`இதனால்தான் அவரது பந்துவீச்சை விளாசினேன்' - ரஷீத் கான் குறித்து நெகிழும் ஷிகர் தவான்!

'இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ரஷீத் கான் பந்துவீச்சை எதிர்கொண்டு பழகியதால், டெஸ்ட்டில் அவரை எளிதில் சமாளித்தேன்' என ஷிகர் தவான் கூறியுள்ளார். 

ஷிகர் தவான்

சமீபத்தில், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட்டில் இந்திய அணியுடன் விளையாடியது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, 2 நாள்களில் முடிந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 474 ரன்கள் எடுத்தது. இதையடுத்துக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 109 ரன்களில் ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் பெற்றது. இதைத் தொடர்ந்து, 2 -வது இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில், இந்திய அணி வெற்றிபெற ஷிகர் தவான் முக்கிய காரணமாக இருந்தார். தவான் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் சேர்த்தார். முன்னதாக, 87 பந்தில் சதம் அடித்த தவான், மதிய உணவு இடைவேளைக்கு முன் சதத்தைப் பூர்த்திசெய்து, முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்நிலையில், ஆப்கன் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் பந்துவீச்சை சமாளித்தது குறித்து தவான் ருசிகரமாகப் பதிலளித்துள்ளார். அதில்,  ``கடந்த இரண்டு வருடங்களாக, நானும் ரஷீத்தும் ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் அணியில் விளையாடிவருகிறோம். அப்போது, வலைப் பயிற்சியில் அவரது பந்தை எதிர்கொண்டேன். அது, இந்த டெஸ்ட்டில் எனக்கு உதவியாக இருந்தது. அவர் ஒரு டாப் - கிளாஸ் பௌலர்.  எனினும், இந்த ஆட்டத்தில் ரஷீத்தின் பந்துவீச்சை ரசித்து விளையாடினேன். இதில், நான் ஆதிக்கம் செலுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டாவது செஷனில் ஆப்கன் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். அவர்கள், இன்னும் நிறைய கற்றுக்கொள்வார்கள். நிச்சயம் அவர்கள் நிறைய தூரம் செல்வார்கள்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!