வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (26/05/2018)

கடைசி தொடர்பு:19:30 (26/05/2018)

`நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த மைதானம்!’ - கங்குலி பெருமிதம்

நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த மைதானமாக கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

கங்குலி

Photo Credit: Twiitter/@SGanguly99

உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் போட்டிகளுள் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில், இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. 

சென்னை அணியுடனான தகுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணி, எலிமினேட்டரில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தத் தொடரில் சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதும் 4-வது போட்டி இதுவாகும். ஏற்கெனவே லீக் சுற்றுப் போட்டிகள் இரண்டு மற்றும் தகுதிச் சுற்றுப் போட்டி என மூன்று போட்டிகளிலும் சென்னை அணி வென்றிருக்கிறது. 

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த மைதானமாக கொல்கத்தா ஈடர்ன்கார்டன் மைதானம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இதுகுறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் முன்பாகவே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தப் பெருமை கிடைப்பதற்காகப் பாடுபட்ட மைதான பராமரிப்பாளர்கள் முதல் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கங்குலி கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 9 போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சென்னை அணியின் ஹோம் கிரவுண்டாக புனே மைதானம் மாற்றப்பட்டதால், அங்கு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த எலிமினேட்டர் போட்டிகள், கொல்கத்தா மைதானத்துக்கு மாற்றப்பட்டன.