வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (05/06/2018)

கடைசி தொடர்பு:10:13 (05/06/2018)

சுனில் சேத்ரியின் வேண்டுகோளை ஏற்று அரங்கத்தில் திரண்டு நெகிழவைத்த ரசிகர்கள் -கால்பந்துப் போட்டிக்குக் கிடைத்த உற்சாக வரவேற்பு!

மும்பையில் இந்தியா, சீன தைபே, கென்யா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் இன்டர்கான்ட்டினென்டல் கோப்பைக்கான தொடர் நடைபெற்றுவருகிறது. ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற போட்டியில், இந்தியா சீன தைபே அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. இந்நிலையில் நேற்று, இந்தியா - கென்யா அணிகள் மோதின. இது, கேப்டன் சுனில் சேத்ரிக்கு 100-வது போட்டியாகும்

சுனில் சேத்ரி

Photo: Twitter/IndianFootballTeam

 கடந்த சனிக்கிழமை, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், ”ரசிகர்கள் கால்பந்து விளையாட்டைக் காண மைதானம் வரவேண்டும். இணையத்தில் விமர்சித்தது போதும். மைதானம் வந்து முகத்துக்கு நேரே விமர்சனம் செய்யுங்கள். உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம்” என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரது வீடியோவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, சச்சின் உள்ளிட்ட பல பிரபலங்களும் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

ரசிகர்கள்

இந்நிலையில் நேற்று, மும்பை மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இது, சுனில் சேத்ரி இந்திய அணிக்காக விளையாடும் 100-வது போட்டியாகும். இதனால், போட்டி தொடங்கும்போது இந்திய வீரர்கள் இருபுறமும் நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். போட்டியைக் காண முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா, விஜயன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவர்கள், ’சேத்ரி 100’ என்ற டி-ஷர்ட் அணிந்து வந்திருந்தனர். போட்டி தொடங்கும் முன், சுனில் சேத்ரிக்கு 100 போட்டியில் விளையாடியதற்காக சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  இந்தப் போட்டியில், இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. 2 கோல் அடித்து போட்டி நாயகனாக ஜொலித்தார் கேப்டன் சுனில் சேத்ரி.

சுனில் சேத்ரி

Photo: Twitter/IndianFootballTeam

சுனில் சேத்ரியின் ட்விட்டர் கோரிக்கைக்கு பலத்த வரவேற்பு இருந்ததை மைதானம் முழுவதும் பார்க்க முடிந்தது. மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் ரசிகர்களால் நிரம்பிவழிந்தன. மும்பை மட்டுமல்லாது, டெல்லி, கொல்கத்தா போன்ற பல பகுதிகளிலும் இருந்தும் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர்.  அவர்கள் பெரும்பாலும், சுனில் சேத்ரியின் வீடியோ பதிவு நெகிழ வைத்ததாகவும், அதற்காகப் போட்டியைக் காண வந்ததாகவும் தெரிவித்தனர். வீரர்கள், பேருந்தில் மைதானத்துக்கு வந்தது முதல் ரசிகர்கள் அவர்களை வரவேற்று உற்சாகம் அளித்தனர். இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு இந்தமுறை கால்பந்து விளையாட்டுக்குக் கிடைத்தது. டிக்கெட் வாங்குவதற்கு மைதானத்தின் முன் நீண்ட வரிசையும் காணப்பட்டது. 

அபிஷேக் பச்சன்

Photo: Twitter/IndianFootballTeam

நிகுன்ஞ் லோட்டியா என்பவர் மைதானத்தின் 4 -வது ஸ்டாண்ட் முழுவதிலும் உள்ள 1000 டிக்கெட்டுகளையும் தனி ஆளாக வாங்கி மைதானத்துக்குப் பலரை அழைத்துவந்தார். இவர், சுனில் சேத்ரியின் வீடியோ பதிவுக்குப் பின்னர்தான் இந்த டிக்கெட்டுகளை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தியா, ”சுனில் சேத்ரியின் கோரிக்கையை ஏற்று இத்தனை பேர் மைதானத்துக்கு வந்ததில் மகிழ்ச்சி. இது வெறும் தொடக்கம்தான். இந்திய கால்பந்து அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் மைதானங்களை நிரப்புவோம். அவர்கள் நமக்காக இதயபூர்வமாக விளையாடுகிறார்கள். நம்மால் முடிந்தது, அங்கு அவர்களுடன் இருப்பது” என்றார். 

போட்டி தொடங்கும் முன் பேசிய கேப்டன் சுனில் சேத்ரி, “நான் பேசியதுக்கு இத்தனை வரவேற்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. நாட்டுக்காக விளையாடும்போது, ரசிகர்கள் ஒவ்வொருவரின் ஆதரவு மிக முக்கியம்” என்றார். இதுவரை 100 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி, 61 கோல்கள் அடித்து இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். உலக அளவில் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடிக்கொண்டிருப்பவர்களில் சுனில் சேத்ரி 3-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் போர்ச்சுகளின் ரெனால்டோவும்(81) மற்றும் இரண்டாவது இடத்தில் அர்ஜெண்டினாவின் மெஸ்சியும்(64) உள்ளனர்.