`இரும்புத்திரை’ டேவிட், மின்னல் சலா, தளபதி கிரீஸ்மேன்..! - உலகக் கோப்பையின் மோஸ்ட் வான்டட்!

கால்பந்து தெரியாதவர்கள்கூட மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற நட்சத்திரங்களின் பர்ஃபாமன்ஸை நிச்சயம் பார்ப்பார்கள். இவர்களைத் தாண்டி நாம் பார்க்க வேண்டிய சில வீரர்களைப் பற்றி...

`இரும்புத்திரை’ டேவிட், மின்னல் சலா, தளபதி கிரீஸ்மேன்..! - உலகக் கோப்பையின் மோஸ்ட் வான்டட்!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து, நாளை இரவு தொடங்கப்போகிறது. உலகின் மிகச்சிறந்த நட்சத்திரங்கள், கோப்பையை வெல்லும் கனவோடு களமிறங்கப்போகிறார்கள். பல இளம் வீரர்கள், நட்சத்திரங்களாக ஜொலிப்பதற்கு இதுதான் மேடை. கால்பந்து தெரியாதவர்கள்கூட மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற நட்சத்திரங்களின் பர்ஃபாமன்ஸை நிச்சயம் பார்ப்பார்கள். இவர்களைத் தாண்டி நாம் பார்க்க வேண்டிய சில வீரர்களைப் பற்றி...

கொடினியோ - பிரேசில்

கொடினியோ - உலகக் கோப்பை

பார்சிலோனா அணியில் இனியஸ்டாவின் இடத்தை நிரப்பப்போகிறவர். இந்த ஒரு விஷயமே சொல்லிவிடும் இவர் யாரென்று! 105 மில்லியன் பவுண்டு கொடுக்கும் அளவுக்கு பார்சிலோனாவுக்கு இவர்மீது நம்பிக்கை. பிளே மேக்கராகவும் ஆடுவார் விங்கராகவும் ஆடுவார். டிரிப்பிளிங், பாஸிங், ஷூட்டிங் அனைத்திலும் கில்லி. இவரது வேகம், விங்கில் விளையாடும்போது அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நெய்மர் - கொடினியோ காம்பினேஷன் நிச்சயம் எதிர் அணிகளைப் புரட்டிப்போடும். நெய்மரைத் தாண்டி நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவர். 

டேவிட் டி கே - ஸ்பெயின்

de gea

ஸ்பெயின் அணியின் அரண். இன்றைய தேதிக்கு உலகின் நம்பர் 1 கோல்கீப்பர். இவரைத் தாண்டி கோலுக்குள் நுழைய அந்தப் பந்து தவம் கிடக்க வேண்டும். ஒற்றை ஆளாக மான்செஸ்டர் யுனைடெட் அணியைக் காப்பற்றுபவர், ஸ்பெயினின் சிறந்த டிஃபன்ஸோடு சேர்ந்து இரும்புக்கோட்டையாக மாறிவிட்டார். 2010, 2014 உலகக் கோப்பைகளில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் வெற்றிபெற கோல்கீப்பர்களின் பங்களிப்பே முக்கியக் காரணம். அந்த வகையில் ஸ்பெயின் மீண்டும் சாம்பியனாக, இவர் எல்லா வகைகளிலும் உறுதுணையாக இருப்பார். 

கெவின் டி ப்ருய்ன் - பெல்ஜியம்

de bruyne

உலகின் டாப்-5 மிட்ஃபீல்டர்களில் ஒருவர். மான்செஸ்டர் சிட்டி அணி வரலாற்றுச் சாதனையோடு ப்ரீமியர் லீக் பதக்கம் வெல்ல மிக முக்கியக் காரணமாக விளங்கியவர். அட்டாக், டிஃபன்ஸ் இரண்டிலும் இவரது பங்களிப்பு அணிக்குக் கைகொடுக்கும். அசிஸ்ட் செய்வதில் நம்பர் 1. ஃப்ரீ கிக் எடுப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட். இப்படி இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பெல்ஜியம் அணியை `டார்க் ஹார்ஸ்' என எல்லோரும் கருத முக்கியக் காரணமே இவர்தான். ஹசார்ட், லுகாகு, மெர்டன்ஸ் போன்ற முன்கள வீரர்கள் இவரின் பாஸ்களைப் பயன்படுத்திக்கொண்டால் பெல்ஜியம் நிச்சயம் ஆச்சர்யமளிக்கும்!

ஹேரி கேன் - இங்கிலாந்து

harry kane

எப்போதுமே சுமாராக ஆடும் இங்கிலாந்து அணியின் இன்றைய சூப்பர் ஸ்டார் ஹேரி கேன். கடந்த மூன்று ஆண்டுகளாக ப்ரீமியர் லீகில் கோல்மழை பொழிந்துகொண்டிருக்கிறார். எங்கிருந்தாலும் கோல்போஸ்டைக் குறிவைப்பதில் வல்லவர். சமீப காலங்களில் இங்கிலாந்து வீரர் ஒருவர் இவர் அளவுக்குப் பேசப்படவில்லை. அதனால்தான் 24 வயது ஆகியிருந்தும் இவரைக் கேப்டனாக்கினார் பயிற்சியாளர் சவுத்கேட். இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி ஏதேனும் அதிசயம் நிகழ்த்தும் என்றால், அதை சாத்தியப்படுத்தக்கூடிய ஒரே ஆள் இவர்தான். 

முகமது சலா - எகிப்து 

salah

எங்கிருந்து கிளம்பினார் எனத் தெரியவில்லை. ஆனால், இந்த வருடம் மொத்த கால்பந்து உலகையும் அதிரவைத்துவிட்டார் சலா. தன் வேகத்தாலும் டெக்னிக்காலும் எதிரணி டிஃபண்டர்களைப் பந்தாடியவர். ப்ரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் என எல்லா ஏரியாக்களிலும் முத்திரை பதித்தார். சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் ஏற்பட்ட காயத்தால், அவர் விளையாட கொஞ்சம் நாளாகும். ஆனால், களத்தில் இறங்கிவிட்டால் சலா மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர். 

கிரீஸ்மேன்   - பிரான்ஸ்

griezmann

பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். 2016 யூரோ கோப்பையின் கோல்டன் பூட் வின்னர். இந்தமுறை இளம் பிரான்ஸ் அணியின் வேகத்தோடு, இவரது அனுபவமும் டெக்னிக்கும் சேரவிருப்பதால், நிச்சயம் எதிர் அணியின் கோல் பாக்ஸை முற்றுகையிட்டுக்கொண்டே இருப்பார். முன்களத்தில் எந்த ரோலில் களமிறங்கினாலும் ஜொலிக்கக்கூடியவர் என்பதால், பிரான்ஸ் அணியின் மிக முக்கிய ஆயுதம் இவர்தான்.

மேட் ஹம்மல்ஸ் - ஜெர்மனி

hummels

ஜெர்மனி கடந்த முறை உலகக் கோப்பையை வெல்ல பெரும்பங்களிப்பைக் கொடுத்தவர். தடுப்பாட்டத்தில் ஷீல்டாக நின்று அணிக்குக் கைகொடுப்பவர். முக்கியமான தருணங்களில் இவர் செய்த `இன்டர்செப்ஷன்கள்' ஜெர்மனி அணியைப் பலமுறை கடந்த உலகக் கோப்பையில் காப்பற்றியது. கச்சிதமான லாங் பாஸ்கள் கொடுத்து, `கவுன்டர் அட்டாக்' தொடங்குவதில் கில்லாடி. அதுமட்டுமல்லாமல், கார்னர், ஃப்ரீ கிக் சமயங்களில் ஹெடர் செய்து கோல் போடுவதிலும் கெட்டிக்காரர். இன்றைய தேதிக்கு உலகின் தலைசிறந்த டிஃபண்டரில் ஒருவரான ஹம்மல்ஸ் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியவர். 

பாலோ டிபாலா - அர்ஜென்டினா

dybala

மெஸ்ஸி - ரொனால்டோ சகாப்தம் முடிந்த பிறகு, அடுத்த தலைமுறை கால்பந்தின் தவிர்க்க முடியாத வீரர் டிபாலா. இப்போதே இவரை `ஜூனியர் மெஸ்ஸி' என்றுதான் அர்ஜென்டினாவில் அழைக்கிறார்கள். வேகம், டெக்னிக், பெர்ஃபெக்‌ஷன் என அனைத்தும் நிறைந்த கம்ப்ளீட் வீரர். ஃபார்வேர்டு வீரர்கள் அதிகம் நிறைந்திருப்பதால், இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது. ஆனால், கிடைக்கும் வாய்ப்பில் நிச்சயம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!