`கிரிக்கெட்டராக இருந்த என்னை மனிதராக மாற்றிவிட்டாள்' - தனது மகள் ஜிவா குறித்து நெகிழ்ந்த தோனி! | Daughter changed me as a person says MS Dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (13/06/2018)

கடைசி தொடர்பு:06:45 (13/06/2018)

`கிரிக்கெட்டராக இருந்த என்னை மனிதராக மாற்றிவிட்டாள்' - தனது மகள் ஜிவா குறித்து நெகிழ்ந்த தோனி!

ஒரு கிரிக்கெட்டராக இருந்த என்னை, தனது மகள் ஜிவா தான் ஒரு மனிதராக மாற்றிவிட்டாள் என இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். 

தோனி - ஜிவா

இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு ஐபிஎல்லில் களமிறங்கிய  மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தார்கள். தோனி கோப்பை கைப்பற்றிய புகைப்படங்களை விட இணையத்தில் அதிகம் இடம்பிடித்தது அவர் தனது மகள் ஜிவா இருக்கும் வீடியோக்கள் தான். இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி தான் ஒரு தந்தை என்பதை உணர்த்தும் வகையில்  தனது மகளுடன் பயணித்தார் தோனி.

இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகின. இந்நிலையில், ஜிவாவுடன் நேரம் செலவிட்டது குறித்து தோனி நெகிழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில்,  ``ஜிவா பிறந்த போது என்னால் அவளுடன் நேரம் செலவிட முடியவில்லை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கிரிக்கெட்டிலேயே மூழ்கிவிட்டேன். இதனால் ஒரு தந்தையாக நான் பலவற்றை இழந்துவிட்டேன். ஒருகட்டத்தில் ஜிவா என்னைப் பார்த்து பயப்படத் தொடங்கிவிட்டாள்.

சாப்பிடாமல் அடம்பிடித்தால், அதிகமாகச் சேட்டை செய்தால் எனது பெயரை கூறிப் பயமுறுத்தினார்கள். இதனால் என்னைப் பார்க்கும் போது பயந்து ஒளிந்துகொள்வாள். இதனைப் பார்த்து ஒரு தந்தையாக அவளிடம் நெருக்கமாக இருக்க முடியவில்லை என வேதனைப்பட்டேன். இதனையடுத்து தான் ஐபிஎல் போட்டியின் போது ஜிவா கூடவே இருக்க நினைத்தேன். எனது கோரிக்கைக்கு ஐபிஎல் நிர்வாகமும் அனுமதி அளித்தது.

ஐபிஎல்லின் போது அவளுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நொடியும் எனக்குச் சந்தோஷத்தை தந்தது. வெறும் கிரிக்கெட் வீரராக இருந்த என்னை ஜிவா தான் ஒரு மனிதராக மாற்றி இருக்கிறாள். எப்போதுமே அப்பாக்களுக்கும், மகள்களுக்கும் நெருக்கம் அதிகம்" என உருக்கமாகப் பேசினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க