`இல்லை.. அவர் டெய்ல்ஸ் கேட்டார்!’ - டாஸின்போது மஞ்ச்ரேக்கரைக் கலாய்த்த தோனி #CSKvsSRH | Dhoni's conversation with sanjay Manjarekar in IPL final toss makes fans laugh

வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (27/05/2018)

கடைசி தொடர்பு:07:02 (28/05/2018)

`இல்லை.. அவர் டெய்ல்ஸ் கேட்டார்!’ - டாஸின்போது மஞ்ச்ரேக்கரைக் கலாய்த்த தோனி #CSKvsSRH

ஐபிஎல் இறுதிப் போட்டி டாஸின்போது வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கரைச் சென்னை அணியின் கேப்டன் தோனி  கலாய்த்த சம்பவம் கலகலப்பூட்டியது. 

தோனி

Photo Credit: Twitter/IPL

சென்னை சூப்பர்கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. மும்பை வான்கடே மைதானம் சேசிங்குக்கு ஒத்துழைக்கும் என்பதால் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் ஹர்பஜன் சிங்குக்குப் பதிலாக கரண் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், ஹைதராபாத் அணியில் காயமடைந்த சாஹாவுக்குப் பதிலாக கோஸ்வாமியும், கலீலுக்குப் பதிலாக சந்தீப் ஷர்மாவும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

டாஸ் போடும் நிகழ்வை வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தொகுத்து வழங்கினார். தோனி காயினை சுண்ட, கேன் வில்லியம்சன் பூவா, தலையா என்பதை முடிவு செய்வார் என்று ஏற்பாடாகியிருந்தது. அதன்படி, தோனி காயினைச் சுண்ட, கேன் வில்லியம்சன் டெய்ல்ஸ் (பூ) கேட்டார். வழக்கத்தை விட சிறிது அதிகமான தூரம் ஓடிச் சென்று விழுந்த காயின், ஹெட்ஸைக் (தலை) காட்டியது. இதனால், சென்னை அணிக்கு சாதகமாக டாஸ் விழுந்தது. இதையடுத்து ஹெட்ஸ் கேட்டது யார் என சஞ்சய் மஞ்சரேக்கர் கேட்க, இல்லை.. இல்லை அவர் (கேன் வில்லியம்சன்) டெய்ல்ஸ் கேட்டார் என தோனி பதிலளித்தார். அடுத்த முறையும் அதே கேள்வியை சஞ்சய் மஞ்சரேக்கர் கேட்டார். இந்த முறையும் அவர் டெய்ல்ஸ்தான் கேட்டார் என தோனி பகடி செய்தார். இதனால், குழப்பமடைந்த மஞ்சரேக்கர், `கேலி செய்வதை நிறுத்துங்கள் தோனி. டாஸ் நீங்கள்தானே வென்றிருக்கிறீர்கள்?’ என்று கொஞ்சம் காட்டமாகவே கேட்டார். அதன்பின்னரே இந்த குழப்பம் முடிவுக்கு வந்தது. பின்னர், தான் டாஸ் வென்றதை ஒப்புக்கொண்ட தோனி, ஃபீல்டிங் செய்வதாக அறிவித்தார். தோனி - மஞ்ச்ரேக்கர் இடையிலான இந்த உரையாடலால் மைதானம் சிறிது நேரம் சிரிப்பலையால் அதிர்ந்தது.