நரேன், தினேஷ் கார்த்திக் அதிரடி! 245 ரன்கள் குவித்த கொல்கத்தா

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. 

சுனில் நரேன்

Photo Credit: Twitter/IPL

இந்தூர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சிறிய மைதானம் என்பதால், பவர் ஹிட்டர் ஆரோன் பின்ச் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரை அஷ்வின் பிளேயிங் லெவனில் சேர்த்தார். அதேபோல், கொல்கத்தா அணியில் ஜேவோன் சார்லஸ் அறிமுக வீரராகக் களமிறங்கினார். 

கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் தொடங்கினர். கிறிஸ் லின் 24 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொள்ள, மறுமுனையில் வழக்கம்போல் அதிரடி காட்டினார் சுனில் நரேன். அவர் 36 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் விளாசினார். அடுத்துவந்த உத்தப்பாவும் 24 ரன்களில் வெளியேறினார். 12வது ஓவரில் 125 ரன்களைக் கொல்கத்தா அணி கடந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் - ஆல்ரவுண்டர் ரஸல் இணை, 76 ரன்கள் சேர்த்தது. ரஸல் 14 பந்துகளில் 31 ரன்களும், தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்தனர். இதன்மூலம் கொல்கத்தா அணி 17வது ஓவரிலேயே 200 ரன்களைக் கடந்து பெரிய ஸ்கோரை நோக்கிச் சென்றது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸில் சார்லஸ், தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். கடைசி ஓவரில் சுப்மன் கில் அதிரடி காட்ட, கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!