ஆஃப்கனுக்கு எதிரான போட்டியிலிருந்து சஹா விலகல்! - 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக் | Wriddhiman Saha ruled out of Afghanistan Test

வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (02/06/2018)

கடைசி தொடர்பு:15:57 (02/06/2018)

ஆஃப்கனுக்கு எதிரான போட்டியிலிருந்து சஹா விலகல்! - 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக்

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ரித்திமான் சஹா காயம் காரணமாக விலகியுள்ளார். 

தினேஷ் கார்த்திக்

photo credit: @bcci

சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டி, வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அஜிங்கியா ரஹானே தலைமையில், இந்திய அணி பங்கேற்க உள்ளது. கேப்டன் கோலி, காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதேபோல் இதில் பங்கேற்கவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அஷ்கர் தலைமையில் களமிறங்கவுள்ள அந்த அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ரித்திமான் சஹா காயம் காரணமாக விலகியுள்ளார். 

சமீபத்தில் நடந்த ஐபிஎல் குவாலிபையர் 2 வது போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியபோது, சஹாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. காயம் குணமாவதற்கு 5 முதல் 6 வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து காயம் சரியாகவும் வரவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ரெடியாகும் விதமாகவும் சஹாவுக்கு பி.சி.சி.ஐ ஓய்வு அளித்துள்ளது. மேலும், அவருக்குப் பதிலாகத் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் பங்கேற்றார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க