மும்பையில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் டாஸ் தொடர்பாக முக்கிய முடிவு! | In mumbai meeting ICC has decided not to skip toss in test match

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (30/05/2018)

கடைசி தொடர்பு:07:26 (30/05/2018)

மும்பையில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் டாஸ் தொடர்பாக முக்கிய முடிவு!

அடுத்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்க உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் டாஸ் நீக்கப்படுவது தொடர்பாக மும்பையில் நடந்த ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. 

டாஸ்


மும்பையில், இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ளே தலைமையில், ஐசிசி நிர்வாகிகளின் இரண்டு நாள் கூட்டம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அடுத்த வருடம் தொடங்க உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக, டெஸ்ட் போட்டிகளில் டாஸ் பயன்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு கருத்துகள் பரவி வந்தது. போட்டியை நடத்தும் உள்ளூர் அணி தங்களுக்குச் சாதகமான ஆடுகளத்தைத் தயாரிப்பதாகவும், அதனுடன் டாஸும் வென்றால், அது அந்த அணிக்குக் கூடுதல் சாதகமாக அமைவதால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து டாஸ் முறையை நீக்க ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவந்தது. அதாவது, வெளிநாட்டு அணி முதலில் பேட்டிங் செய்வதா அல்லது ஃபீல்டிங் செய்வதா என்பதை டாஸ் இல்லாமலே தீர்மானிப்பது என்றெல்லாம் கூறப்பட்டது. 

இதனால், இரண்டு நாள் நடந்த ஐசிசி கூட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்நிலையில்,  டாஸ் முறை டெஸ்ட் போட்டிகளில் இருந்து  நீக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், ஆடுகளம் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும் ஐசிசி முடிவுசெய்துள்ளது. ஐசிசி-யின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், அடுத்த ஆண்டு தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், போட்டிகளில் வெல்லும்போது அணிகளுக்குப் புள்ளிகள் வழங்கப்படும். தொடரை வெல்லும்போது கூடுதல் புள்ளிகள் வேண்டாம் எனவும் ஐசிசி-க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்களின் நடத்தை மற்றும் பந்து சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கவும் இந்தக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், தண்டனை விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.