வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (04/06/2018)

கடைசி தொடர்பு:14:58 (04/06/2018)

ஸபிவாக்கா எனும் ஓநாய்... 2018 கால்பந்து உலகக் கோப்பையின் மஸ்காட்! #FifaWorldCup2018

மஸ்காட் - ஒரு போட்டித் தொடரின் விளம்பரத்துக்கும், கவர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. அது, அந்தப் போட்டித் தொடரை நடத்துகிற ஒரு நாட்டின் பெருமைமிக்க அடையாளம். எந்தவொரு விளையாட்டுத் தொடருக்கும் மஸ்காட் ஏன் அவசியம் எனில், அதன் வழியே நாம் நம் அடையாளத்தைப் பரப்புரை செய்யலாம்; விழிப்பு உணர்வு ஏற்படுத்தலாம். கடந்த வருடம் அக்டோபரில், இந்தியாவில் நடந்த அண்டர்-17 உலகக்கோப்பைத் தொடரில், அழிந்துவரும் விலங்கினமான படைச் சிறுத்தையை, மஸ்காட்டாக தேர்வு செய்து, அதைப்பற்றிய விழிப்பு உணர்வை நம் மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.

உலகக் கோப்பை

மஸ்காட் என்பது நாம் சார்ந்திருப்பவைகளை முன்னெடுத்துச் செல்லும் உருவகமாகும். சுருக்கமாகச் சொன்னால், மஸ்காட் என்பது, நம்மைப் பிரதிபலிப்பது. உண்மையில் மஸ்காட் விளையாட்டுக்கானது மட்டுமல்ல, அது எல்லாத் துறைகளுக்குமானது. ஆனால், இன்று விளையாட்டுத்துறையில்தான் மஸ்காட் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. எனவே, விளையாட்டுத் தொடர்களை நடத்தும் எந்தவொரு நாடும், தங்களின் நாட்டை பிரதிபலிக்கும் அடையாளங்களாகக் கருதப்படும் விலங்குகளில் ஒன்றை மஸ்காட்டாக தேர்வு செய்கின்றன. கடந்த 2014 கால்பந்து உலகக் கோப்பைக்கு `ஃபுலேகா' என்று பெயரிடப்பட்ட எறும்புத்தின்னியை பிரேசிலும், 2017, 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பைக்கு, `கெலோ' என்று பெயரிடப்பட்ட படைச் சிறுத்தையை இந்தியாவும் மஸ்காட்டாக்கின.

அடுத்த வாரம் தொடங்கவுள்ள 2018 கால்பந்து உலகக் கோப்பைக்கான மஸ்காட்டாக, 'ஸபிவாக்கா' என்று பெயரிடப்பட்ட ஓநாயைத் தேர்வு செய்திருக்கிறது, போட்டித் தொடரை நடத்தும் ரஷ்யா. ரஷ்யாவின் விளையாட்டுத்துறை அமைச்சரான விடலி முட்கோ, ஃபிஃபா ஜெனரல் செக்கரட்டரியான ஃபட்மா சமொரா மற்றும் பிரேசில் லெஜண்ட் ரொனால்டோ நசாரியோ ஆகியோர், ரஷ்யாவின் சேனல் 1-ல் நடந்த நேரலை நிகழ்ச்சியில், ஸபிவாக்காவை அதிகாரபூர்வ மஸ்காட்டாக அறிமுகம் செய்தனர்.

ஸபிவாக்கா என்றால் ரஷ்ய மொழியில், 'ஸ்கோர் செய்யும் ஒருவர்' என்று அர்த்தம். ``கேளிக்கையும், கவர்ச்சியும், தைரியமும் ஒருங்கே அமைந்த இந்த ஓநாய்க்கு, பலவித ஆக்கபூர்வமான செயல்முறைகளுக்கு பின்பே, இந்தப் பொருத்தமான பெயர் சூட்டப்பட்டிருக்கிறது” என்றும், “வாக்கெடுப்பு மூலம் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்யர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த ஓநாய், ரசிகர்களை உற்சாகப்படுத்தி, போட்டிகளை ப்ரமோட் செய்வது மட்டுமல்லாமல், உலக நாடுகள் மத்தியில் ரஷ்யாவுக்கான தூதராகவும் செயல்படவுள்ளது” என்றும் ஃபிஃபா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை

அன்றைய சோவியத் யூனியன் பகுதிகளின் அடர்ந்த காடுகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் வாழ்ந்துவந்த ரஷ்ய ஓநாய்கள், கிழக்கு ஐரோப்பாவைப் பிறப்பிடமாகக் கொண்டவை. உடல் முழுவதும் பழுப்பு நிறமும், தொண்டை மற்றும் கன்னங்களில் வெள்ளை நிறமும் கொண்ட இந்த ஓநாய்கள், சராசரியாக 39 கிலோ எடை கொண்டவை. 'எர்சியன் ஓநாய்' அல்லது 'மத்திய ரஷ்ய காட்டு ஓநாய்' என்று இவை அறியப்படுகின்றன.

பழுப்பு மற்றும் வெள்ளை நிற ரோமங்கள் கொண்டிருக்கும், 'ஸபிவாக்கா', ரஷ்ய தேசிய அணியின் நிறங்களைப் பிரதிபலிக்கும் வகையில், வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு நிறத்தாலான டி-ஷர்ட்டும், ஷார்ட்ஸும் அணிந்திருக்கிறது. டி-ஷர்ட்டில் ரஷ்யா 2018 என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. ஆரஞ்சு நிறத்திலான ஸ்போர்ட்ஸ் கிளாஸ் அணிந்திருக்கும் இந்த ஸபிவாக்காவை உருவாக்கியவர் ரஷ்யாவைச் சேர்ந்த மாணவ டிசைனரான எகட்டரினா போச்சரொவா. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த ஆன்லைன் வாக்கெடுப்பில், தன்னுடன் போட்டியிட்ட, புலியையும், பூனையையும் வீழ்த்தி 53 சதவிகித வாக்குகளைப் பெற்று தேர்வாகியுள்ளது இந்த ஓநாய். குறும்பும், கேளிக்கையும் வசீகரமும் நிறைந்த இந்த ஸபிவாக்கா ஓநாய் நிச்சயம் இந்த கால்பந்து உலகக் கோப்பையில் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்துவிட்டது என்றே சொல்லலாம்.


டிரெண்டிங் @ விகடன்