாப். வெற்றிபெற்றேயாக வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறது டெல்லி. பஞ்சாப் கேப்டன் அஷ்வின் தன்னுடைய 4 ஓவர்களையும் முதலில் முடித்துவிட்டு டெத் ஓவர்களில் முஜீப்பை இறக்குகிறார். கடைசி ஓவர். ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்கிறார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவை. பந்துவீச வருகிறார் முஜீப். முதல் பந்து டாட் பால். அடுத்தப் பந்தில் சிக்ஸர் விளாசுகிறார் ஷ்ரேயாஸ். முஜீபின் முகத்தில் எந்த பதற்றமும் இல்லை. மூன்றாவது பால் மீண்டும் டாட் பால். ஒரு ரன் ஓடியிருக்கலாம். ஆனால், இந்த ஓவரில் இன்னும் மூன்று பந்துகளில் 11 ரன்கள் அடித்துவிடுவேன் என நம்பிக்கையுடன் நிற்கிறார் ஐயர். அடுத்த இரண்டு பந்துகளில் 2 ரன், ஒரு பவுண்டரி அடிக்கிறார் ஷ்ரேயாஸ். கடைசி பந்தில் கேட்சாகி ஷ்ரேயாஸ் ஐயர் அவுட். பஞ்சாபை வெற்றிபெறவைக்கிறார் முஜீப். 

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாபின் எல்லா பவுலர்களையுமே வெளுத்தார் தோனி. ஆனால், முஜீபின் ஓவர்களில் சிங்கிள் எடுக்க முயன்றாரே தவிர அடித்து ஆடவில்லை. தன்னுடைய அனுபவத்தால் முஜீபின் பந்துகளை ரீட் செய்வது கடினம் என பதுங்கி ஆடினார் தோனி. அடித்து ஆட முயற்சி செய்த கோலி அவுட் ஆனார்.

`21-ம் நூற்றாண்டின் முதல் கிரிக்கெட்டர்’ என முஜீப்பை கொண்டாடுகிறது கிரிக்கெட் உலகம். ஆமாம், இவன் ஜென் ஸீ தலைமுறையின் வீரன். பயம், பதற்றம், தடுமாற்றம் என எதுவுமே இந்த இளைஞனிடம் இல்லை. கோலியாக இருந்தாலும் சரி, அது தோனியாக இருந்தாலும் சரி... இந்த இளைஞன் யாராக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்கிறான்... வீழ்த்துகிறான்... இனி கிரிக்கெட் முஜீப்களால் முன்னேறும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்