தவான், வில்லியம்ஸன் அதிரடி! சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத் #CSKvsSRH

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. 

தவான் - வில்லியம்ஸன்

Photo: Twitter/IPL

புனே மைதானத்தில் நடைபெறும்  போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடங்கினர். சென்னை அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் திணறிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள், பவர் பிளே முடிவில் ஹேல்ஸின் விக்கெட்டை இழந்து 29 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 9வது ஓவரில் 50 ரன்களைக் கடந்த பிறகு தவான் - வில்லியம்ஸன் ஜோடி அதிரடியில் இறங்கியது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தது. தவான் 79 ரன்களுடனும், வில்லியம்ஸன் 51 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த மணீஷ் பாண்டேவும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய தீபக் ஹீடா 21 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. மறுமுனையில் 8 ரன்களுடன் ஷகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்த போட்டியில் சென்னை அணி 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது. இதில், ஹர்பஜன் வீசிய 2 ஓவர்களில் 26 ரன்களும், ஜடேஜா வீசிய 2 ஓவர்களில் 24 ரன்களையும் ஹைதராபாத் அணி குவித்தது. அதேபோல், 2 ஓவர்கள் மட்டுமே வீசிய டேவிட் வில்லியும் 24 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஸ்ரதுல் தாக்குர் 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார் மற்றும் பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!