வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (15/06/2018)

கடைசி தொடர்பு:14:04 (15/06/2018)

சொதப்பிய சவுதி... ரணகள ரஷ்யா... உலகக் கோப்பையின் ஸ்டைல் ஸ்டார்ட்! #WorldCup #RUSKSA

சொதப்பிய சவுதி... ரணகள ரஷ்யா... உலகக் கோப்பையின் ஸ்டைல் ஸ்டார்ட்! #WorldCup #RUSKSA

"நாங்கள் நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லப் போவதில்லை. கோப்பையை வெல்லத் துடிக்கும் ஒவ்வொரு அணியிடமும் அவர்களின் திட்டத்தைக் கேளுங்கள். அவர்களின் முதல் குறி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அதேதான் எங்களின் லட்சியமும். எங்களைப் பார்த்து எங்கள் மக்கள் பெருமைப்படவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், எல்லோரும் எங்களின் முந்தைய ஆட்டங்களைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். ஃபிரான்ஸ் அணி அமெரிக்காவுடன் டிரா செய்ததற்கு 'கடுமையான பயிற்சியினால் வீரர்கள் சோர்வாக இருக்கிறார்கள்' என்று அவர்கள் பயிற்சியாளர் காரணம் சொன்னார். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். அதே காரணத்தை நாங்கள் கூறியபோது, எல்லோரும் சிரிக்கின்றனர்..." உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு இப்படி மனம் நொந்து பேசியிருந்தார் ரஷ்ய வீரர் ஆர்டம் சையுபா. 

 

 

அந்த வார்த்தைகளில் அவ்வளவு வலி. ரஷ்ய மக்களுக்கு தங்கள் அணியின் மீதான நம்பிக்கை முற்றிலும் குறைந்திருந்தது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகளில் ஃபிஃபா ரேங்கிங்கில் கடைசி இடத்தில் இருப்பது அவர்கள்தான். அதைவிட, கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றி கூட இல்லை. அதனால் கடந்த சில வாரங்களாகவே ரஷ்ய அணி கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. அதன் விளைவுகள் கடுமையாகவே, கடும் விரக்தியுடன் அப்படிப் பேசியிருந்தார் சையுபா. அவரது பேட்டி, ரஷ்ய மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கள் அணியை முதல் போட்டியில் விமர்சனங்களை மறந்து ஆதரித்தார்கள். 

ஆட்டத்தின் 70-வது நிமிடம்... முன்கள வீரர் ஸ்மொலோவ் இடத்தில் களமிறக்கப்படுகிறார் சையுபா. 2-0 என ரஷ்யா முன்னிலை. தான் மைக்கில் பேசியதற்கு தன் வீரர்கள் நியாயம் சேர்த்துவிட்டனர். ஆனால், தன் மீதான எதிர்பார்ப்பு? அணியின் மூத்த வீரர் வேறு. பதிலை களத்திலும் சொல்லியாகவேண்டுமே. சொன்னார். களம் கண்ட முதல் நிமிடத்திலேயே... முதல் டச்சிலேயே... கோல்..! ஆர்டர் சையுபா - தான் எதிர்பார்த்ததுபோல் மொத்த ரஷ்ய மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் முதல் போட்டியில் பெற்றுவிட்டார். அவர் மட்டுமல்ல, அவரின் ரஷ்ய அணியும்தான்! 

சையுபா

முதல் போட்டியிலேயே 5 கோல்கள் அடித்து உலகக் கோப்பைக்கு மெர்சலான ஓப்பனிங் கொடுத்துள்ளது ரஷ்யா. அதுவும் ஆட்டத்தின் 12-வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தியது. ரஷ்யாவின் கார்னரை சவுதி அரேபிய வீரர்கள் சரியாக டீல் செய்யாமல் போக, இடது விங்கில் இருந்து கோலோவின் போட்ட கிராஸை அருமையான ஹெட்டர் மூலம் கோலாக்கினார் கசின்ஸ்கி. அவரது முதல் சர்வதேச கோல். இந்த உலகக் கோப்பையின் முதல் கோல்! 22-வது நிமிடத்தில் ஆலன் சகோவ், காயத்தால் வெளியேற அவருக்குப் பதில் களமிறங்கினார் டெனிஸ் செரிஷேவ். மாற்று வீரராக வந்தவர், பட்டையைக் கிளப்பி 2 கோல்கள் அடித்து அசத்தினார். 

43-வது நிமிடத்தில் கோலோவின் வேகமாக கவுன்ட்டர் அட்டாக் செய்து, சவுதி பாக்ஸுக்குள் நுழைந்தார். அவர் இடது புறம் நின்றிருந்த சோப்னின் அவரிடமிருந்த பாஸ் பெற்று, அதை செரிஷேவ் நோக்கி அடித்தார். இரண்டு சவுதி டிஃபண்டர்கள் அதைத் தடுக்கப் பாய்ந்தபோதும், பந்தை கூலாக கன்ட்ரோல் செய்து, தன் இடது காலால் கோலடித்தார் செரிஷேவ். அவருக்கும் இதுதான் முதல் சர்வதேச கோல். 6 ஆண்டுகளில் வெறும் 11 சர்வதேச போட்டிகளில். ஒரு கோல்கூட இல்லை. ஆனால், நேற்று ஒரே நாளில் இரண்டு கோல்கள் அடித்து ரஷ்யாவின் ஹீரோவாகிவிட்டார். 

செரிஷேவ்

ஸ்டாப்பேஜ் டைமின் முதல் நிமிடம். சவுதி பாக்சுக்கு வெளியே சையுபா கொடுத்த பாஸை, வெளியே இருந்து பெற்ற செரிஷேவ், படபடவென பாக்சுக்குள் இரண்டு ஸ்டெப் வைத்து, தன் இடது காலின் 'Outer Foot' மூலம் மின்னல் வேக கோலடித்து மிரட்டினார். இதுதான் இந்த ஆட்டத்தின் சிறந்த கோல் என்று நினைத்தால், அடுத்த மூன்றே நிமிடத்தில் ஃப்ரீ கிக் மூலம் 'டைரக்ட்' கோல் அடித்து அசத்தினார் இரண்டு அசிஸ்ட்கள் செய்திருந்த கோலோவின். ரஷ்யா 5-0 என வெறித்தன வெற்றி பெற்றது.

ரஷ்யாவின் இந்த வெற்றி நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. சொந்த ஊரில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், மிகப்பெரிய நெருக்கடிக்கு இடையில் கூலாக, தெளிவாக தங்கள் கேம் பிளானை செயல்படுத்தினர். அதற்கு சவுதி அரேபிய வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்தனர். முதல் நிமிடத்தையும், 56-வது நிமிடத்தையும் தவிர்த்து, மற்ற 88 நிமிடங்களும் மோசமாகவே விளையாடினார்கள். 

உலகக் கோப்பை

சொல்லப்போனால் 60 சதவிகித நேரம் பந்து அவர்களிடம்தான் இருந்தது. ஆனால், அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. மனம் போன போக்கில் விளையாடினார்கள். கால்பந்தில் டிஃபன்ஸ், மிட்ஃபீல்ட், ஃபார்வேர்ட் என 3 அடுக்குகள் இருந்தாலும், ஒன்றோடொன்று இணைந்திருக்கும். அங்கு ஒரு 'connector' இருக்கும். டிஃபன்ஸையும், மிட்ஃபீல்டையும் இணைக்க, ஒரு 'ஹோல்டிங்' பிளேயர். மிட்ஃபீல்டையும், ஃபார்வேர்டையும் இணைக்க ஒரு 'பிளேமேக்கர்' போல ஒவ்வொரு ஃபார்மேஷனுக்கும் ஏற்ப இப்படி சில 'கனெக்டிங்' வீரர்கள் இருப்பார்கள். அந்த இணைப்புகள்தான் ஆட்டத்தின் போக்கில் பெரிய ஆதிக்கம் செலுத்தும். ஆனால், சவுதி அணியின் திட்டத்தில் அப்படி யாருமே இல்லை. 

சவுதி அரேபியா

அதிலும் குறிப்பாக நடுகளம் ரொம்பவே தனியாக இயங்கியது. 56 நிமிடத்தில் மட்டுமே தெளிவாக பாஸ் செய்தனர். பந்தை தங்கள் வசப்படுத்தி, ஆட்டத்தை கன்ட்ரோல் செய்தனர். மற்றபடி, பாஸிங் ரொம்பவே மோசம். 2 கோல்கள் பின்தங்கியிருந்தபோது மிட்ஃபீல்டர் அப்துல்லாவை எடுத்துவிட்டு, ஸ்ட்ரைக்கர் ஃபஹத்தைக் களமிறக்கினார் சவுதி பயிற்சியாளர். கொஞ்சம் கொஞ்சம் முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தவர் இல்லாமல் சவுதி மிட்ஃபீல்ட் ரொம்பவே வீக் ஆனது. 'இடது விங்' ஏரியாவில் அவ்வப்போது முன்னேறிக்கொண்டிருந்த சல்மான் அல்ஃபராஸ், இரண்டாம் பாதி முழுக்க, சவுதி ஏரியாவிலேயே கழித்தார். Final third பக்கம் அதிகாமக்ப் போகவே இல்லை. 

சவுதி அரேபியா

ஆகமொத்தம், எந்த வீரர்கள் எதில் பெஸ்ட், அணியின் கெமிஸ்ட்ரி எப்படி வொர்க் ஆகும் என எதையுமே தெளிவாகத் திட்டமிடாமல் களமிறங்கியுள்ளது சவுதி அரேபியா. வீரர்கள், பயிற்சியாளர் எல்லோருமே இந்த படுதோல்விக்குப் பொறுப்பு. உலகக் கோப்பை எனும் மாபெரும் வாய்ப்பு 12 வருடம் கழித்து கிடைத்தபோது, அதை இப்படியா வீணாக்குவது?


டிரெண்டிங் @ விகடன்