வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (06/06/2018)

கடைசி தொடர்பு:16:08 (06/06/2018)

அதிக வருமானம் ஈட்டும் இந்திய வீரர் - ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற விராட் கோலி!

அதிக வருமானம் பெறும் இந்திய விளையாட்டு வீரர்களில், கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். 

விராட் கோலி

புகழ் பெற்ற 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை, உலக அளவில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான அதிக வருமானம் பெறும் 100  விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 83-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே வீரர், விராட் கோலி. இவர், கடந்த 12 மாதங்களில் 24 மில்லியன் (160 கோடி) வருமானம் ஈட்டியுள்ளார். இதில், சம்பளம் மற்றும் பரிசுகள் மூலமாகக் கிடைத்த வருமானம் 4 மில்லியன் மட்டுமே. மீதி 20 மில்லியன் வருமானம், விளம்பரத் தூதுவராக இருந்ததற்குக் கிடைத்தது. கடந்த வருடம், கோலி 22 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியதாகக் கூறப்பட்டது. இதுமட்டுமில்லாமல், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கோலி இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 

இதற்கிடையே, அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மேவெதர், இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவர், கடந்த 12 மாதங்களில் 285 மில்லியன் டாலர் வருமானம் பெற்றுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் நான்காவது முறையாக மேவெதர் இடம்பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இடம்பெற்றுள்ளனர். இருவரும் முறையே 111 மற்றும் 108 மில்லியன் வருமானம் ஈட்டியுள்ளனர். இவர்களைத் தவிர, கால்பந்து வீரர் நெய்மர் 5-வது இடமும், டென்னிஸ் வீரர்கள் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் இருவரும் முறையே, 7 மற்றும் 20-வது இடத்தைப் பெற்றுள்ளனர். இதற்கிடையே, இந்தப் பட்டியலில் ஒரு வீராங்கனை கூட இடம்பெறவில்லை. கடந்த முறை இதில் இடம்பெற்ற செரினா வில்லியம்ஸ், சில மாதங்களுக்கு முன் குழந்தை பெற்றதன் காரணமாகப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதனால், அவர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க