வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (30/05/2018)

கடைசி தொடர்பு:15:55 (30/05/2018)

தோனி வென்றது தெரியும்... செர்ஜியோ ரமோஸ் சாம்பியன்ஸ் லீகில் என்ன செய்தார் தெரியுமா?

2018 ஐபிஎல்-ன் சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் 2018 சாம்பியன்ஸ் லீகின் சாம்பியன் ரியல் மேட்ரிட். சூப்பர் கிங்ஸின் கேப்டன் தோனியைப்போல, ரியல் மேட்ரிட்டின் கேப்டன் செர்ஜியோ ராமோஸ். ரியல் மேட்ரிட் மட்டுமல்ல ஸ்பெயின் அணியின் கேப்டனும் ராமோஸ்தான்.

தோனி வென்றது தெரியும்... செர்ஜியோ ரமோஸ் சாம்பியன்ஸ் லீகில் என்ன செய்தார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் சாம்பியன் கோப்பையைக் கையில் ஏந்துவதற்கு 20 மணி நேரத்துக்கு முன்பாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையைக் கைப்பற்றியவர் செர்ஜியோ ரமோஸ். 2018 ஐபிஎல்-ன் சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் 2018 சாம்பியன்ஸ் லீகின் சாம்பியன் ரியல் மாட்ரிட். சூப்பர் கிங்ஸின் கேப்டன் தோனியைப்போல, ரியல் மாட்ரிட்டின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ். ரியல் மாட்ரிட் மட்டுமல்ல ஸ்பெயின் அணியின் கேப்டனும் ரமோஸ்தான். 

செர்ஜியோ ரமோஸ்

ஐபிஎல் கோப்பையை வென்றதும் தன் மகள் ஸிவாவுடன் தோனி ஸ்டேடியத்தில் விளையாடியதைப் பார்த்தோம். அதற்கு முன்பாகவே தன் மூன்று மகன்களுடன் சாம்பியன்ஸ் லீக் வெற்றியை உக்ரேன் ஸ்டேடியத்தில் கொண்டாடியவர் செர்ஜியோ ரமோஸ்.

மூன்று ஆண்டு ... மூன்று கோப்பை!

32 வயதான செர்ஜியோ ரமோஸ் ஸ்பெயினில் பிறந்தவர். 16 வயதிலேயே கால்பந்துவீரராகப் புகழ்பெற ஆரம்பித்தவர். 2005 முதல் அதாவது தன் 19 வயது முதல் ஸ்பெயின் அணிக்காகவும், ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிவருகிறார். அடிப்படையில் இவர் ஒரு டிஃபெண்டர். எதிர் அணியினர் கோல் அடிக்காமல் தடுக்கும் அரண். இவரைத்தாண்டி பந்துபோனால் எதிர் அணியினரின் காலைப் பதம்பார்க்கவும் தவறமாட்டார். ஆக்ரோஷமான ஆட்டக்காரர். எதிர் அணி வீரர்களை இடிப்பது, முட்டுவது, கீழே தள்ளுவது என மிகவும் அக்ரசிவ் ஆட்டம் ஆடுவார் ரமோஸ். இதனாலேயே அதிக ரெட் கார்டுகளை வாங்கி வெளியே போனவர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர்.

செர்ஜியோ ரமோஸ்

2015 முதல் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் செர்ஜியோ. இவர் தலைமையில் 2016, 2017, 2018 என ஹாட்ரிக் சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்றிருக்கிறது ரியல் மாட்ரிட். இந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் 3-1 என லிவர்பூல் அணியைத் தோற்கடித்துக் கோப்பையை வென்றாலும், செர்ஜியோ ரமோஸ் மேல் மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
போட்டியின்போது லிவர்பூலின் முன்னணி வீரர் முகமது சாலாவின் கையைப்பிடித்து இழுத்து அவரைக் கீழே தள்ளி காயமடையவைத்தார் ரமோஸ். `மேட்ரிட் வென்றாலும் ரமோஸைப் புகழ்வது மிகப்பெரிய அசிங்கம்’ என சோஷியல் மீடியாக்களில் ரமோஸை எதிர்த்துப் பெரிய போராட்டமே நடந்துகொண்டிருக்கிறது. ரமோஸ் இன்றல்ல... எப்போதுமே இப்படித்தான்.

ரமோஸின் பலம் என்ன?

கால்பந்து மைதானத்துக்குள் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருப்பதுதான் செர்ஜியோவின் பலம். வியூகங்களை மாற்றி மாற்றி எதிர் அணி வீரர்களை குழப்புவதில் கில்லாடி. எந்த ஈகோவும் இல்லாமல் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் பல சூப்பர் ஸ்டார் வீரர்களை ஒருங்கிணைத்து வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் தலைவன் எனப் பன்முகத்திறமைகள் கொண்டவர் ரமோஸ். அணியினருக்குள் எந்த ஈகோவும் இல்லாமல் பார்த்துக்கொள்வதுதான் ரமோஸின் பலம். அதேபோல் இறுதிப்போட்டிகள், டென்ஷனான போட்டிகளில் நிதானம் இழக்காமல் களத்தில் நின்று போராடி தன் அணியை வெற்றிபெறவைப்பதில் ரமோஸ் கில்லி. 

செர்ஜியோ ரமோஸ்

கால் எந்த அளவுக்கு வேகமாக இருக்குமோ அதே அளவுக்கு வாய் வேகமாக இருக்கும். கத்திக்கொண்டேயிருப்பார். டிஃபென்ஸில் யார் யார் எந்த பொசிஷனுக்குப் போகவேண்டும் எனக் கட்டளைகள் பறந்துகொண்டேயிருக்கும். தன்னிடம் இப்போது பால் வரவேண்டும் என்று அவர் சொன்னால் உடனடியாக சக வீரர்களிடமிருந்து பாஸ் ஆகும். டிஃபெண்டர்தான் என்றாலும் கார்னர் கிக் வந்துவிட்டால் ஃபார்வேர்டு  ப்ளேயராக முன்னால் வந்துவிடுவார். ஆட்டத்தின் பரபரப்பான கடைசி நிமிடங்களில் எப்படியும் ஒரு கார்னர் கிக்கை ஹெட்டர் கோல் அடித்துவிடுவார். 2014 சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் அப்படியொரு கோல் அடித்தார். 

செர்ஜியோ ரமோஸ்

ஒரு காதலி... மூன்று மகன்கள்!

ரமோஸ் இன்னும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை. பத்திரிகையாளரும், டிவி தொகுப்பாளருமான பிளார் ரூபியோ என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் கடந்த ஆறு வருடங்களாக இருக்கிறார். இவர்களுக்கு செர்ஜியோ, மார்க்கோ, அல்ஜான்ட்ரோ என மூன்று மகன்கள். இதில் அல்ஜான்ட்ரோ பிறந்து இரண்டு மாதங்கள்தாம் ஆகின்றன. ஆனால், வெற்றிபெற்றவுடன்  மூன்று குழந்தைகளையும் மைதானத்துக்குள் அழைத்துவந்துவிட்டார் ரமோஸ். 

2018 உலகக்கோப்பையை ஸ்பெயினுக்கு வென்றுதரவேண்டும் எனத் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார் ரமோஸ். `எங்கள் கேப்டன் உலகக் கோப்பை வென்றுதருவார்' என ஸ்பெயின் ரசிகர்களும் நம்பிக்கையின் உச்சத்தில் இருக்கிறார்கள். ரமோஸ் என்ன செய்யப்போகிறார் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்