Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`நீங்க எதுக்கு பாஸ் ஒன் டவுன் இறங்குனீங்க?' - அஷ்வின் பரிதாபங்கள் #RRvKXIP

இரண்டு நாள்களுக்கு முன்னர்தான், பஞ்சாப்பும் , ராஜஸ்தானும் `டர்பன் பாய்ஸ்' இடத்தில் மோதிக்கொண்டன. அதில் ராஜஸ்தானின் பட்லரும்  (51) , பஞ்சாபின் ராகுலும் (84) அரைசதம் அடித்தனர். இறுதியாக பஞ்சாப் அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று ராஜஸ்தான் முதல் பேட் செய்தது. இந்த இரண்டு நபர்கள் மட்டுமே அரைசதம் கடந்தனர். ஆனால், வென்றது ராஜஸ்தான் அணி. அவ்வளவு தான் வித்தியாசம். #RRvKXIP

#RRvkXIP

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். `அப்பாடா , டாஸ் தோற்கணும்னுதான் இருந்தேன் " என்றார் அஷ்வின். டாஸ் மட்டும் தானா அஷ்வின். ஏன் ? எதற்கு ? எப்படி ? என எந்தக் கேள்விக்கும் பதில் இல்லாமல், டீமில் நன்றாக மயாங்க் அகர்வாலையும், அன்கித் ராஜ்புட்டையும் தூக்கிவிட்டு, அக்ஷ்தீப் நாத், மோஹித் ஷர்மாவைக் களமிறக்கினார். 
`தங்க மோதிரம் போட்டாத்தான் தலைக்கு எண்ணெய் வைப்பேன் `மோடில் பட்லர் இருந்தாரோ என்றுதான் தோன்றுகிறது. மிடில் ஆர்டரில் ஒன்றுமே செய்யாமல், ஸ்டோக்ஸ் போல அவுட்டாகிக்கொண்டிருந்த பட்லர், ஓப்பனிங் இறங்கியதிலிருந்து அதிரடி செய்கிறார். டெல்லிக்கு எதிராக 67. பஞ்சாப்புக்கு எதிராக 51 என அடித்தவர், நேற்றைய போட்டியிலும் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்துக் கணக்கைத் தொடங்கினார். ஆண்ட்ரூ டை வீசிய நக்கில் பந்தில், ரஹானே நடையைக் கட்ட, முதல் முறையாக கிருஷ்ணப்ப கௌதம் ஒன் டவுன் இறங்கினார். `யாராக இருந்தாலும், அடித்துப் பழகுவது மோகித் ஷர்மா பந்துவீச்சில்தான் `என்பதை கௌதமும் அறிந்தே வைத்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸின் dugoutலேயே அந்தப் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார் கௌதம். மீண்டும் ஸ்டாய்ன்ஸ் பந்தில் சிக்ஸர் அடிக்க, ஆசைப்பட்டு, மனோஜ் திவாரியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

#RRvKXIP

ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஓவருக்கு இரண்டு பவுண்டரிகள் என அடித்துக்கொண்டிருந்தவர், ஏழாவது ஓவர் இறுதியில் 25 பந்துகளில் 48 ரன்கள் கடந்திருந்தார். அஷ்வின் பந்தில் சிங்கிள் அடித்து, ஹாட்ரிக் அரைசதத்தை பதிவு செய்தார். அஷ்வின் பந்தில் லாங் ஆன் திசையில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்தாலும், நேற்றைய போட்டி முழுக்க ஸ்பின்னர்கள் வசம்தான் இருந்தது. 

இந்த ஐபிஎல்லின் ஸ்பின் நாயகன் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் சாம்சன், பட்லர் இருவரும் அவுட்டானபோது, அணியின் ஸ்கோர் 132 /4 . பின்னியும், `அதிக விலை' ஸ்டோக்ஸும் களத்தில் இருந்தனர். அற்புதங்கள் நிகழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் 30 ரன்களாவது எடுக்கலாம். 12 கோடிக்கு எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், 10 இன்னிங்ஸில் 174 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு ரன்னுக்கு விலை வைத்திருப்பார் போல பென் ஸ்டோக்ஸ். 

#RRvKXIP

ஆட்டத்தின் கடைசி ஓவரை டை வீசினார். மீண்டும் ஒருமுறை மோசமான ஷாட் செலக்ஷன் காரணமாக 14 ரன்களுக்கு அவுட்டானார் பென் ஸ்டோக்ஸ் முதல் பந்தையே, சிக்ஸருக்கு அடிக்க முற்பட்ட ஆர்ச்சர், லாங் ஆஃபில் நின்றுகொண்டிருந்த மனோஜ் திவாரிக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசி பந்தில் உனத்கட்டு டக் அவுட். கடைசி ஓவரில் மூன்று விக்கெட் எடுத்து, `ஓவர்நைட்டில் ஒபாமாவாகி' பர்ப்பிள் கேப் கைப்பற்றினார் டை. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப். 
முதல் ஓவரை கிருஷ்ணப்ப கௌதம் மிகவும் நேர்த்தியாக வீசினார். இந்த சீசன் முழுக்கவே ராகுலின் ஃபார்ம் வியக்க வைக்கிறது. இந்தியா முழுவதுமாக ஒரு கீப்பர் அணியை உருவாக்கும் அளவுக்கு, ஐபிஎல்லில் கீப்பர் பேட்ஸ்மேன்கள் குவிந்து கிடக்கிறார்கள். ஒரு பக்கம் டெல்லியின் பன்ட், இன்னொரு பக்கம் பஞ்சாபின் ராகுல். ஆனால், இவர்களையும் கடந்து இன்னும் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து கொண்டிருக்கிறார் தோனி. 
.

எப்போதும், தன் கால்களை எதற்கும் நகற்றாத கெயில், முதல் முறையாக கிரீஸுக்கு வெளியே வந்து ஷாட் ஆட முயற்சி செய்ய, பந்தை லாகவமாக லெக் சைடில் வீசினார் கௌதம். பட்லர் அதை `தோனி' வேகத்தில் ஸ்டம்பிங் செய்ய , ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் கெயில். நன்றாக இருந்த மயாங்க் அகர்வாலையும், அஷ்வின் இந்தப் போட்டியில் விளையாட அனுமதிக்காததால், கருண் நாயர் வருவார் போல, எனக் காத்திருந்தால், வேற லெவலில் ஒரு வேலை செய்தார் அஷ்வின்.  

#RRvKXIP

``என்னுடைய அடுத்த ஸ்டெப்ப உங்களால கணிக்கவே முடியாது. ஓப்பனிங் இறங்குவாங்கன்னு நினைக்கற வீரர்கள், மிடில் ஆர்டர்ல இறங்குவாங்க. மிடில் ஆர்டர் வீரர்கள் ஓப்பனிங் இறங்குவாங்க `` ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்தில் அஷ்வின் உதிர்த்த பொன்மொழி இது. `நான் செய்யப்போற இந்தக் காரியத்த பார்த்து, நீங்க ஆடிப்போயிருவீங்க, அசந்து போயிருவீங்க `டோனில் இது இருந்தாலும், பஞ்சாப் சென்ற தமிழன் ஏதோ வித்தியாசமாகச் செய்யப்போகிறார் எனப் பலரும் காத்துக்கொண்டிருந்தார்கள். சுனில் நரேன் எல்லாம் அடிக்கிறாரே, நாம்தான் டெஸ்ட்டில் சதம் எல்லாம் அடித்திருக்கிறோமே, `நாமளே ஓனர் ஆகிட்டா' என நினைத்து, ஒன் டவுன் இறங்கினார். சந்தித்த இரண்டாவது பந்திலேயே, ஸ்டம்ப்புகள் சிதற அவுட் . `எதற்கு இந்த வேலை' என அஷ்வின் ரசிகர்களே நினைத்திருப்பார்கள். 

அடுத்த ஓவரில் கருண் நாயரும் அவுட். 4 ஓவர் முடிவில் 20 ரன்களுக்கு 3 விக்கெட் என ப்ரீத்தி ஜிந்தாவையே சோக மோடுக்கு மாற்றிவிட்டனர் டர்பன் பாய்ஸ். ஸ்டோக்ஸ் ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தாலும், பவர்பிளே இறுதியில் 33 ரன்களே எடுத்திருந்தது பஞ்சாப். தேவைப்படும் ரன்ரேட் அப்போதே 9 ஐ நெருங்கிவிட்டது. புதிதாக வந்த நாத்தும், 13 பந்துகள் பிடித்து 9 ரன்களில் சோதியின் பந்துவீச்சில் அவுட்டானார்.

வந்தவர்கள் ரன் அடிக்காவிட்டாலும், பரவாயில்லை, முடிந்தளவு பந்துகளைச் சாப்பிட்டனர். திவாரி 7 (8 பந்துகள்), கருண் நாயர் 3 (5), நாத்  9 ( 13 ), திவாரி 7 (8 ), ஸ்டாய்ன்ஸ் 11 (16 ) என அனைவருமே மோசம். அதே சமயம், அவர்களை நொந்தும் பயனில்லை எனப் போங்கு காட்டியது மைதானம். பந்துகளை கனெக்ட் செய்யவே சிரமப்பட்டனர் பேட்ஸ்மேன்கள். ஐபிஎல்லின் இரண்டாம் பாகத்தில் இப்படிச் சில மைதானங்கள் சொதப்புவதுண்டு. 

#RRvKXIP

சென்ற போட்டியிலும், இதே பேட்டிங் சொதப்பலைச் செய்தது பஞ்சாப். அதிலும் மீட்பர் ராகுல். கடந்த போட்டியில் 44 பந்துகளில் அரைசதம், இந்தப் போட்டியில் 48 பந்துகளில் அரைசதம். இந்தத் தொடரில் 14 பந்துகளில் அரைசதம் கடந்தவர் ராகுல் என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டிய விஷயம். ராகுலுக்கு பார்ட்னர்ஷிப் தர, ஒரு பேட்ஸ்மேன் இருந்திருந்தாலும், பஞ்சா இந்தப் போட்டியை வென்றிருக்கும். 

ஆர்ச்சர் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ` `அதிக விலை' உனத்கட் வீசினார்.. ஸ்டாய்ன்ஸின் விக்கெட்டை வீழ்த்தி , இந்தத் தொடரில் தன் எட்டாவது விக்கெட்டைக் கைப்பற்றினார். பென் ஸ்டோக்ஸாவது பந்துவீசி ஏதோ செய்கிறார். உனத்கட் எல்லாம் ஏலத்தொகையான 11.5 கோடி ரூபாய்க்கு, இதுவரை என்ன செய்தார் எனத் தெரியவில்லை. 1 கோடிக்கு 1 விக்கெட்னாவது ஏதாவது பண்ணுங்க பாஸ்!  95 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுலால், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லமுடியவில்லை. 

இறுதியாக 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான். நான்காவது வெற்றியைப் பதிவு செய்த ராஜஸ்தான், புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது. 6 வெற்றிகளுடன் பஞ்சாப் 3வது இடத்தில் இருக்கிறது. 

``தான் மூன்றாவதாக இறங்கியது பரிசோதனை முயற்சி. அது வேலை செய்யவில்லை" என்றார் அஷ்வின். சோதனை செய்து பார்க்க இது நேரமில்லை அஷ்வின்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement