காட்டடி ரிஷப் பன்ட்... அலட்டாமல் அசத்திய ஷிகர் - வில்லியம்சன்...! #DDvSRH | SRH beat DD by 9 wickets as the later lost the play-off spot

வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (11/05/2018)

கடைசி தொடர்பு:14:48 (11/05/2018)

காட்டடி ரிஷப் பன்ட்... அலட்டாமல் அசத்திய ஷிகர் - வில்லியம்சன்...! #DDvSRH

முதலில் பேட் செய்து தட்டுத் தடுமாறி ரன்கள் சேர்த்துவிட்டு பின்னர் பவுலர்களை வைத்து, 'ஏரியாவுக்கு வாய்யா, ஏரியாவுக்கு வாயா' என உக்கிரமாக வம்பிழுப்பதுதான் இந்த ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் ஸ்டைலாக இருந்தது. 'பேசாம பதின்னொன்னும் பவுலராகிட்டா இன்னும் சிறப்பா இருக்கும்ல' என்றெல்லாம் கமென்ட் கிளம்பவும் சன்ரைஸர்ஸ் பேட்ஸ்மேன்களுக்கும் கோபம் வந்துவிட்டது போல. ஆனால், பாவம் தப்பான அணியை அடித்துத் துவைத்துவிட்டார்கள். #DDvSRH

#DDvSRH

மேலும் படங்களுக்கு...

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 'உங்களை பேட் பண்ண வச்சா வழக்கம்போல ஆட்டம் காட்டுவீங்க, நாங்களே இறங்குறோம்' என பேட்டை பிருத்வி ஷா, ஜேசன் ராய் கையில் கொடுத்தனுப்பிவிட்டார். ஆடிய அத்தனை போட்டிகளிலும் அதிரடி காட்டிய ஷா நேற்று கொஞ்சம் தடுமாறித்தான் போனார். முதல் மூன்று ஓவர்கள் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளித்து ஆடுகிறார்கள் எனத் தெரிந்ததும் ஷகிப்பை கொண்டுவந்தார் வில்லியம்சன். கேப்டன் சீப்பாக போட்ட ப்ளானை ஷார்ட் பால் போட்டு முடித்து வைத்தார் ஷகிப். தவான் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஷா. 'போறானே ப்ருத்வி ஷா பொசுக்குனு அவுட்டாகித்தான்' என ஹஸ்கி வாய்ஸில் பாடியபடி அடுத்த பாலிலேயே ராயும் நடையைக் கட்டினார்.

இப்போது களத்தில் இரண்டு நம்பிக்கை நட்சத்திரங்கள். ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பன்ட். டெல்லியின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்திய அணியின் எதிர்காலமும் இவர்களிடத்தில்தான். அதை நிரூபிக்கும் வகையில் சித்தார்த் கெளல் ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகள் அடித்தார் பன்ட். 8-வது ஓவரில் 'என்ன நீ மட்டும் அடிக்கிற, இந்தப் பக்கம் வா நான் காட்டு காட்டுனு காட்டுறேன்' என சிங்கிள் ரன்னுக்கு ஓடிவந்தார் ஸ்ரேயாஸ். என்ன நினைத்தாரோ பாதி தூரம் வந்தவரை 'திரும்ப அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி' என அனுப்பி வைத்தார் பன்ட். கேப்பில் கரெக்ட்டாக ரன் அவுட் செய்தார் சந்தீப் ஷர்மா. 

#DDvSRH

மேலும் படங்களுக்கு...

அடுத்து இறங்கிய ஹர்ஷல் படேலையும் அதே ஸ்டைலில் ரன் அவுட்டாக்கியிருப்பார் பன்ட். 'அவன் நேக்கா ஆடுறான்யா! நீ சூதானமா இரு' என கேப்டன் சொல்லி அனுப்பினார் போல! உஷாராக க்ரீஸில் தஞ்சமடைந்தார் படேல். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சன்ரைஸர் பவுலிங் அட்டாக்கை பதம் பார்த்தார்கள். ரஷீத் கானின் ஓவரில் மூன்று பவுண்டரிகள், சந்தீப்பின் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என வளைத்துக் கட்டி வெளுத்தார்கள். 'கடைசில நம்ம பவுலிங்கும் போச்சே' என கேன் முகத்தில் கவலை தெறித்தது.

இந்த முறையும் சேம் சைடு கோல் போட்டது பன்ட்தான். இரண்டாவது ரன்னுக்கு ஓடிவந்த ஹர்ஷலை பாதி க்ரீஸில் நிறுத்தி யூ டர்ன் போடச் சொன்னார் பன்ட். அதற்குள் பந்து கீப்பர் கோஸ்வாமி கையில் தஞ்சமடைந்தது. அவர் அதை கோட்டை விட்டுவிட்டு தரையில் தடவ, 'இப்போ எப்படி சிறுத்தை மாதிரி பாயுறேன் பாரு' என க்ரீஸ் தொட ஓடினார் ஹர்ஷல். 'மிஸ்டர் சீட்டா, அப்படியே பெவிலினுக்கு ஓடிப் போயிருங்க' என ரன் அவுட் செய்தேவிட்டார் கோஸ்வாமி. விக்கெட் கணக்கு: ஹைதராபாத் பவுலர்கள் - 1, ரிஷப் பன்ட் - 2!

#DDvSRH

'இரண்டு இன்ஃபார்ம் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி இருக்கிறோம், நாமும் அவுட்டானால் டிரெஸ்ஸிங் ரூமில் ரிக்கி பான்டிங் பச்சை பச்சையாக கேட்பார்' என்பது பன்ட்டுக்கு தெரிந்தே இருந்தது. முகத்தில் கோபத்தை தக்க வைத்துக்கொண்டார். சுழற்ற ஆரம்பித்தார் ஸ்டிக்கர் ஒட்டிய பேட்டை. ஷகிப்பின் ஓவரில் 13 ரன்கள், கெளலின் ஓவரில் 9 ரன்கள், ரஷீத் கானின் ஓவரில் 13 ரன்கள், தொடரின் சூப்பர் பவுலர் புவனேஸ்வர் குமாரின் ஓவரில் 18 ரன்கள் என பாரபட்சம் பார்க்காமல் வெளுத்தார். அதிலும் நின்றபடி ரிவர்ஸ் ஸ்கூப் அடித்து தேர்ட் மேன் பக்கம் பந்தைப் பறக்கவிட்டதெல்லாம் Shot of the decade! அதுவும் ஒருமுறை இரண்டுமுறையல்ல, மூன்று முறை. Pitch Perfect!

காட்டடி அடித்தால் செஞ்சுரி போட்டுத்தானே ஆகவேண்டும். 56 பந்துகளில் சதம் கடந்தார் பன்ட். அதன்பின்னும் ஆட்டம் நிற்கவில்லை. புவியின் கடைசி ஓவரில் பன்ட் சந்தித்த ஐந்து பால்களில் முதல் இரண்டில் பவுண்டரி, அடுத்த மூன்றில் சிக்ஸ்! நான்கு ஓவர்கள் முடிவில் 51 ரன்கள் கொடுத்திருந்தார் புவி. அவர் ஒன் டே மேட்ச்சில் கூட சமீபத்தில் இவ்வளவு ரன்கள் கொடுத்ததில்லை. உபயம்: பன்ட். கேன் வில்லியம்சன் தொடங்கி ஹர்ஷா போக்ளே வரை எல்லாரும் இந்த இன்னிங்ஸைப் பார்த்து வாயடைத்துப் போயிருந்தார்கள். கங்குலி தொடங்கி ஆரோன் பின்ச் வரை ட்விட்டரில் புகழ்மாலை சூட்டினார்கள். அமைதியாக க்ளவுஸை மாட்டிக்கொண்டு ஸ்டம்ப் பின்னால் வந்து நின்றார் கீப்பர் பன்ட்.

#DDvSRH

சேஸிங்கில் ஏற்கெனவே சென்னையிடம் மண்ணைக் கவ்வியிருந்தது ஹைதராபாத். அதுதான் அந்த அணியின் கடைசி தோல்வியும்கூட. 188 ரன்களை சேஸ் செய்வது ரொம்பவே கஷ்டம்தான். பொறுப்பாக ஆட வேண்டும். 'எனக்குத்தான் அது இல்லையே' என இரண்டாவது ஓவரிலேயே அவுட்டானார் ஹேல்ஸ். அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாம் எப்போது அடிப்பார்கள், எப்போது அவுட்டாவார்கள் என்பதெல்லாம் பிரபஞ்ச ரகசியம். ஆக, தவானும் வில்லியம்சனும் அடித்தால்தான் உண்டு! அடித்தார்கள்.

பெரிய ஸ்கோர் என்ற பிரஷரை இருவரும் எடுத்துக்கொள்ளவே இல்லை. அதே சமயம் இருவரும் உலகின் மோஸ்ட் அட்டாக்கிங் பேட்ஸ்மேன்களும் இல்லை. இருவரிடமும் பிரதானமாக இருப்பது ஸ்டைல்தான். அதை நேற்று ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம் முழுதாக அனுபவித்தது. டெல்லியின் பவுலர்களை என்னனென்னமோ காம்பினேஷன்களில் பயன்படுத்திப் பார்த்தார் ஸ்ரேயாஸ். ஒரு நானோகிராம் அளவுக்குக்கூட பயனில்லை. 

#DDvSRH

இதை சிம்பிளான நம்பர் விளையாட்டில் சொல்லிவிடலாம். டெல்லியின் பன்ட் தன் இன்னிங்ஸில் அடித்தது 15 பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள். கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கோட்டை தொட வைத்த தவானும், வில்லியம்சனும் சேர்ந்து அடித்த பவுண்டரிகள் 17 தான். சிக்ஸ் அதைவிட கம்மி. ஆறு சிக்ஸர்கள்தான். அந்தளவுக்கு நீட்டான இன்னிங்ஸ் அது. ஒரு கட்டத்தில் தேவையான ரன்ரேட்டை விட அணியின் ரன்ரேட் அதிகமாக இருந்தது. ஏழு பந்துகள் மிச்சமிருக்கும் நிலையில் மேட்ச்சை முடித்துவைத்தார்கள் இருவரும். A Neat and Composed Partnership!

ஹைதராபாத் வென்றது பிரச்னையில்லை. ஆனால், தோற்றது டெல்லி என்பதுதான் இங்கு சோகமே. ஐபிஎல்லின் பிரதான நோக்கமான இளம்வீரர்களை அடையாளம் காண்பது என்பதைச் சரியாக செய்தது டெல்லி அணிதான். ஸ்ரேயாஸ் ஐயர், பன்ட், ப்ருத்வி ஷா, ஹர்ஷல் படேல், விஜய் ஷங்கர், அவேஷ் கான், தெவேதியா என எக்கச்சக்கப் பேரை உலகுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. ஆனால், ப்ளே ஆஃப் வாய்ப்பை பறிகொடுத்ததுதான் சோகமுரண். You deserve a better tournament DD!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்