வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (21/05/2018)

கடைசி தொடர்பு:18:46 (21/05/2018)

மொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்... எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்! #FACupFinalِ

மொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்... எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்! #FACupFinalِ

87,000 ரசிகர்கள் கூடியிருந்த வெம்ப்ளே மைதானத்தில் நடந்த, எஃப்.ஏ கப்  (Football Association Cup) ஃபைனலில், மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி, எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது செல்சீ அணி. அனல் பறந்த இந்த ஆட்டத்தில், வெற்றியை நிர்ணயித்த அந்த ஒரேயொரு கோலை, பெனால்டி கிக் மூலம் அடித்தவர் செல்சீயின் லிட்டில் மேஜிஷியன் ஈடன் ஹசார்ட். 

FA Cup Final 2018

கால்பந்து வரலாற்றில் மிகவும் பழைமை வாய்ந்த தொடர்களில் ஒன்று எஃப்.ஏ கப். இங்கிலாந்தில் நடக்கும் ஒரு டொமஸ்டிக் நாக் அவுட் தொடர். கடந்த வருடம் நடந்த ஃபைனலில், செல்சீ அணியைத் தோற்கடித்து 13-வது முறையாக சாம்பியன் ஆனது அர்செனல். கடந்தமுறை விட்ட குறையைத் தீர்க்க செல்சீ அணியும், கோப்பை இல்லாமல் போகக் கூடாது என மான்செஸ்டர் யுனைடெட் அணியும், ஃபைனலில் மல்லுக் கட்டின. இது ஏதோ சாதாரண ஃபைனல் அல்ல, இது அதுக்கும் மேல என உலகமே இந்தப் போட்டியை எதிர்பார்த்தது. காரணம் இரு அணி மேனேஜர்களின் மோதல்கள், வீரர்களுடனான அவர்களின் கருத்து வேறுபாடுகள் மற்றும் டிராஃபி லெஸ் சீஸன் என்ற அவப்பெயரைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் என உலகமே உற்று நோக்கிய ஃபைனல் இது.

Eden Hazard

ஜோசே மொரினியோ, போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர். ரியல் மாட்ரிட், இண்டர் மிலன், எஃப்.சி போர்டோ மற்றும் செல்சீ எனப் பிரதான கிளப்களுக்குப் பயிற்சியளித்த பிதாமகர். அதேசமயம் சர்ச்சைப் பேர்வழி. 2016-ம் ஆண்டிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்குப் பயிற்சியாளராக இருந்து வரும் மொரினியோ, செல்சீ நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறியவர்.

அண்டோனியோ கான்டேவும் லேசுப்பட்டவர் அல்ல. இத்தாலியைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரான இவர் யுவென்டஸ், சியெனா அணிகளுக்குப் பயிற்சியளித்தவர். மேலும், இத்தாலி தேசிய அணிக்கும் மேனேஜராக இருந்த அனுபவம் உடையவர். மொரினியோவை வெளியேற்றிய செல்சீ அணி நிர்வாகம் அவருக்கு மாற்றாக 2016-ல் கான்டேவை ஒப்பந்தம் செய்தது. இவர்கள் இருவருமே செல்சீ அணியை பிரிமீயர் லீக் சாம்பியனாக்கிய பெருமை உடையவர்கள். 

செல்சீ சாம்பியன்!

இருவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். மொரினியோ, கான்டேவை `கோமாளி’ என்றார். பதிலுக்கு, `மொரினியோவுக்கு மன நோய்’ என்றார் கான்டே. மொரினியோ ஒருபடி மேலே போய், சியெனா கிளப் பயிற்சியாளராக இருந்த காலத்தில் நடந்த கான்டேவின் பழைய மேட்ச் ஃபிக்சிங் கதையைக் கிளறிவிட, ஆங்கில மீடியாக்கள் ஏகத்துக்கும் உற்சாகமாகின. கடுப்பான கான்டே, மொரினியோவை `லிட்டில் மேன்’ எனக் கூற, `கான்டேவைப் பற்றிப் பேசி என் தலைமுடியை இழப்பதை விரும்பவில்லை’ என வெறுப்பேற்றினார் மொரினியோ.

இத்தாலியில் இருந்தபோதே இருவருக்கும் இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள். இந்த சீசனிலும் விரோதம் தொடர்ந்தாலும், ஒரு வழியாக இருவரும் சமாதானம் அடைந்தனர். ``சண்டையிட்டு சோர்வடைந்துவிட்டோம். இருவரும் இனி சமாதானமாகப் போகிறோம்” எனக் கடந்த பிப்ரவரியில் செல்சீயை வென்றதும் அறிவித்தார் மொரினியோ. `நல்ல அணியே வெற்றி பெற்றது’ எனக் கான்டேவும் அடக்கிவாசிக்க, பிரச்னை அடங்கியது.

ஆனால், இப்போதைய ஃபைனலுக்கான கதை இந்தப் பிரச்னை மட்டுமல்ல. டொமஸ்டிக் கப் வெற்றியுடன் சீசனை முடிக்கப் போவது யார் என்பதும், யாருக்குப் பயிற்சியாளர் பதவி பறிபோகப்போகிறது என்பதுமே தலையாயப் பிரச்னையாக இருந்தது. எனவே, ஃபைனலில் வெற்றி என்பது இருவருக்குமே அவசியமானதாக இருந்தது. மேலும், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்துடனான இருவரின் உறவுகளுமே  விமர்சிக்கப்படுகின்ற நிலையில் இது ஒரு வாழ்வா, சாவா போராட்டம்தான்.

FA Cup Final 2018

மொரினியோவுக்கு இது சாதகமான சீசன் அல்ல. தன் சக ஊர் ரைவல் கிளப்பான மான்செஸ்டர் சிட்டி, பெப் கார்டியோலாவின் சிறப்பான பயிற்சியின் கீழ் பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்ட நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணியால் இரண்டாவது இடத்திலிருந்து அதை வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. சாம்பியன்ஸ் லீக் தொடரிலும், தன்னைக்காட்டிலும் சிறிய அணியான, ஸ்பெயின் நாட்டு கிளப் செவியாவிடம் தோற்று வெளியேறியது. `சர் அலெக்ஸ் ஃபெர்குசன் தலைமையில் வெற்றிநடை போட்ட கிளப்புக்கு, இப்படி ஒரு நிலைமையா?’ எனப் பரிதாபப்படும் அளவுக்கு மோசமானது யுனைடெட்  நிலைமை. 

மொரினியோவின் வீரர்களுடனான கருத்து வேறுபாடு, அணித் தேர்விலும் வெளிப்பட்டது. பால் போக்பாவுடனான பிரச்னை ; லூக் ஷா, ஹெரேரா, பிளைண்ட் மற்றும் பெய்லி ஆகியோரை தொடர்ந்து புறக்கணிப்பது மற்றும் ஃபார்ம் அவுட் மட்டிச், ஃபில் ஜோன்ஸுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிப்பது என ஏகப்பட்ட சர்ச்சைகள். ஆனாலும், அலட்டிக் கொள்ளவில்லை மொரினியோ, எல்லாவற்றிற்கும் காரணங்கள் சொல்லிப் பழக்கப்பட்டவர் அவர். மேலும், எப்படியாவது இந்த ஃபைனலில் வென்றுவிட்டால் ஒரு கோப்பையை வென்றாவது இந்த சீசனை வெற்றிகரமாக முடித்துக்கொள்ளலாம் என்பது அவர் கணக்கு. அவரது எதிர்காலத் திட்டத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. ஏனெனில், அடுத்த சீசனிலும் அவர்தான் மான்செஸ்டர் யுனைடெட் மேனஜேர். ஆனால், கான்டேவின் நிலைமையோ வேறு.

FA Cup Final 2018

கான்டேவுக்கும் இந்த சீஸன் சாதகமானதாக இல்லை. கடந்த சீசனின் பிரீமியர் லீக் சாம்பியன் செல்சீ. ஆனால், இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை டிஃபெண்ட் செய்யும்படியாக அந்த அணியின் ஆட்டம் இல்லை. எதிர்பாராத சில தோல்விகள் அந்த அணியின் லீக் சாம்பியன் கனவைத் தள்ளிப்போட, சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் பார்சிலோனாவிடம் தோற்று வெளியேறியது செல்சீ. கடைசி நேரத்தில் பெற்ற தோல்விகளால், புள்ளிப்பட்டியலிலும் ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு, அடுத்த சீசனுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதி பெறத் தவறியது. கான்டேவும் வீரர்கள் தேர்வில் பல தவறுகள் செய்தார். கடந்த சீசனில் செல்சீ சாம்பியனாக முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் டியாகோ கோஸ்டாவும் ஒருவர். கான்டேவுக்கும் அவருக்கும் பிடிக்காமல் போக, பல போட்டிகளில் அவரை பெஞ்சில் அமரவைத்தார். ஆறு மாதங்கள் காத்திருந்த கோஸ்டா, கடந்த ஜனவரியில் தனது பழைய கிளப்பான அட்லெடிகோ மாட்ரிட்டுக்கே சென்றுவிட்டார்.

செல்சீ

முன்னதாக இந்த சீசனின் தொடக்கத்தில் வாங்கப்பட்ட அல்வாரோ மொராட்டாவும், பல போட்டிகளில் சொதப்பிவிட செல்சீ பல போட்டிகளில் வெற்றி பெறாமல் திணறியது. மேலும் சூப்பர் ஃபார்மில் இருந்த வில்லியனையும் பல போட்டிகளில் மாற்று வீரராகவே களமிறக்கினார் கான்டே. விளைவு பிரீமியர் லீக் சாம்பியன் ரேஸிலிருந்து செல்சீ மெள்ள மெள்ள விலகத் தொடங்கியது. தோல்விகளின் எதிரொலியாக கான்டேவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் கிளம்ப, இப்போது அவரின் எதிர்காலமே கேள்விக் குறியாகி விட்டது. இத்தனை நாள் இழுபறியிலிருந்த அவரின் எதிர்காலம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது நிலைமை அவர் கையை மீறிவிட்டது. இந்த சீசனுடன் அவர் வெளியேறப்போவது உறுதியாகிவிட்ட நிலையில், வெற்றியோடு விடைபெற நினைத்தார். 

இருவரின் நிலை, இரு அணி வீரர்களின் நிலை மற்றும் கோப்பையை வென்றாக வேண்டிய இரு அணிகளின் கட்டாய நிலை என ஏகத்துக்கும் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த எஃப்.ஏ கோப்பைக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

தொடக்கம் முதல் இறுதி வரை இரு அணிகளுமே வெற்றிக்காகப் போராடின. இரு அணி வீரர்களுமே பந்தை எடுப்பதும், அட்டாக் செய்வதும் பின் எதிரணி டிஃபெண்டர்களிடம் பந்தைக் கொடுப்பதுமாக இருந்தனர். குறிப்பாக, இரு அணிகளுமே டிஃபென்ஸில் அள்ளு கிளப்பினர். செல்சீ  3-5-1-1 ஃபார்மேஷனுடனும் மான்செஸ்டர்  யுனைடெட் 4-3-3 ஃபார்மேஷனுடனும் களமிறங்கினர். இரு அணிகளுமே சம பலத்துடன் காணப்பட்டதால் வெற்றி தோல்வி யாருக்கு என்பதை எளிதாகக் கணிக்க முடியவில்லை.

முதல் பாதியைக் காட்டிலும், இரண்டாம் பாதியில் யுனைடெட் வீரர்கள் அடிக்கடி செல்சீ கோல் கம்பத்தை முற்றுகையிட்டனர். ஆனாலும், செல்சீயின் டிஃபென்ஸைத் தாண்டி, அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. மீறி வந்த ஓரிரு பந்துகளையும் தடுத்து மலைபோல் நின்றார் செல்சீ கீப்பர் கோர்டுவா. அதிலும் 56-வது நிமிடம் ராஷ்ஃபோர்டு அடித்த லாங் ஷாட்டையும், 63-வது நிமிடம் ஃபில் ஜோன்ஸ் அனுப்பிய ஹெடரையும் தடுத்த அந்த லாகவம், `கோர்டுவா யூ பியூட்டிஃபுல்”. பிரீமியர் லீக்கின் சிறந்த கோல்கீப்பரான யுனைடெட் அணியின் டேவிட் டி கயா தன் வேலையைக் கச்சிதமாய் செய்தாலும், களத்தில் வென்றதென்னவோ செல்சீயின் கோர்டுவாதான்.

ஏனென்றால் அவர்தான் செல்சீயின் ஆதர்ச பலம், நம்பிக்கை எல்லாம். போக்பா, ராஷ்ஃபோர்டு, ஆஸ்லே யங் மற்றும் மட்டிச் ஆகியோர் கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்க, யுனைடெட் அணியின் சாம்பியன் கனவுகள் மெள்ள மெள்ளத் தகர்ந்துகொண்டிருந்தன. முன்னதாக அலெக்சிஸ் சான்ச்செஸின் கோல் ஆஃப்சைடு கோலாக அறிவிக்கப்பட்டது, வீடியோ அசிஸ்டெண்ட் ரெஃப்ரி இருந்தும் செல்சீயின் இரண்டாவது பெனால்டி வாய்ப்பு மறுக்கப்பட்டது.

FA Cup Final 2018

இரு அணிகளையும் வேறுபடுத்திய அந்த ஒரே கோல் ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. செஸ் ஃபேப்ரிகஸ் அனுப்பிய சூப்பர் பாஸை பெற்ற செல்சீயின் ஈடன் ஹசார்ட், யுனைடெட் கோல் பாக்ஸுக்குள் நுழைய, அவரை டேக்கிள் செய்து கீழே தள்ளினார் ஃபில் ஜோன்ஸ். சிவப்பு அட்டையை எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், வெறும் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டார் ஜோன்ஸ். அதன் மூலம் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பந்தை வாங்கிய ஹசார்ட், அதை பாட்டம் ரைட் கார்னருக்கு அனுப்பினார். பந்தைத் தடுக்க தவறுதலாக எதிர் திசையில் யுனைடெட் கீப்பர் டேவிட் டி கயா பாய, செல்சீ 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

மேற்கொண்டு கோல்கள் எதும் அடிக்கப்படாததால் ஆட்ட முடிவில் செல்சீ வெற்றி பெற்றது. தனது 300-வது போட்டியில் `லிட்டில் மேஜிஷியன்’ ஹசார்ட் கோல் அடிக்க, எட்டாவது முறையாக இத்தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது செல்சீ. ஒருவேளை செல்சீ மேனேஜராக கான்டேவுக்கு இதுதான் கடைசி போட்டியாக இருக்குமென்றால், அவர் நிம்மதியாக இனி அடுத்த கிளப்புக்குச் செல்லலாம். ஏனெனில், அவர் வீழ்த்திய மொரினியோ சாதாரண பயிற்சியாளர் அல்ல; அவர் வீழ்த்திய மான்செஸ்டர் யுனைடெட் அணி சாதாரண கிளப்பும் அல்ல!


டிரெண்டிங் @ விகடன்