வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (14/06/2018)

கடைசி தொடர்பு:13:25 (14/06/2018)

`வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் இது!' - ஆஃப்கான் கிரிக்கெட் அணியை வாழ்த்திய மோடி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். `இந்தியாவுடன் விளையாடுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது' என ட்வீட் செய்திருக்கிறார் பிரதமர் மோடி.

மோடி - ஆஃப்கான் கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் விளையாடுவதற்கு, கடந்த ஆண்டு அனுமதி அளித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இதையடுத்து, ' முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா அணியுடன் அடுத்த ஆண்டு ஆஃப்கான் விளையாடும்' என அறிவித்திருந்தது. இந்நிலையில், ஆஃப்கான்-இந்தியா இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் ஆஃப்கான் அணி  விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இன்று, இந்திய அணியுடன் ஆஃப்கான் அணி விளையாடுகிறது. இதுகுறித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ` ஆஃப்கான் கிரிக்கெட் அணி முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது மகிழ்ச்சி. வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை இந்தியாவுடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. போட்டியில் விளையாடும் இந்தியா மற்றும் ஆஃப்கான் வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் போட்டியின் மூலம் இரு நாட்டு மக்களிடையேயான உறவுகள் வலுப்படும்' என வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.