வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (27/05/2018)

கடைசி தொடர்பு:10:53 (27/05/2018)

நான்காவது முறை ஐதராபாத்தை வெல்ல தோனிக்கு கைகொடுக்கும் 7 வியூகங்கள்! #CSKvSRH PREVIEW

சென்னையின் பலம் எதுவோ அதுதான் ஐதராபாத்தின் பலவீனம். ஐதராபாத்தின் பலம் எதுவோ அதுதான் சென்னையின் பலவீனம். பேட்டிங்கில் ஸ்ட்ராங்கான சென்னை அணிக்கும், பெளலிங்கில் ஸ்ட்ராங்கான ஐதராபாத்துக்கும் இடையேயான இன்றைய மோதலில் யார் வெற்றிபெறுவார்கள் என்று யாராலும் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது.

நான்காவது முறை ஐதராபாத்தை வெல்ல தோனிக்கு கைகொடுக்கும் 7 வியூகங்கள்! #CSKvSRH PREVIEW

2018 ஐபிஎல்-ன் இறுதி நாள் இன்று. தோனியா, கேன் வில்லியம்சனா... வெல்லப்போவது ஐதரபாத்தா, சென்னையா? கலாநிதி மாறனா, சீனிவாசனா என்கிற கேள்விகளுக்கு விடை சொல்லும் நாள் இது. ஐதராபாத், சென்னை என இரண்டு வெவ்வேறு நகரங்கள் மோதுவதுபோல் இருந்தாலும் இது இரண்டு தமிழர்களுக்கு சொந்தமான அணிகளுக்கு  இடையே நடக்கும் மோதல்தான்.
சென்னையின் பலம் எதுவோ அதுதான் ஐதராபாத்தின் பலவீனம். ஐதராபாத்தின் பலம் எதுவோ அதுதான் சென்னையின் பலவீனம். பேட்டிங்கில் ஸ்ட்ராங்கான சென்னை அணிக்கும், பெளலிங்கில் ஸ்ட்ராங்கான ஐதராபாத்துக்கும் இடையேயான இன்றைய மோதலில் யார் வெற்றிபெறுவார்கள் என்று யாராலும் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. 

 

CSKVsSRHகேப்டனாக கேன் வில்லியம்சனுக்கு இது முதல் ஐபிஎல் ஃபைனல். ஆனால் கேப்டனாக தோனிக்கு இது ஏழாவது ஃபைனல். இதில் இரண்டு வெற்றிகளையும், 4 போட்டிகளில் தோல்வியையும் கேப்டனாக சந்தித்திருக்கிறார் தோனி.  ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அனுபவம் வாய்ந்த கேப்டன்  தோனிதான். கூல் கேப்டன் என்று பெயர்பெற்ற தோனி சமீபத்திய சென்னை போட்டிகளில் கொஞ்சம் கோபப்படுவது தெரிகிறது. மாறாக வெற்றியோ தோல்வியை மிகவும் கூலாக இருக்கிறார் கேன் வில்லியம்சன்!


கேன் வில்லியம்சனின் கேப்டன்ஸி!

2018 ஐபிஎல்-ல் ஐதராபாத் இறுதிப்போட்டி வரை வர முக்கியக் காரணம் கேன் வில்லியம்சனின் கேப்டன்ஸியும், அவரது பேட்டிங்கும்தான். இதுவரை இந்த ஐபிஎல்லின் அதிகபட்ச ரன்கள் எடுத்திருப்பவர் கேன்தான். கேப்டன் என்பவன் தனது எந்த முடிவு தோல்விக்குக் காரணமாக அமைந்தது என்பதை ஆராய்ந்து, அதை அடுத்தப்போட்டியில் நடக்காமல் மாற்றிக்காட்டி வெற்றிபெறவேண்டும். அந்தவகையில் சென்னைக்கு எதிரானப் போட்டியில் கேன் வில்லியம்சன் எடுத்த தவறான முடிவுதான் சென்னைக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது. சென்னைக்கு எதிரான போட்டியில் எடுத்த தவறான முடிவை சரிசெய்ததுதான் கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றியைப் பெற்றுத்தந்தது.

முதல் குவாலிஃபையரில் சென்னை 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஹர்பஜன் சிங்கும், டுப்ளெஸ்ஸியும் களத்தில் இருக்கிறார்கள். மூன்று ஓவர்கள் இருக்கின்றன. 18 பந்துகளில் சென்னை 43 ரன்கள் எடுக்க வேண்டும். அன்று தனது முக்கிய பெளலர்களான புவனேஷ்குமார், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா என மூவருக்குமே ஒரு ஓவர் மீதம் இருக்கிறது. புவனேஷ்குமார் 3 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருக்கிறார். அதேப்போல் சித்தார்த் கவுல் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார். சந்தீப் ஷர்மா கொஞ்சம் எக்ஸ்பென்சிவ். 3 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இங்கே அனுபவம் வாய்ந்த கேப்டன் என்ன செய்வாரோ அதை செய்யத்தவறினார் கேன் வில்லியம்சன். 18வது ஓவரை புவனேஷ்குமாருக்கு கொடுத்து ரன்களைக் கட்டுக்குள் வைத்திருந்தால் அடுத்த இரண்டு ஓவர்களில் சென்னைக்கு பிரஷர் இன்னும் கூடியிருக்கும். புவனேஷ்குமார் குமார் ஓவரில் விக்கெட்டுகள்கூட விழுந்திருக்கும். காரணம், அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்தவர் ஹர்பஜன் சிங். ஆனால் கடைசி ஓவர் வரை மேட்ச் போகும் என கேன் வில்லியம்சன் அவராகவே கணித்து கடைசி ஓவரை புவனேஷ்குமாருக்கும், 19வது ஓவரை சித்தார்த் கவுலுக்கும் ஒதுக்கிவிட்டு 18வது ஓவரை பிராத்வெய்ட்டிடம் கொடுத்தார். சந்தீப் ஷர்மாவிடம் கொடுக்காமல் பிராத்வெய்ட்டிடம் கொடுக்க ஓரே காரணம் பிராத்வெய்ட் எக்கனாமிக்கலாக இருந்ததுதான். 2 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். ஆனால் வில்லியம்சனின் கணக்குத் தவறாகப் போனது. பிராத்வெய்ட்டின் 18வது ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுத்து வெற்றியை தன்பக்கம் கொண்டுவந்தது சென்னை.  

CSKVsSRHகொல்கத்தாவுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையரிலும் ஐதரபாத்துக்கு இதே சூழல்தான். 18 பந்துகளில் 39 ரன்கள் கொல்கத்தா அடிக்க வேண்டும். புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், ஷகிப் அல் ஹசன் என மூவருக்கும் ஒரு ஓவர் இருக்கிறது. பிராத்வெய்ட் அதுவரை ஒரு  ஓவர் மட்டுமே வீசியிருக்கிறார். ஆனால் இந்தமுறை ஸ்மார்ட்டாக முடிவெடுத்தார் கேன். 18வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே  கொடுத்தார் குமார். அடுத்த ஓவர் சித்தார்த் கவுல். 1 விக்கெட்டையும் எடுத்து 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார் கவுல். இப்போது கடைசி ஓவரில் 19 ரன்கள்  தேவை. ஸ்பின்னருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரே சரியாக இருக்கும் என பிராத்வெய்ட்டிடம் ஓவரைத்தருகிறார் கேன் வில்லியம்சன். வெறும் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டையும் எடுத்து ஐதராபாத்துக்கு வெற்றியைத்தருகிறார் பிராத்வெய்ட். இதுதான் சரியான கேப்டன்ஸி. 
சென்னையிடம் தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்திருக்கிறார் கேன் வில்லியம்சன். தோனியின் வியூகங்கள் என்னவாக இருக்கும் என்பது கிட்டத்தட்ட கேனுக்குப் புரிந்திருக்கும். நான்காவது தொடர் தோல்விக்கு அவர் நிச்சயம் அவ்வளவு எளிதில் இடம்கொடுக்கமாட்டார் என்பதால் இன்றைய போட்டிக்கு உச்சகட்ட பரபரப்பிருக்கும்.
 

CSKVsSRHதோனியின் ப்ளேயிங் லெவன்?!

அணியை எப்போதுமே யாரும் கணிக்கமுடியாதபடி வைத்திருக்கவேண்டும் என்று நினைப்பவர் தோனி. குறிப்பாக இறுதிப்போட்டிகளில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் தருவார். 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அஷ்வினுக்கு பதிலாக ஶ்ரீசாந்தை கொண்டுவந்தார். அதேப்போல் யுவராஜ் சிங்குக்கு பதிலாக தான் முன்னால் பேட்டிங் ஆடவந்தார். ஆனால் ஐபிஎல்-ல் அவர் குவாலிஃபையருக்கு மேல் அணியில் பெரிய மாற்றங்கள் செய்ததில்லை என்பதே வரலாறு. 
அதனால் இன்றைய சென்னையின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம். ஷேன் வாட்ஸனும், டுப்பெளஸ்ஸியும்தான் இன்றைய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள்.சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்தபடியாக அம்பதி ராயுடு வருவார். தோனி, பிராவோ, ஜடேஜா ஆகியோர் சென்னையின் பின்வரிசை பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். தீபக் சாஹர், ஷ்ரதுல் தாக்கூர், லுங்கி எங்கிடி, ஹர்பஜன் சிங் என்பதுதான் பெளலிங் அட்டாக்காக இருக்கும்.

ஐதராபாத் லெவன்?!

கிட்டத்தட்ட யூகிக்கக்கூடிய அணியாகத்தான் சென்னை இருக்கும் என்பதால் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களையும் சமாளிக்க பல வியூகங்களோடு ஐதராபாத் காத்திருக்கும். ஐதராபாத்தின் பலவீனமே பேட்டிங்தான். கேன் வில்லியம்சனும், தவானும் இல்லையென்றால் ஐதராபாத்தின் பேட்டிங் அவுட். சரியான ஓப்பனிங்  பார்ட்னர்ஷிப்பும் இல்லாமல் திணறுகிறது. இன்றைய போட்டியில் விருத்மான் சாஹாவும், தவானும் ஓப்பனிங் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.கேன் வில்லியம்சன், ஹூடா, யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன், பிராத்வெய்ட் என்பதுதான்  ஐதராபாத்தின் பேட்டிங் வரிசையாக இருக்கும். பெளலிங்கைப் பொருத்தவரை கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி மேட்சில் விளையாடாத சந்தீப் ஷர்மா அணிக்குள் வருவார் என எதிர்பார்க்கலாம். ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா, ஷகீப் என்பதுதான் பெளலிங் அட்டாக்காக இருக்கும். 

CSKVsSRH


டாஸ்!

இந்த சீஸனில் இதுவரை 8 போட்டிகள் இங்கு நடைபெற்றிருக்கின்றன. இதில் நான்கில் சேஸ் செய்த அணிகளும், நான்கில் முதலில் பேட் செய்த அணிகளும் வெற்றிபெற்றிருக்கின்றன. ஆனாலும் சேஸிங் செய்வதுதான் மும்பை பிட்சில் நல்லது. அதனால் இன்றைய டாஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டு அணிகளுமே  டாஸ் வென்றால் பெளலிங்கைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கும். முதலில் பேட் செய்யும் அணி 150 ரன்களுக்குள் சுருண்டுவிட்டால் சேஸ் செய்யும் அணியே வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம். 


ஐதராபாத்தை சமாளிக்க என்ன செய்வார் தோனி?

1. தோனியின் ஆயுதமே வேகப்பந்து வீச்சாளர்கள்தான். ஐதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எக்கனாமிக்கலாகவும், விக்கெட்டுகளை வீழ்த்தியும் சிறப்பாகப் பந்துவீசியவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களே. அதனால் பவர் ப்ளே, டெத் ஓவர்களில் மட்டுமல்லாமல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தவும் தோனி வேகப்பந்து வீச்சாளர்களையே பயன்படுத்துவார். அதனால் இன்றைய போட்டியிலும் ஹர்பஜனுக்கு வேலை இருக்கும் என்று சொல்லமுடியாது.

2. தவானும், கேன் வில்லியம்சனும்தான் ஐதராபாத்தின் பேட்டிங் பலம். தவான் சென்னைக்கு எதிராக இரண்டு போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறார். அதில் ஒரு மேட்சில் டக் அவுட். ஒரு மேட்சில் 79 ரன்கள். இதை 49 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸருடன் அடித்தார் தவான். பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன் என மூன்று ஸ்லோ பெளலர்களையுமே வெளுத்திருக்கிறார் தவான். அதனால் சாஹர், தாக்கூர், எங்கிடி என மூவரையும் பயன்படுத்தி பவர் ப்ளே ஓவர்களுக்குள் தவானை அவுட் ஆக்கினால்தான் ஐதராபாத்தை குறைந்த ரன்களுக்குள் சுருட்ட முடியும். மிடில் ஓவர்கள் வரை தவானை ஆட விட்டால் அது சென்னைக்கு ஆபத்து.

3. சென்னைக்கு எதிரான மூன்று போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார் கேன் வில்லியம்சன். அவசரப்படாமல் ஆடுவதுதான் வில்லியம்சன் ஸ்டைல். இவருமே ஸ்பின் பெளலிங்கை சமாளிக்கக்கூடியவர். அடித்து ஆடுபவர். வேகப்பந்து வீச்சுதான் இவரை வீழ்த்தவும் கைகொடுக்கும். வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு பெளலிங் ரொட்டேஷன் கைகொடுக்கும். பெளலர்களை மாற்றிக்கொண்டே இருக்கும்போது வில்லியம்சன் ஒரு ஃபார்மேட்டுக்குள் வரமுடியாமல் திணறுவார்.

CSKVsSRH4. சென்னைக்கு பயமே ரஷித் கானின் பெளலிங்தான். சென்னைக்கு எதிராக கடைசி மேட்சில்தான் ரஷீத் கான் சிறப்பாகப் பந்துவீசினார். தோனி, பிராவோ என அவர் அடுத்தடுத்து எடுத்த இரண்டு விக்கெட்டுகளுமே மிக முக்கியமானவை. கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே சூப்பர் மேனாக சீறியிருக்கிறார் ரஷீத். அதனால் ரஷீத் கானை சமாளிப்பதுதான் சென்னை  சூப்பர் கிங்ஸின் பெரிய பிளானாக இருக்கும். ரஷீத் கானின் பந்துவீச்சை சிறப்பாக ஆடியிருப்பவர் அம்பதி ராயுடு. அதேப்போல் ரஷித் கானின் கூக்ளிகளை சரியாக கணித்து விளையாடியிருக்கிறார். ரஷித் கானின் பெளலிங்கில் மட்டும் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்திருக்கிறார் ராயுடு. அதனால் 2 டவுன் பேட்ஸ்மேனாக ராயுடுவை களம் இறக்கி, ரஷீத் கானை சமாளிப்பதுதான் தோனியின் வியூகமாக இருக்கும்.

5. புவனேஷ்வர் குமார்தான் சென்னையின் டாப் ஆர்டரை கலைக்கும் வல்லமை கொண்டவர். அதனால் இவரது பெளலிங்கை வாட்ஸன், டுப்பெளஸ்ஸி, ரெய்னா மூவருமே தாக்குப்பிடித்து ஆட வேண்டும். 10 ஓவர்களுக்குள் புவனேஷ்குமாரை மூன்று ஓவர்கள் வீச வைப்பார் கேன் வில்லியம்சன். இந்த மூன்று ஓவர்கள்தான் சென்னையின் டாப் ஆர்டருக்கு சோதனையாக இருக்கும். புவனேஷ்வர் குமார் ஓவரில் விக்கெட் விழுகிறதோ இல்லையோ, ரன் எடுக்க முடியாது. இவர் ஓவரில் ரன் எடுக்கமுடியவில்லை என்பதால் அடுத்த பெளலரின் ஓவரில் ரன் எடுக்க அடித்து ஆடும்போதுதான் விக்கெட் விழுகிறது. இதை சென்னையின் டாப் ஆர்டர்கள் கவனமாக சமாளிக்க வேண்டும்.

6. சென்னையின் பேட்டிங் ஆர்டரில் இன்று ஒரு சிறிய மாற்றத்தை தோனி செய்யக்கூடும். ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஓப்பனிங் விக்கெட் விழுந்துவிட்டால் தோனி, 1 டவுன் பேட்ஸ்மேனாக ரெய்னாவை இறக்காமல் பின்ச் ஹிட்டர்களை இறக்குவார். அது  சாஹர் அல்லது ஹர்பஜன் சிங்காக இருக்கும்.

7. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடியிருக்கும் 6 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் நான்கில் தோல்வியடைந்திருக்கிறது. இரண்டு முறை சேஸ் செய்யமுடியாமலும், இரண்டு முறை டிஃபென்ட் செய்யமுடியாமலும் தோல்வியடைந்திருக்கிறது. தோனி கூலாக இருந்தாலும் ஃபைனல்களில் அணியின் வீரர்கள் கூலாக விளையாடாததே அணியின் தோல்விக்குக் காரணம். 2013 ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பையின் 149 ரன்கள் டார்கெட்டை அடிக்கமுடியாமல் 125 ரன்களுக்குள் சுருண்டிருக்கிறது சென்னை. அதனால் இன்று தோனி அணியினருக்கு சொல்லப்போவது இறுதிப்போட்டி என்பதை  மறந்துவிட்டு ஆடுவோம் என்பதே. 

இதுவரை விளையாடிய ஐபிஎல்-களைவிட இந்தமுறை சென்னை அணி மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறது. காரணம் அணியின் வீரர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட மேட்ச் வின்னர்களாக இருப்பதுதான். அதனால் இறுதிபோட்டியில் தோற்கும் சென்னையின் வழக்கத்தில் இருந்து இன்று மாற்றம் இருக்கும் என்றே நம்பலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்