வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (26/05/2018)

கடைசி தொடர்பு:15:45 (27/05/2018)

மொராட்டா, டேனி ஆல்வ்ஸ், இகார்டி... உலகக் கோப்பையை மிஸ் செய்யும் ஸ்டார்கள்! #WorldCup

விரைவில் ஆரம்பிக்கப் போகிறது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா. ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை, ஒரு மாதம் ரஷ்யாவில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கவுள்ள 32 அணிகளும், 23 பேர் கொண்ட தங்களின் இறுதி வீரர்கள் பட்டியலை அறிவித்துக் கொண்டிருக்கிறன. இந்நிலையில், உலகின் பல சிறந்த வீரர்களும் கூட, தங்களது தேசிய அணியில் இடம் பிடிக்காமல் போயிருப்பது, கால்பந்து உலகில், பல ஆச்சர்யங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இந்தத் தொடரை மிஸ் செய்யப்போகும் அந்த ஸ்டார்கள் யார்?

உலகக் கோப்பை

ஸ்பெயின்

2010 உலகக் கோப்பை சாம்பியனான ஸ்பெயின் அணியில், ஸ்டார் வீரர்களுக்கு எப்போதும் பஞ்சமென்பதே கிடையாது. ஸ்பெயின் உட்பட, உலகின் டாப் கிளப்புகளில் விளையாடும் ஸ்பெயின் வீரர்கள் அனைவருமே, நிச்சயம் தங்கள் தேசிய அணியில் இடம் பிடித்துவிடுவர். ஆனால்,  இறுதி வீரர்கள் பட்டியலை ஸ்பெயின் பயிற்சியாளர் அறிவித்தபோது, அதில் பல ஸ்டார்கள் மிஸ்ஸிங்!

அல்வாரோ மொராட்டா, ஸ்பெயினின் இளம் ஸ்ட்ரைக்கர். கடந்த வருடம் வரை ரியல் மாட்ரிட் அணிக்காக அசத்தி வந்த 24 வயதான மொராட்டாவை, அதிக எதிர்பார்ப்புகளோடு வாங்கியது இங்கிலாந்தின் டாப் கிளப்பான செல்சீ. ஆனால், ஓப்பனிங்கில் கெத்து காட்டி கோல்கள் அடித்த அவரால், சீசனின் இறுதிவரை அந்த ஃபார்மை தக்கவைக்க முடியாமல் போக, அது உலகக் கோப்பையில் அவரது இடத்துக்கே வினையாகி விட்டது. பிரீமியர் லீக்கில் வெறும் 11 கோல்கள் மட்டுமே அடித்துள்ள அவருக்கு வேர்ல்ட் கப் அணியில் இடம் கிடைக்கவில்லை.

மொராட்டா

மொராட்டாவைப் போலவே செல்சீ அணிக்காக விளையாடிவரும், அனுபவ மிட்ஃபீல்டர்களான, செஸ் ஃபேப்ரிகாஸ் மற்றும் பெட்ரோ ஆகியோரின் பெயர்களும் மிஸ்ஸிங். மிட்ஃபீல்ட் ஜாம்பவான்களான இனியெஸ்டா, செர்ஜியோ புஸ்கட்ஸ் மற்றும் டேவிட் சில்வா ஆகியோர் ஏற்கெனவே தங்களது இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், நடுகளத்தில் இடம்பெற மட்டுமே ஸ்பெயினில் கடும் போட்டி நிலவியது. அதனால் சுமாரான ஃபார்மில் இருந்த இருவரும் அணியில் சேர்க்கப்படவில்லை.

அதைப்போலவே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் யுவான் மாடா மற்றும் ஆண்டர் ஹெரேரா, அர்செனல் இளம்புயல் ஹெக்டர் பெல்லரின் மற்றும் பார்சிலோனாவின் 'வெர்சடைல்' செர்ஜி ராபெர்டோ ஆகியோரும் இந்தத் தொடரை மிஸ் செய்ய உள்ளனர்.

இங்கிலாந்து

1966 உலகக் கோப்பை சாம்பியனான இங்கிலாந்து, தனது அனுபவ கீப்பரான ஜோ ஹார்ட்டையே இந்த உலகக் கோப்பைத் தொடரில் புறக்கணித்திருக்கிறது. ஆனால், பல வருடங்களாக ஃபார்ம் இல்லாமல், தொடர்ந்து சொதப்பி வருகிற ஹார்ட், இந்த சீசனில் வெஸ்ட் ஹாம் அணிக்கு லோன் ஆப்ஷனில் விளையாடினார். வெறும் 19 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஹார்ட், இங்கும் சொதப்ப,  அணியிலிருந்து கழட்டிவிட்டுள்ளார் இங்கிலாந்து மேனேஜர் கெரத் சவுத்கேட்.

பிரேசில்    

இந்த உலகக் கோப்பையின் நம்பர் ஒன் ஃபேவரிட், நிச்சயம் `ஆல் ஸ்டார்’ டீமான பிரேசில் தான். லிஸ்டில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவருமே, உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் தான் என்றாலும் கூட, பிரேசிலும் தங்கள் ஸ்டார் பிளேயர்கள் சிலரை இந்த உலகக் கோப்பையில் மிஸ் செய்யப் போகிறது.

dani alves

டேனி ஆல்வஸ், உலகின் சிறந்த ரைட் பேக். பிரான்சின் லீக் ஒன் சாம்பியனான, பிஎஸ்ஜி அணிக்காக விளையாடிவரும் 35 வயதான டிஃபெண்டர். டிஃபென்ஸ் மட்டுமல்லாமல், அட்டாக்கிலும் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஆனால், ஃபிரெஞ்ச் கப் ஃபைனலில்போது, முழங்காலில் காயம் அடைந்த டேனி ஆல்வஸ், ஒரு மாதத்துக்கும் மேல் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். எனவே, 2006 முதல் பிரேசில் தேசிய அணியில் தவறாமல் இடம் பிடித்துவரும் அவர், வேறு வழியின்றி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது பிரேசில் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் ஒரு நிகழ்வு. அவரைப் போலவே, மற்றொரு சிறந்த டிஃபெண்டரான, செல்சீயின் டேவிட் லூயிஸின் பெயரும், பிரேசில் மேனேஜரான டிடே அறிவித்த இறுதி வீரர்கள் லிஸ்டில் இடம் பெறவில்லை. 

அர்ஜெண்டினா

2014 உலகக் கோப்பை மாதிரி இல்லாமல், இந்தமுறை துண்டை தவறவிட்டுவிடக் கூடாது என்ற கனவிலிருக்கிறது அர்ஜெண்டினா. லியோ மெஸ்சி, அக்வேரோ, ஹிகுவைன் மற்றும் டிபாலா என பார்த்துப் பார்த்து, பயிற்சியாளர் ஜோர்ஜ் சம்போலி தன் அட்டாக்கிங் லைனை செதுக்கியிருந்தாலும், இன்டர் மிலன் கேப்டனான மாரோ இகார்டியை அவர் புறக்கணித்திருப்பது, பலவித விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

மாரோ இகார்டி, 29 வயதான ஸ்டிரைக்கர். இன்டர் மிலன் அணியின் கேப்டன். இத்தாலியின் சீரி ஏ தொடரில், 33 போட்டிகளில் விளையாடி 29 கோல்கள் அடித்துள்ள அவர், இந்த சீசனின் இன் ஃபார்ம் ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர்; தொடரின் டாப் ஸ்கோரரும் அவரே தான். ஆனால் உலகக் கோப்பையில் விளையாடும் தகுதியற்றவர் என சம்போலியால் அவர் நிராகரிக்கப்பட்டிருப்பது தான் வேதனையின் உச்சம். 2016 க்கு பிறகு, அர்ஜெண்டினாவுக்காக ஒரு கோல் கூட அடிக்காத, ரசிகர்களால் ஃபார்ம் அவுட் என விமர்சிக்கப்படும் ஹிகுவைனை தேர்வு செய்திருக்கும் சம்போலி, ஃபுல் ஃபார்மில் இருக்கும் இகார்டியை கழற்றிவிட்டிருப்பது நிச்சயம் அர்ஜெண்டினாவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.

icardi

தான் ஜீனியஸ் என்ற பெயரெடுக்க, மேலும் ஒரு பரிசோதனை முயற்சியாக, போக்கா ஜூனியர்ஸ் அணியின் இளம் வீரரான கிறிஸ்டியன் பவோனை அவர் தேர்வு செய்திருப்பது சர்ச்சையை வலுப்படுத்துகிறது. இகார்டி நிச்சயம் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு வீரர். ``ஒருவேளை சம்போலி மற்றும் மெஸ்சியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளே, இந்த அதிர்ச்சியான நிராகரிப்பின் காரணங்களாக இருக்கலாம்" என அர்ஜெண்டினா முன்னாள் வீரரான ஹெர்னன் கிரெஸ்போ கருத்து தெரிவித்துள்ள நிலையில், தனது கனவுகளும், நம்பிக்கைகளும் சிதைந்து போனது என இந்த நிராகரிப்பு குறித்து, இன்ஸ்டாகிராமில் தனது வருத்தத்தை பதிவுசெய்திருக்கிறார் இகார்டி.

அர்ஜெண்டினாவின் நம்பர் ஒன் கோல்கீப்பரான செர்ஜியோ ரோமெரோ, இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், திடீரென அவர் காயத்தால் விலகியுள்ளது அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெல்ஜியம்

கடந்த 2014 உலகக் கோப்பையின் `black horses' என வர்ணிக்கப்பட்ட அணி பெல்ஜியம். அதற்கேற்ப காலிறுதி வரை முன்னேறியது. ஆனால், இம்முறை அந்த அணியின் மிட்ஃபீல்டர் நெய்ன்கோலன் காரணமே இல்லாமல் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சியில், சர்வதேச கால்பந்திலிருந்து தான் ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்துவிட்டார் அவர்.

30 வயதான ரட்ஜா நெய்ன்கோலன், இத்தாலி நாட்டு கிளப்பான ரோமாவின் முக்கியமான பிளேயர்களில் ஒருவர். சாம்பியன்ஸ்லீக் தொடரின் அரையிறுதி வரை ரோமா முன்னேற, முக்கிய காரணமாகவும் இருந்தவர். ரோமாவுக்காக இந்த சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் அவருக்கும், பெல்ஜியத்தின் பயிற்சியாளரான ராபர்டோ மார்டினெஸுக்கும் இடையில் நல்லுறவு இல்லாததுதான், இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து நைங்கோலன் வெளியேற்றப்படக் காரணமே.

nainggolan

``அவர் கிளப்புக்காக(ரோமா) முக்கியமான வீரராக இருக்கலாம், ஆனால் என் உத்திகளில் அவருக்கு இடம் இல்லை” என மார்டினெஸ் கை விரித்துவிட, ”என் சர்வதேச கரியர் இத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது” என்று வருத்தத்துடன் அறிவித்து விட்டார் நெய்ன்கோலன்.
தனது பெர்சனல் பிரச்னைகளுக்காக ஒரு சிறந்த வீரரை, சப்பைக்கட்டு கட்டு வெளியேற்றியிருக்கும், பெல்ஜியம் பயிற்சியாளர் மார்டினெஸின் செயல் வருத்தமளிக்கக் கூடிய ஒன்று; அதே சமயத்தில் கண்டிக்கப் படவேண்டிய ஒன்றும் கூட.

பிரான்ஸ்

1998 உலகக் கோப்பை சாம்பியனான ஃபிரான்ஸ், இந்தமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஓசுமான் டெம்பெலே, கிலியன் எம்பாப்பே, தாமஸ் லெமார் மற்றும் நபில் ஃபெக்கிர் என, மற்ற அணிகளைக் காட்டிலும் இளம் வீரர்கள் இங்கு அதிகம். எனவே, ஃபிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஸ்காம்ப்ஸ் அறிவித்த இறுதி வீரர்கள் லிஸ்டில், பல முக்கியமான சீனியர் வீரர்களின் இடம் பறிபோனது அதனால்தான். 

அலெக்சாண்ட்ரே லக்கஸெட், சென்ற வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு ஃபிரான்ஸின் ஒலிம்பிக் லியானிலிருந்து, இங்கிலாந்தின் அர்செனலுக்கு பறந்த 26 வயது ஸ்டிரைக்கர். ஆனால், ஃபிரான்ஸில் 'மோஸ்ட் வான்ட்டட்' ஸ்ட்ரைக்கராக அவருக்கு இருந்த மதிப்பு, இங்கிலாந்தில் கிடைக்கவில்லை. எப்போது இங்கிலாந்துக்கு வந்தாரோ அப்போதே அவரின் உலகக் கோப்பை கனவுகளும் கலையத் தொடங்கிவிட்டிருந்தன. ஏனென்றால், பிரீமியர் லீக்கில் இந்த சீசனில் 32 போட்டிகளில் வெறும் 14 கோல்கள் மட்டுமே அடிக்க, உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோனது.

lacazette

அதேபோல், மான்செஸ்டர் சிட்டி அணியால் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ”காஸ்ட்லி டிஃபெண்டர்” 23 வயதான அய்மெரிக் லபோர்டேவுக்கும், உலகக் கோப்பை அணியில் இடமளிக்கவில்லை ஃபிரான்ஸின் மேனேஜரான டெஸ்காம்ப்ஸ். மேலும், மான்செஸ்டர் யுனைடெட்டின் அந்தோணி மார்ஷியல், மற்றும் ரியல் மாட்ரிட்டின் நம்பர் 9 கரிம் பென்சிமா, யூரோ நாயகன் டிமிட்ரி பயட் ஆகியோரும் கூட இந்த உலகக் கோப்பையில் விளையாடப் போவதில்லை.
 
போர்ச்சுக்கல்

`ரியல் மாட்ரிட் சூப்பர்ஸ்டார்’  கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணியிலும் பல சீனியர் ஸ்டார்கள் மிஸ்ஸிங். கடந்த 2016 ல், யூரோ கப் அடித்த போர்ச்சுக்கல் அணியிலிருந்த, பல முக்கியமான அனுபவ கம் இளம் வீரர்கள், இந்த உலகக் கோப்பைக்கான பட்டியலில் இல்லை.  

யூரோ கப் தொடரில், சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் ரெனாடோ சான்ச்செஸும் ஒருவர். அந்த தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை வாங்கியதும் அவரே. ஜெர்மனியின் பேயர்ன் முன்ச் அணியிலிருந்து, லோன் மூலம் இங்கிலாந்தின் ஸ்வான்சீ அணிக்கு வந்த மிட்ஃபீல்டரான சான்செஸ், அங்கு சொதப்பிவிட, இப்போது உலகக் கோப்பை வாய்ப்பு அவருக்கு மிஸ் ஆகி விட்டது. அதேபோலவே, யூரோ கப் பைனலில் வெற்றிக்கான கோல் அடித்த `சூப்பர் ஹீரோ’ எடரும், போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸால் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, போர்ச்சுகலின் அனுபவ வீரர்கள் நானி மற்றும் பார்சிலோனா வீரர்களான ஆண்ட்ரே கோமெஸ் மற்றும் நெல்சன் செமெடூ ஆகியோரும் இந்த உலகக் கோப்பையில் தங்களுக்கான இடங்களை இழந்துவிட்டனர்.

sanches

பெரு
பெரு அணியின் கேப்டன் பாவ்லோ கரேரா போதை மருந்து விவகாரத்தில் சிக்கியதால், நடக்கவுள்ள உலகக் கோப்பையில் பங்கேற்கப் போவதில்லை. பெருவின் `ஆல் டைம்’ டாப் ஸ்கோரரான அவர், கடந்த அக்டோபரில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, கால்பந்து போட்டிகளில் விளையாட தடைபெற்றார். ஃபிஃபாவின் ஒரு வருட தடையை அப்பீல் செய்து குறைத்த அவர், ஆறு மாதங்கள் விளையாடத் தடைபெற்ற நிலையில், பின்னர் அந்த தடையை 14 மாதங்களாக நீட்டித்து தீர்ப்பளித்தது, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (சிஏஎஃப்). எனவே, தனது டாப் ஸ்கோரரை இழந்த பெருவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவுதான்.

இந்த உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தாலும், இவர்கள் அனைவருமே, தங்கள் அணிகளின் வெற்றிக்காகவும், நடக்கவிருக்கும் உலகக் கோப்பையில், தங்களது அணியை வெற்றிபெறவைத்து, சாம்பியனாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அணியில் இடம்பெறக் கடுமையாக உழைத்தவர்கள். அவர்கள் உலகக் கோப்பையை மிஸ் செய்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் உலகக் கோப்பை அவர்களை மிஸ் செய்யப் போகிறது.


டிரெண்டிங் @ விகடன்