Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

யாரும் கணிக்கக்கூடாது... ஆனா, ஆட்டையக் கலைச்சிட்டிங்களே அஷ்வின்! #KXIPvRCB

சில நாள்களாக கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை ரசிகர்களெல்லாம் வாயில் இரண்டாம் வாய்ப்பாடும், கையில் கால்குலேட்டருமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். `இவனை அவன் ஜெயிச்சா, அவனை இவன் ஜெயிச்சா...' என எந்நேரமும் எதையோ கூட்டிக் கழித்துப் பார்த்து குழப்பத்திலேயே திரிகிறார்கள். அவர்களை இன்னும் குழப்புவதற்காகவே நேற்று நடந்தது #KXIvsRCB மேட்ச். பாவத்த! #KXIPvRCB

#KXIPvRCB

ஒரு காலத்தில் பெங்களூரு அணிக்காக உசுரைக் கொடுத்து ஆடிய கெயிலை, கொசுறு போலக் கூட வாங்க விரும்பவில்லை ஆர்.சி.பி. `உங்க மேல இருக்க அக்கறைலதானேடா நீங்க நீட்டின இடத்துல பாய்ஞ்சேன். காட்டின இடத்துல மேய்ஞ்சேன். கடைசியில இப்படி பண்ணிட்டீங்களேய்யா' என நொந்து போனார் கிறிஸ் கெயில். `மீனுக்கு தூண்டில் எதிரி, பாம்புக்கு பருந்து எதிரி, போலீஸுக்கு திருடன் எதிரி, ஆனால், ஆர்.சி.பி-க்கு ஆர்.சி.பிகாரன்தான்டா எதிரி. அந்த மாதிரி ஆர்.சி.பி-க்கு எதிரா இந்த சீசன்ல இரண்டு செஞ்சுரி அடிப்பாரு கிறிஸ்டோபர் ஹென்றி' என ஆர்வமாகக் காத்திருந்தார்கள் ஐ.பி.எல் ரசிகர்கள். ஆனால், முந்தைய போட்டியில் `அன்பிரிடிக்டபிள்' அஷ்வினோ அவரை dug out-ல் உட்காரவைத்துவிட, நேற்றைய மேட்ச்சில்தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த சம்பவம் நடந்தேறியது.

#KXIPvRCB

பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முஜீப் உர் ரஹ்மான் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னில் அணியில் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். முன்னாள் ஆர்.சி.பி-யன்கள் கே.எல்.ராகுலும், கெயிலும் பஞ்சாப் அணிக்காக ஓபனிங் இறங்க, உமேஷ் யாதவ் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில், `சோட்டா கில்கிறிஸ்ட்' பார்த்தீப் படேல், கெயில் கொடுத்த கேட்ச்சை கோட்டைவிட்டு கோலியின் கோவத்துக்கு ஆளானார். அந்த ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து, சிரித்த முகத்தோடு அம்பயரிடம் தொப்பியை வாங்கிக் கொண்டு கிளம்பினார் உமேஷ்.

டிம் செளதி வீசிய இரண்டாவது ஓவரில், முதல் ஐந்து பந்துகளையும் கே.ஆர்.ராகுல் டாட் வைக்க, `டேய், அந்த அருவாளை எடு...' ரியாக்‌ஷன் கொடுத்தார் ஷேவாக் . கடைசிப் பந்தில், ஸ்கொயர் லெக் திசையில் ராகுல் ஒரு சிக்ஸரை விளாசியதும்தான் `சரி சரி, அருவா இப்போ தேவைப்படாது. தேவைப்பட்டா பின்னால வாங்கிக்குறேன்' என அமைதியானார். செளதி வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் மூன்று பவுண்டரிகளை முறையே கவர், மிட் விக்கெட் மற்றும் மிட் ஆஃப் திசையில் விளாசினார். அணியின் ரன் ரேட் கொஞ்சம் கொஞ்சமாய் உயர ஆரம்பித்தது. எங்கே `மீனுக்கு தூண்டில் எதிரி' பன்ச் டயலாக் மறுபடியும் உண்மையாகிவிடுமோ என பயந்துபோனார்கள் ஆர்.சி.பி.ரசிகர்கள். 

#KXIPvRCB

இந்த சீசனில் ஷார்ட் பந்துகளை எல்லாம் பாப்பா பந்துகளாக டீல் செய்து பவுண்டரிகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்த கே.எல்.ராகுல் - 21 (15), ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் உமேஷ் வீசிய ஷார்ட் பந்தில் டீப் ஸ்கொயரில் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்குத் திரும்பினார். ராகுல் அவுட்டாகி இரண்டாவது பந்திலேயே பவுண்டரி விளாசி பஞ்சாப் ரசிகர்களை கூல் செய்த கெயில் - 18 (14), அடுத்த பந்திலேயே சிராஜிடம் கேட்ச் கொடுத்து பெங்களூரு ரசிகர்களை கூல் செய்தார். அடுத்ததாக, `அன்பிரிடிக்டபிள்' அஷ்வின் களமிறங்குவார் என ஆர்.சி.பி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அன்பிரிடிக்டபிளாக ஆரோன் ஃபின்ச்சை களமிறக்கினார். அடுத்த ஓவரிலேயே கருண் நாயரின் - 1 (3) விக்கெட்டை கழட்டினார் சிராஜ். ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த கோலி அருமையான கேட்ச் பிடித்தார். இனி, கொஞ்ச நாள்களில் தியேட்டரில் ஒளிபரப்பாகும் `ஸ்லிப்பில் நின்றுகொன்டிருந்த நான்' விளம்பரத்தில் விராட் நடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு அருமையான கேட்ச்.

#KXIPvRCB

அதன் பிறகு, பஞ்சாப் ரன்னே அடிக்கவில்லை, விக்கெட்களைத்தான் ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருந்தது. ஏழாவது ஓவரில், மார்கஸ் ஸ்டாய்னிஸுக்கு - 2 (3) யார்க்கர் வீசி போல்டாக்கினார் ஸ்பின்னர் சாஹல்! பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் வரிசையாக அவுட்டாகிக் கொண்டேயிருக்க, கடைசி பேட்ஸ்மென் வரை எல்லோருமே முன்கூட்டியே க்ளவுஸ், ஹெல்மெட் அணிந்து ரெடியானார்கள். ஒன்பதாவது ஓவரில், கிராந்தோம் வீசிய பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர் மயங் அகர்வால் - 2 (6). மறுபுறம், எதைப் பற்றியும் கவலைப் படாமல், கண்ணும் கருத்துமாக கடமையாற்றிக் கொண்டிருந்த ஃபின்ச் - 26 (23), மொயின் அலி பந்தில் கோலியிடம் டீப்பில் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். இறுதியாக, டை, மோகித் சர்மா, ராஜ்பூட் ஆகியோர்  0,3,1 என தங்களால் முடிந்த பங்களிப்பை பாக்கெட்டிலிருந்து எடுத்து அணிக்கு வழங்க, மொத்தம் 88 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆனது பஞ்சாப் அணி.

`யுவ்ராஜ் டீம்ல சும்மாவே இருந்தாலும், டீம் ஜெயிச்சுட்டு இருந்தது. அவரை உட்கார வெச்சதுக்குப் பிறகு டீம் தோத்துட்டே இருக்கு. ப்ச்ச்...' என வருத்தமுடன் எழுந்து சென்றார் ஒரு யுவ்ராஜ் ரசிகர். 

#KXIPvRCB

89 தான் இலக்கு என்றாலும், 49 ரன்களுக்கே ஆல் அவுட் ஆன கதையெல்லாம் வரலாற்றில் இருப்பதால் ஆராவாரமில்லாமல் அமைதியாகவே இருந்தார்கள் ஆர்.சி.பி.ரசிகர்கள். `சோட்டோ கில்கிறிஸ்ட்' பார்த்தீவ் படேல் `சோட்டோ ஹைடனா'க உருமாறி, கேப்டன் கோலியோடு ஓபனிங் இறங்கினார். எங்கே ராகுலையும் ஃபின்ச்சையும் பந்துபோட விட்டு, கெயிலை கீப்பிங் நிற்கவைத்து `அன்பிரிடிக்டபிள்' அஷ்வின் வித்தியாசமாக ஏதாவது முயற்சிப்பார் என எதிர்பார்த்தார்கள் ஆர்.சி.பி. ரசிகர்கள். ஆனால், அஷ்வினேதான் முதல் ஓவரை வீசினார். கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி உட்பட ஒன்பது ரன்கள் கிடைத்தது. அதன்பிறகு, பவர் ப்ளேயை நன்றாக பயன்படுத்திக் கொண்ட பார்த்தீவும் கோலியும் 92 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்து 8.1 ஓவரில் மேட்சை முடித்துவிட்டு, கைகொடுத்துவிட்டு கிளம்பினர்.

(கோலி - 48 (28), பார்த்தீவ் - 40 (22) ).  கோலி 40-களில் இருக்கும்போது, அவர் அரைசதம் எடுக்க வாய்ப்பு கொடுக்காமல், கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு விரட்டி தனியாக கடை போட்ட பார்த்தீவ் மீண்டும் கோலியின் கோபத்துக்கு ஆளாகியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பேட்டிங்கில் கெயில் - கே.எல்.ராகுல், பெளலிங்கில் முஜீப் உர் ரஹ்மான் என மூன்று பேரைத்தான் மொத்த பஞ்சாபும் இமாலய மலையென நம்பியிருக்கிறார்கள். கோப்பைதான் லட்சியம் என்றால், நிச்சயம் ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக பங்காற்ற வேண்டும். ஆர்.சி.பி அணிக்கு இன்னமும் ப்ளே ஆஃபுக்குள் நுழைய, மெல்லிய வாய்ப்பிருக்கிறது. அதற்கு, அடுத்து வரும் போட்டிகளில் அவர்கள் வென்றாக வேண்டும். இனி சென்னை ஆடும் மேட்ச்கள் மட்டுமல்ல, எல்லா மேட்ச்சும் ஹார்ட் அட்டாக் மேட்ச்கள்தான்!

ஒரே ஓவரில் ராகுல் மற்றும் கெயிலின் விக்கெட்களைக் கைப்பற்றிய உமேஷ் யாதவுக்கு (4-0-23-3) ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் ஆர்.சி.பி புள்ளிகள் பட்டியலில் ஒரு இன்ச் கூட நகரவில்லை. அதே ஏழாவது இடத்தில் இருக்கிறது என்றாலும் நெட் ரன் ரேட் -0.26-ல் இருந்து +0.218 என மாறியிருப்பது அவர்களுக்கு போனஸ். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement