`சொதப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்! - லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 9  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் அணி

Photo Credit: Twitter/ICC

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியின் அசத்தல் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 184 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 70 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 363 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அசார் அலி, ஆசாத் ஷபிக், பாபர் ஆசம் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் அரைசதமடித்து அசத்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கவில்லை. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின்  சிறப்பான பந்துவீச்சு இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடரவே, இங்கிலாந்து அணி, 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி தரப்பில் கேப்டன் ஜோ ரூட் 68 ரன்களும், ஐபிஎல்லில் கலக்கிய ஜோஸ் பட்லர் 67 மற்றும் அறிமுக வீரர் டொமினிக் பெஸ் 57 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில், 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தனர். இதனால், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், 7வது விக்கெட்டுக்கு கைகோத்த ஜோஸ் பட்லர் - டொமினிக் மெஸ் ஜோடி 131 ரன்கள் சேர்த்தது. இருப்பினும் அந்த ஜோடியால் இங்கிலாந்து அணியின் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ் மற்றும் முகமது ஆமீர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 64 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 12.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இமாம் உல்ஹக் 18 ரன்களுடனும், ஹரீஷ் சொஹைல் 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!