வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (10/05/2018)

கடைசி தொடர்பு:18:39 (10/05/2018)

இந்திய அணியை வழிநடத்தும் தெருவோரச் சிறுமி! - ரஷ்யாவில் தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து

தெருவோரச் சிறுவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி இன்று ரஷ்யாவில் தொடங்கியது. இதில், சென்னையைச் சேர்ந்த ஒன்பது சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். `போட்டிக்குத் தயாரானபோது நமது குழந்தைகள், மிகவும் சிரமப்பட்டனர். ஒரு வருட பயற்சிக்குப் பிறகு நல்ல முன்னேற்றத்தைக் காட்டினர்' என்கின்றனர் போட்டி ஏற்பாட்டாளர்கள். 

கருணாலயா

உலகம் முழுவதும் தெருக்களில் வாழும் சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால் பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது. ஃபிஃபா (FIFA) கமிட்டியின் விதிகளைப் பின்பற்றி இந்தப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த வருடம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் போட்டிகள் தொடங்கியுள்ளன. வரும் மே 17-ம் தேதி வரையில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 14 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர்- சிறுமிகள் பங்கேற்கின்றனர். 29 நாடுகளிலிருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் விளையாடுவதற்கு, ஒன்பது தெருவோரச் சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைக் கருணாலயா தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இந்தச் சிறுமிகளில் நான்கு பேர் சென்னையில் தெருவோரங்களிலும் மற்றவர்கள் தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பிலும் வளர்கின்றனர். இந்தியா சார்பில் முதல்முறையாக இந்தச் சிறுமிகள் போட்டியில் பங்கேற்கின்றனர். 

பிரேஸில் அணியுடன் இந்திய அணி சிறுமிகள்

தெருவோரச் சிறுமிகளின் பின்புலம் குறித்து நம்மிடம் பேசிய கருணாலயா நிர்வாகிகள், `` சென்னை, வால் டாக்ஸ் ரோட்டில் பாத்திரங்கள் தயாரிப்பவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 17 வயதான சங்கீதா என்ற சிறுமி, இன்று 9 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணியை வழிநடத்துகிறார். அதேபோல், மூன்று தலைமுறைகளாக தெருவில் வசித்து வரும் குடும்பத்தில் பிறந்த கோமதி, முக்கிய ஃபீல்டராகக் களமிறங்குகிறார். 17 வயதான ஷாலினி, இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் கோயம்பேடு பகுதியில், தாய் வாங்கிய கடனுக்காக வயதான ஒருவருக்குத் திருமணம் செய்ய முயன்ற சம்பவத்திலிருந்து தப்பித்து வந்தவர். இவர்கள் அனைவரும் இயற்கையிலேயே மனதளவிலும் உடல் அளவிலும் வலிமை பெற்றவர்கள். இவர்களுக்குப் பயிற்சி அளிக்க தொடங்கியபோது, மிகவும் கடினமாகவே உணர்ந்தார்கள். ஆனால், ஒரு வருட பயிற்சியில் நல்ல முன்னேற்றத்தைக் காட்டினார்கள். இந்த முயற்சியில் பயிற்சியாளர் கண்ணதாசனின் பங்கு மிகவும் முக்கியமானது. இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற தெருவோரச் சிறுவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடியவர். 

ரஷ்ய வீரர்களுடன் இந்திய அணி வீரர்கள்

கருணாலயா அமைப்பின் நிறுவனர் பால் சுந்தர் சிங்கிடம் பேசியபோது, ``ரஷ்ய போட்டிக்குத் தேர்வான தெருவோரச் சிறுமிகளில் பலருக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை. இவர்களை வெளிநாடு அழைத்துச் செல்வதிலும் பள்ளிகளில் சேர்ப்பதிலும் மிகுந்த சிரமம் இருந்தது. ஒரு வருட முயற்சிக்குப் பிறகு நமது சிறுமிகள், ரஷ்யாவில் கால்பதித்துவிட்டார்கள். நிச்சயம் வெற்றியுடன் திரும்புவோம்" என்றார் நம்பிக்கையோடு.