Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

மும்பை இந்தியன்ஸின் நிக்கல் நிக்கல் சல்தேரே! #KKRvMI

மே மாதம் வந்துவிட்டால் மும்பை ஜெயிக்குமாம்! அந்த ராசிப்படி ஏப்ரல் மாதம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி மே மாதம் தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்று நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கெத்தாக இருந்த கொல்கத்தா மும்பையிடம் படுமோசமாக தோல்வியடைந்து 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. #KKRvMI

#KKRvMI

இஷான் கிஷனின் வெறித்தன இன்னிங்ஸ்... மும்பையின் வெற்றித் தருணங்கள்!

10 போட்டிகளில் சிறப்பான கேப்டனாக இருந்த கொல்கத்தாவின் தினேஷ் கார்த்திக், நேற்று மட்டும் ஏன் இவ்வளவு சொதப்பினார்; அம்பயர்களின் முடிவுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாக இருப்பதுபோல் இருந்ததே எதனால்?; மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல்-ன் பிற்பாதியில் மட்டும் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிறதே எப்படி என நேற்றைய போட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆனால், இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் யாரிடமும் பதில் இல்லை!

டாஸ் வென்றதும் ஃபீல்டிங்!

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் மும்பையை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். கொல்கத்தா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸுடன் ஆடும் இரண்டாவது போட்டி இது. மும்பை வான்கடேயில் நடந்த போட்டியில் விக்கெட்டுகள் இருந்தும் 184 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது கொல்கத்தா. ஈடன் கார்டனில் நேற்று நடந்த போட்டியில் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. காயம் அடைந்திருந்த ஷுப்மான் கில்லுக்குப் பதிலாக ரிங்கு சிங்கும், மிட்செல் ஜான்சனுக்குப் பதிலாக டாம் கரணும் இடம்பிடித்திருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லை.

#KKRvMI

இஷான் கிஷனின் வெறித்தன இன்னிங்ஸ்... மும்பையின் வெற்றித் தருணங்கள்!

சூர்யகுமார் யாதவ், எவர்ட்டன் லூயிஸ் பேட்டிங்கை தொடங்கினார்கள். முதல் ஓவரை ஆண்ட்ரு ரஸல் வீசினார். சூர்யகுமார் யாதவ் நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார். இரண்டாவது ஓவர் வீசிய பிரசித் கிருஷ்ணாவின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தார் யாதவ். மூன்றாவது ஓவரை டாம் கரண் வீசினார். இரண்டு பவுண்டரிகள். நான்காவது ஓவர் சுனில் நரேனுக்கு. இந்த ஓவரிலும் ஒரு பவுண்டரி விழுந்தது. தொடர்ந்து நான்கு ஓவர்களிலும் நான்கு பெளலர்களை மாற்றிய தினேஷ் கார்த்திக் ஐந்தாவது ஓவரை மீண்டும் பிரசித் கிருஷ்ணாவிடம் கொடுத்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் லூயிஸின் கேட்சை தவறவிட்டார் குல்தீப் யாதவ். பவர் ப்ளேவின் கடைசி ஓவர் பியுஷ் சாவ்லாவிடம் வந்தது. முதல் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் சூர்யகுமார். ஆனால், நான்காவது பந்தில் லூயிஸின் விக்கெட்டை வீழ்த்தினார் சாவ்லா. பவர் ப்ளேவின் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 46 ரன்கள் எடுத்திருந்தது மும்பை. 

மீண்டும் சாவ்லா வீசிய ஒன்பதாவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனார். 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார் சூர்யகுமார். 10-வது ஓவரில் இருந்து இஷான் கிஷனின் பேயாட்டம் ஆரம்பித்தது. குல்தீப் யாதவின் ஓவரில் சிக்ஸர் அடித்தவர், அடுத்த சாவ்லா ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார். 

14-வது ஓவரில் இஷானின் வெறித்தனம் உச்சம் தொட்டது.  இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் இருந்து தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் அடித்தார் இஷான். இந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் அடித்தது மும்பை. எதிர்முனையில் ஹிட்மேன் ரோஹித்தே இஷானின் இந்த வெறித்தனத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அடுத்த ஓவர் வீசிய நரேனின் ஓவரில் இஷான் அவுட் ஆகும்போது மும்பை அணியின் ரன்ரேட் 10-ஐத் தொட்டிருந்தது. 21 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி என 62 ரன்கள் அடித்திருந்தார் இஷான் கிஷன். 

ரோஹித் ஷர்மா பெரிதாக அடிக்கவில்லை என்றாலும் 7-வது ஓவரில் வந்தவர் 18-வது ஓவர் வரை களத்தில் இருந்தார். 31 பந்துகளில் 36 ரன்கள் அடித்து பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் அவுட் ஆனார். 

#KKRvMI

இங்குதான் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் ட்விஸ்ட்! ஆண்ட்ரு ரஸல் 2 ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். டாம் கரண் மூன்று ஓவர்கள் 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார். இப்படி 2 டெத் பெளலர்கள் இருக்க, பியுஷ் சாவ்லாவிடம் ஓவரைக் கொடுத்தார் தினேஷ். மூன்று சிக்ஸர், 1 பவுண்டரி என மொத்தம் 22 ரன்கள். மொத்தம் 210 ரன்கள் அடித்தது மும்பை. இதில் கடைசி 7 ஓவர்களில் மட்டும் அதாவது 42 பந்துகளில் 98 ரன்கள். 210 ரன்களில் 70 சதவிகித ரன்கள் பவுண்டரி சிக்ஸர்களால் கிடைத்தவை. மும்பை மொத்தம் 16 பவுண்டரி, 14 சிக்ஸர்கள் அடித்திருந்தது.

கொல்கத்தாவின் சூர மொக்கை சேஸிங்!

ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்கள் சேஸ் செய்ததுதான் கொல்கத்தாவின் இதுவரையிலான சாதனை. இந்தமுறை அவர்கள் சாதனையை அவர்களே முறியடிப்பார்கள் என ஈடன் கார்டனில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்க, சொதப்பல் ஆட்டம் ஆடியது கொல்கத்தா. முதல் பந்தில் பவுண்டரி, இரண்டாவது பந்தில் கேட்ச் என சுனில் நரேன் வந்தவேகத்தில் பெவிலியனுக்கு கிளம்பினார். 

#KKRvMI

இஷான் கிஷனின் வெறித்தன இன்னிங்ஸ்... மும்பையின் வெற்றித் தருணங்கள்!

கிறிஸ் லின் சில பவுண்டரிகள் அடித்து கொல்கத்தாவுக்கு நம்பிக்கை கொடுக்க, காண்டானது மும்பை பெளலர்கள் இல்லை, ராபின் உத்தப்பாதான். ஒரு ரன் எடுக்க வா, வா என  கிறிஸ் லின்னைக் கூப்பிட்டு ரன் அவுட் ஆக்கினார் உத்தப்பா. அங்கிருந்து ஆரம்பித்தது கொல்கத்தாவின் சூர மொக்கை ஆட்டம். ராபின் உத்தப்பா 14 ரன்களில் அவுட், ரஸல் 2 ரன்னில் அவுட், தினேஷ் கார்த்திக் 5 ரன்களில் ரன் அவுட், ரானா 21 ரன்னில் அவுட் என 67 ரன்களுக்கு 6 பேட்ஸ்மேன்களையும் இழந்தது கொல்கத்தா. அதன்பிறகு 18 ஓவர்கள்வரை ஆட்டம் இழுத்துக்கொண்டே போனாலும் ரன்கள் உயரவில்லை. 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது கொல்கத்தா.  

தோல்விக்குப் பிறகு `நாங்கள் அணியாக இணைந்து விளையாடாததுதான் தோல்விக்குக் காரணம்’ என்றார் தினேஷ் கார்த்திக். ஆனால், ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸிடம் சரண் அடைந்ததுபோல் இருந்தது கொல்கத்தாவின் ஆட்டம். கேப்டன்ஸியில் இருந்து எல்லாமே சொதப்பல்தான்.

மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற்றுவிடும், ஃபைனல் மும்பைக்கும்- சென்னைக்கும்தான் என இப்போதே ட்விட்டரில் பெட் கட்டுகின்றனர். ``கெளம்பு கெளம்பு முடிஞ்சி போச்சி... கெளம்பு கெளம்பு'' என அம்பானி சொல்வதாக பூரிக்கிறார்கள் மும்பை ரசிகர்கள். அடுத்து ராஜஸ்தானை சந்திக்கிறது மும்பை. இந்தப்போட்டியில் வெற்றிபெற்றால் மும்பை ப்ளே ஆஃபில்  அச்சுறுத்தும் வாய்ப்புகள் அதிகம் !

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement