Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

தொடர்ந்து ஐந்து அரைசதம்… ராயல்ஸை மீட்டெடுத்த பாஸ்… ஜாஸ் பட்லர்! #MIvRR

மிடில் ஆர்டரில் இறங்கிக்கொண்டிருந்த ஜாஸ் பட்லரை ஓப்பனிங் இறக்கவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். அடுத்தடுத்து ஐந்து அரைசதங்கள். அதில் இரண்டுமுறை (95, 94) சதம் அடிக்க வாய்ப்பு. மூன்றுமுறை ஆட்ட நாயகன். 509 ரன்களுடன் டாப் ஸ்கோரர் பட்டியலில் ஐந்தாவது இடம். அணி தொடர்ந்து மூன்று முறை வெற்றி. பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் பிரகாசம். இதைவிட வேறென்ன வேண்டும்? ராஜஸ்தானின் இந்த ஒற்றை முடிவு அவர்களின் ஒட்டுமொத்த கிராஃபையே மாற்றிவிட்டது. #MIvRR

Jos Butler Celebrates after RR win  #MIvRR  

பிளே ஆஃப் நெருங்க நெருங்க லீக் சுற்றின் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் பெறும். ஆரம்பத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்த அணி கூட, கடைசிக் கட்டத்தில் அடுத்தடுத்து வெற்றிபெற்று அதிர்ச்சி கொடுக்கும். புள்ளிகள் பட்டியலில் ஐந்து, ஆறாவது இடத்தில் இருந்த மும்பை, ராஜஸ்தான் அணிகளும் அப்படியொரு பலப்பரீச்சைக்கு நேற்று தயாரானது . வான்கடேவில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை அணி பிளேயிங் லெவனை மாற்றவில்லை. ராஜஸ்தான் அணியில் ஷ்ரேயாஸ் கோபால், தவல் குல்கர்னி, டார்சி ஷார்ட் இடம்பெற்றனர். டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். ஸ்பின்னர் கெளதம் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள். ரஹானேவுக்கு அப்போதே ஏதோ நெருடியது.

மணிஷ் பாண்டே, குருனால் பாண்டியா, பென் ஸ்டோக்ஸ், டிரென்ட் போல்ட், மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்கூர் வரிசையில் ஸ்டூவர்ட் பின்னியும், இந்த சீசனில் சூப்பர் கேட்ச் பிடித்தவர்கள் வரிசையில் இணைந்திருக்கலாம். லீவிஸ் அடித்த பந்து தரையில் விழுவதற்கு முன், ஓடியே 3 ரன்களை எடுத்துவிட்டனர். அப்படியெனில் அந்த ஷாட்டின் உயரத்தை நீங்களே கணித்துக்கொள்ளலாம். பந்து வானத்தில் இருக்கும்போதே வர்ணனையில் இருந்த மஞ்சரேக்கர், `பிடித்துவிட்டால் இதுதான் இந்த மேட்ச்சின் சிறந்த கேட்ச்சாக இருக்கும்’ என்றார். பிடித்தால்தானே…! ஸ்டூவர்ட் பின்னியும் ரிவர்ஸ் கப்லாம் போட்டுப் பிடிக்க முயன்றார். அவரால் அந்த கேட்ச்சைப் பிடிக்கமுடியவில்லை. பெஸ்ட் ஃபீல்டர்கள் வரிசையிலும் இடம்பெறமுடியவில்லை. Lewis dropped on 5 by Stuart Binny off Archer. தலை மேல் கை வைத்தார் ரகானே. ஏனெனில், குல்கர்னி வீசிய முந்தைய ஓவரில் சூர்யகுமார் கொடுத்த கேட்ச்சை, மிட் ஆனில் இருந்த கெளதம் மிஸ் செய்திருந்தார். பவர்பிளே முடிவில் மும்பையின் ஸ்கோர் 51/0.

Lewis Plays a shot  #MIvRR 

லீவிஸ் இந்த சீசனில் நிறைய டாட் பால்களை சந்திக்கிறார் என்ற பிரச்னை இருந்தது. அதனால்தான் அவர் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடும் முனைப்பில் இருந்தார். அவருக்கு தோதான இடத்தில் போட்டுக் கொடுத்தார் ஷ்ரேயாஸ் கோபால். ஃபுல் லென்த்தில் வந்ததை பேக்வார்ட் ஸ்கொயர் பக்கம் ஃபிளாட் சிக்ஸ் விளாசிய லீவிஸ், அடுத்த பந்தில் டவுன் தி லைன் வந்து சிக்ஸர் அடித்த இடம் லாங் ஆஃப். பேக் டு பேக் சிக்ஸர். ஏனோ… Lewis dropped on 5 by Stuart Binny off Archer என்பது மீண்டும் நினைவுக்கு வந்தது. 10 ஓவர் முடிவில் முடிவில் 86 ரன்கள். விக்கெட் இழப்பின்றி…

இந்த விக்கெட் இழப்பின்றி என்ற வார்த்தைக்கு 11-வது ஓவரில் முடிவு கட்டினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். இரண்டு ஷார்ட் பால். இரண்டு முக்கிய விக்கெட்டுகள் காலி. ஷார்ட் பாலை புல் ஷாட் அடிக்கிறேன் என லாங் லெக்கில் இருந்த உனத்கட் கையில் கேட்ச் கொடுத்து சூர்யகுமார் (38) வெளியேற, அடுத்த பந்தில் கேப்டன் ரோகித் பெவிலியன் திரும்பினார். அதுவும் அதே ஷார்ட் பால். அதே புல் ஷாட். அதே இடம். அதே ஃபீல்டர். ரோகித் டக்  அவுட். 86 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்த மும்பை அடுத்த 3 ரன்களை எடுப்பதற்குள் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்திருந்தது. தேங்ஸ் டு ஆர்ச்சர். தேங்ஸ் டு உனத்கட். அவர் பிடித்த இரண்டும் அட்டகாசமான கேட்ச். அதிலும் ரோஹித் கேட்ச் ஒரு படி மேல். இடுப்பு உயரத்தில் வந்ததை ரிவர்ஸ் கப் போட்டுப் பிடிப்பதெல்லாம் பெஸ்ட் ஃபீல்டர்களுக்கே கைவராது. அதேநேரத்தில், கண்டம் தப்பிய ஓர் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ன செய்ய வேண்டுமோ அதைக் கச்சிதமாக செய்திருந்தார் லீவிஸ். அதாவது அரைசதம் அடித்திருந்தார். கெளதம் புல் டாஸாக வீசியதை பிரஸ் பாக்ஸ் பக்கம் சிக்ஸர், குல்கர்னி பந்தில் சைட் ஸ்கிரினில் ஒரு சிக்ஸர் விளாசிய லீவிஸ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 #MIvRR 

ஆட்டத்தின் நடுவே Side line-ல் இருந்த ராஜஸ்தான் அணியின் ஆலோசகர் ஷேன் வார்ன், மைக்கேல் கிளார்க்கிடம், ``ஆரம்பத்தில் இரண்டு கேட்ச்களை மிஸ் செய்தது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று சொல்லி வாயை மூடுவதற்குள், இஷன் கிஷான் கொடுத்த கேட்ச்சை டீப் மிட் விக்கெட்டில் இருந்த சஞ்சு சாம்சன் அட்டகாசமாக பிடித்து, அப்படியே கால்களை தலைக்கு மேலே புரட்டி போட்டு, பல்டி அடித்து எழுந்தபோது வார்ன் வாயடைத்து நின்றார். பிரில்லியன்ட் கேட்ச். அதுமட்டுமல்ல, லீவிஸ் அடித்ததை டீப் பாயின்ட்டில் ஓடிவந்தபடியே பிடித்ததும் சாட்சாத் சஞ்சு சாம்சனே!

இரண்டு கேட்ச் பிடித்த மிதப்பில் பந்துவீச்சின்போது லைன் அண்ட் லென்த்தை மிஸ் செய்தார் உனத்கட். அதுவும் டெத் ஓவரில்… விட்டுவைப்பாரா ஹர்டிக் பாண்டியா? குட் லென்த்தில் மிடில் ஸ்டம்ப் லைனில் வந்ததை அழகாக ஸ்ட்ரெய்ட்டில் கேலரியின் இரண்டாவது அடுக்கில் சிக்ஸருக்கு அனுப்பினார். அடுத்து லோ ஃபுல் டாஸ். அது பவுண்டரி. உனத்கட்டுக்கு உள்ளுக்குள் உதறல். அடுத்த பந்தை யார்க்கராக வீச முயன்றார். ஆனால், அதை எக்ஸ்ட்ரா கவர் பக்கம் சிக்ஸருக்கு அனுப்பினார் ஹர்டிக். அதே ஓவரில் பென் கட்டிங்கும் ஒரு சிக்ஸருக்கு முயன்றார். ஆனால், அதை ஆர்ச்சர் டிராப் செய்தார். மொத்தம் 3 கேட்ச்கள் டிராப்.

ஆர்ச்சர், கெளதம், ஸ்டூவர்ட் பின்னி மூவருக்கும் `கேட்ச்னா இப்படி பிடிக்கணும்’ என கிளாஸ் எடுப்பது போல ஒரு கேட்ச் பிடித்தார் சாம்சன். ஹர்டிக் பாண்டியா உசிரைக் கொடுத்து டீப் மிட் விக்கெட் பக்கம் அடித்த பந்தை சாம்சன் ஓட்டமாக ஓடி வந்து ஃபுல் லென்த் டைவ் அடித்து கேட்ச் பிடித்தது மட்டுமல்லாது, பேலன்ஸை மிஸ் செய்யாது பந்துடன் எழுந்து நின்றபோது வான்கடே மைதானமே விக்கித்து நின்றது. வாட்டே கேட்ச். கேட்ச் ஆஃப் தி மேட்ச். அல்டிமேட்!  இத்தனைக்கும் சாம்சன் ஒரு விக்கெட் கீப்பர். அப்படியிருந்தும் அவுட்ஃபீல்டில் சிட்டாகப் பறந்து கழுகுபோல கொத்துகிறார். விராட் இப்படிப்பட்ட ஃபீல்டர்களையே விரும்புகிறார். 

Jos Butler  #MIvRR 

மும்பை நிர்ணயித்த 168 ரன்களை நோக்கிக் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஷார்ட் – ஜாஸ் பட்லர் தொடக்கம் கொடுத்தனர். மீண்டும் ஒருமுறை ஷார்ட் ஏமாற்றினார். பும்ரா பந்தில் விக்கெட் கீப்பர் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து நான்கு ரன்களில் பெவிலியன் திரும்பினார் ஷார்ட். `இதுக்கு பேசாம கிளாசனை எடுத்திருக்கலாம், ஏன் எடுக்கலை…’ என வார்னேவின் டீம் செலக்ஷனை கேள்விக்குள்ளாக்கினர் ரசிகர்கள். அதேநேரத்தில், ஜாஸ் பட்லரை ஓப்பனிங் இறக்கிவிட்ட ராஜஸ்தானின் ஒற்றை முடிவு அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஏனெனில், அவர் ஓப்பனிங் இறங்கியபிறகு தொடர்ந்து ஐந்து அரைசதம் அடித்துள்ளார்.

ஹர்டிக், குருனால் பந்துகளில் பட்லர் ஒரு ஸ்வீப் சிக்ஸ், ரெண்டு மூனு பவுண்டரி அடித்ததைத் தவிர, பவர்பிளேவில் ராஜஸ்தான் பெரிதாக மிரட்டவில்லை. ஆனாலும், ரன்ரேட் மோசமில்லை. ரஹானே – பட்லர் ஜோடி மிடில் ஓவரில் ரொம்பவும் நிதானமாகவே ஆடியது. இந்த ஜோடியைப் பிரிக்க ரோஹித் பெளலர்களை மாற்றினார்; ஃபீல்டர்களை மாற்றினார். ம்ஹும். பிரிக்க முடியவில்லை. மாறாக, மார்க்கண்டேயா பந்தில் பட்லர் சிக்ஸர் பறக்கவிட, பார்ட்னர்ஷிப் 58 பந்துகளில் 74 ரன்களைத் தொட்டது. ரன்னுக்கும் பந்துக்கும் இடைவெளி குறையாமல் பார்த்துக்கொள்ளும் ரஹானேவின் விக்கெட் தேவையில்லை, பட்லரை அவுட்டாக்க வேண்டும் என நினைத்தபோது அவர் அரைசதம் கடந்திருந்தார். அதேநேரத்தில் ரஹானேவும் அவுட்டாகியிருந்தார். 36 பந்தில் 37 ரன்.

  #MIvRR 

அரைசதம் அடித்தபின் ஹர்டிக் பாண்டியா பந்தில் பவுண்டரி, சிக்ஸர் என பட்லர் வேகமெடுத்தார். வெற்றிக்கான ரன்ரேட் விகிதம் குறைந்தது. பும்ரா வீசிய 15-வது ஓவரில் 4, 6 என மிரட்ட, ராஜஸ்தானின் வெற்றி அப்போதே உறுதியாகி விட்டது. சென்னைக்கு எதிராக 95 ரன்கள் அடித்த பட்லர், இந்தமுறை சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சஞ்சு சாம்சனும் கிடைத்த கேப்பில் பவுண்டரிகள் விரட்ட, மும்பையின் வெற்றி வாய்ப்பு மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. ஹர்டிக் பாண்டியா பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்ட சாம்சன், மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்றபோது அவுட்டானார். ஆனால், அதைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை மும்பை. ஏனெனில், அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் ரசிகர்களைக் கொண்டாட வைத்தார் பட்லர். ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. 94 ரன்கள் எடுத்த பட்லர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement