ரிஷப் பன்ட் சதம் வீண்... அபார வெற்றி பெற்ற ஹைதராபாத்!#DDvSRH

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தவான்

Photo: Twitter/ipl

ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணியின் தொடக்கம் மந்தமாகவே இருக்க, ரிஷப் பன்ட் இன்று ஒன் மேன் ஷோ காண்பித்தார். கடைசி 5 ஓவர்களில் அவர் காட்டிய அதிரடியால், பந்துவீச்சில் பலமான அணியாகச் சொல்லப்பட்ட ஹைதராபாத் நிலை தடுமாறியது. அதிரடியாக விளையாடிய பன்ட் சதமடித்து அசத்தினார். சதமடித்த பின்னரும் அவரது அதிரடி குறையவில்லை. புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என ரிஷப் பன்ட் 26 ரன்கள் குவித்தார். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. இறுதிவரை அதிரடி காட்டிய ரிஷப் பன்ட், 63 பந்துகளில் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 7 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். ஹைதராபாத் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ், தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹேல்ஸ் 14 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் தவானுடன் சேர்ந்தார். இந்த இணை நிதானமாகவும், அதே நேரத்தில் நேர்த்தியுடனும் விளையாடி ரன்கள் சேர்த்தது. இவர்கள் விக்கெட்டை வீழ்த்த டெல்லி அணியின் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீண் ஆனது.  இறுதியில் 18.5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கை தொட்டது.  அதிரடியாக விளையாடிய தவான் 50 பந்துகளில் 92 ரன்களும் கேப்டன் வில்லியம்சன் 80 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் ஒரு விக்கெட் எடுத்தார். 
ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் தொடரில் தனது 9 -வது வெற்றியைப் பதிவு செய்தது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!