வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (16/06/2018)

கடைசி தொடர்பு:12:30 (16/06/2018)

சொதப்பிய சுவாரஸ்... கடைசிவரை போராடித் தோற்ற 'சலா' இல்லாத எகிப்து!

சொதப்பிய சுவாரஸ்... கடைசிவரை போராடித் தோற்ற 'சலா' இல்லாத எகிப்து!

உருகுவே மற்றும் எகிப்து அணி மோதும் உலகக்கோப்பை போட்டியைக் காண உலகமே தயாராகிக் கொண்டிருந்தது. 'வெற்றி நிச்சயம்' என போட்டியைக் காண உருகுவே நாட்டினர் உற்சாகமாகத் தயாராகினர். ஆனால், எகிப்தில் பிரார்த்தனைக் கூடத்தை விட்டு யாரும் வெளியேறவில்லை. வழக்கத்தைவிடவும் எகிப்தியர்களின் பிரார்த்தனை நேரம் அதிகமாகிக்கொண்டே போனது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடத் தங்கள் அணியைத் தகுதிபெறச் செய்த முகமது சலா, எப்படியாவது இந்தப் போட்டியில் களமிறங்கிவிட வேண்டுமென்பதே ஒட்டுமொத்த எகிப்தியர்களின் பிரார்த்தனையாக இருந்தது. சொல்லப்போனால்... ஆப்பிரிக்கர்கள் அனைவருக்கும் அதுவே பிரார்த்தனையாக இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை உலகக்கோப்பையில் விளையாடும் எந்தவொரு ஆப்பிரிக்க அணியின் வெற்றியும் தங்களின் வெற்றி!

மொஹமத் சலா - எகிப்து

காங்கோவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிப் போட்டியில் 2 கோல்கள் அடித்து, உலகக் கோப்பை குரூப் பட்டியலில் எகிப்து அணியை இடம்பெறச் செய்தவர் முகமது  சலா. சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல் அணிக்காக விளையாடியபோது, தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக களத்தைவிட்டு வெளியேறியபோது, கண்கலங்கியது சலா மட்டுமல்ல... ஒட்டுமொத்த எகிப்து நாடும்தான்!

இந்தப் போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதே ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. லைன் - அப் அறிவிக்கப்பட்டபோது சலா பெஞ்சில் அமர்த்தப்பட்டார். எப்படியும் முக்கியமான நேரத்தில் மாற்று வீரராகக் களமிறக்கப்படுவார் என்ற நம்பிக்கையோடு தான் ரசிகர்கள் போட்டியைக் காண ஆரவாரமாகத் தயாராகினர். ``சலா எங்களுக்கு முக்கியம். வரும் ஆட்டங்களில் அவரின் பங்களிப்பு தேவை. அதனால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை" என மேட்ச் தொடங்குவதற்கு முன்பே எகிப்தின் பயிற்சியாளர் ஹெக்தோர் கூப்பர் அறிவித்துவிட்டார். தனிமனிதனை மட்டுமே நம்பி கால்பந்தில் ஓர் அணி விளையாட முடியாதுதான்... ஆனால், பிரமிடுகளைப் போல எகிப்தின் ஓர் அடையாளம் சலா!

முதல் உலகக்கோப்பையை வென்ற அணியான உருகுவே, அனுபவம் வாய்ந்த வீரர்களான லூயிஸ் சுவாரஸ், எடின்சன் கவானி, டியாகோ கோடின் போன்ற வீரர்களோடு களமிறங்கியது. 2018 உலகக்கோப்பை முதல் போட்டியில், சவுதி அரேபியாவுக்கு எதிராக 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி வென்றதைப் போல், மிகப்பெரிய கோல் வித்தியாசத்தில் எகிப்து அணியை உருகுவே அணி சாய்த்துவிடும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், உருகுவே அணிக்கு வெற்றியை அவ்வளவு எளிதில் நாங்கள் தரப்போவதில்லை என எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹெக்தோர் கூப்பர் முன்முடிவோடு தன் அணியின் ஃபார்மேஷனை அறிவித்தார். தடுப்பாட்டம் தான் எகிப்தின் வியூகம் என்பதை 4:2:3:1 ஃபார்மேஷன் லைன் - அப் தெளிவாக்கியது.

சுவாரஸ்

ஆட்டம் தொடங்கிய உடனேயே தனது அட்டாக்கிங் ஆட்டத்தையும் தொடங்கியது உருகுவே. 2-வது நிமிடத்திலேயே சுவாரஸூம் கவானியும் எகிப்தின் கோல் வளையத்துக்குள் பந்தைக் கடத்திச் செல்ல ஆரம்பித்தபோதும், எகிப்தின் டிஃபன்ஸ் பந்தை பாஸ் செய்யவிடாமல் டஃப் கொடுத்தது. எகிப்தின் டிஃபன்ஸ் வளையத்தையும் தாண்டி 8-வது நிமிடத்தில் கவானி ஷூட் செய்த பந்து, போதிய பவர் இல்லாமல் சென்றதால் எகிப்து கோல் கீப்பர் மொஹமத் எல் ஷெனாவியின் கைகளுக்குள் தஞ்சமானது. 14-வது நிமிடத்தில் எகிப்து அணியின் பாக்ஸ் வரை கடத்திச் சென்ற பந்தை ஆஃப் டார்கெட்டில் ஷூட் செய்து சுவாரஸ் சொதப்பத் தொடங்கினார்.

தடுப்பாட்டம் மட்டுமின்றி, உருகுவே ஸ்ட்ரைக்கர்கள் செய்த தவறுகளும் தாம் எகிப்துக்குப் பலம் சேர்த்தது. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் ஷ்யூர் ஷாட் கோலாக அமைய வேண்டியதை, சைட் நெட்டில் உதைத்து ரசிகர்களை அப்செட் ஆக்கினார் சுவாரஸ். மிட்ஃபீல்டர்களான நாஹிதான் நாதெஸ், மத்தியாஸ் வெசினோ ஷூட் செய்தவையும் 'சேவ்' செய்யப்பட்டும், 'அவே' ஆகியும் உருகுவே ரசிகர்களை வெறியேற்றியது.

உருகுவே ஷூட் செய்வதில் சொதப்பினால், அட்டாக்கிங் சைடில் பாஸ் செய்வதிலேயே சொதப்பிக்கொண்டிருந்தது எகிப்து. இதனால், அந்த அணியால் முதல் பாதி முடிவதற்குள் வெறும் இரண்டு முறையே கோல் போஸ்ட் நோக்கி ஷூட் செய்ய முடிந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால், பாதிக்கிணற்றைத் தாண்டிவிட்டிருந்தது எகிப்து. உலகக்கோப்பை வரலாற்றில் உருகுவே இதுவரை ஆடிய ஆட்டங்களில் முதல் பாதியில் கோல் போடாத போட்டிகளில் அதிகம் தோற்றிருக்கிறது (இதற்கு முன் 3 போட்டிகளில் வெற்றி, 8 போட்டிகளில் டிரா, 7 போட்டிகளில் தோல்வி) என்ற புள்ளிவிவரம் எகிப்தியர்களுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கக்கூடும்.

உலகக்கோப்பை கால்பந்து

ஆட்டத்தின் இரண்டாவது பாதி உருகுவேயின் கால்களுக்கு (கைக்கு) மாறியது. இதனால் எகிப்து அணிக்கு ப்ரெஷ்ஷர் அதிகமானது. அதன் காரணமாகவே நிறைய தவறுகள் செய்யத்தொடங்கினர். இரண்டு Yellow Card-கள் வேறு! ஆனால், இரண்டாவது பாதியிலும் சுவாரஸூக்கு சோதனைக்காலம் தான். 50-வது நிமிடத்தில் அருமையாகக் கிடைத்த பாஸை ஷூட் செய்ய... எல் ஷெனோ அருமையாக சேவ் செய்தார். கவானியும் தன் பங்குக்கு அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை கோலாக்க முயற்சி செய்துகொண்டுதான் இருந்தார். ஆனால், கடைசிவரை முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை.

ஆட்ட நேரம் முடிய ஒரு நிமிடம் மட்டுமே இருக்கும்போதுதான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. வலது மூலையில் இருந்து ஃப்ரீ கிக்கில் சாஞ்செஸ் பாஸ் செய்த பந்தை, எம்பிக்குதித்துத் தரமான ஹெட்டர் கோல் ஆக்கினார் உருகுவேயின் மிட் ஃபீல்டர் ஹோசி ஜிமேனிஸ். எகிப்து கோல் கீப்பர் எல் ஷெனோவால் இந்த பந்தைத் தொடக்கூட முடியவில்லை. சலா உட்பட எகிப்தியர்கள் அனைவரின் இதயங்களும் நொறுங்கின.

1-0 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை உருகுவே வீழ்த்திவிட்டாலும், கார்னர் கிக்குகளையும் அருமையாகக் கிடைத்த வாய்ப்புகளையும் அந்த அணி கோல் ஆக்கத் திணறியது. அடுத்தடுத்த ஆட்டங்களில் இதை சரிசெய்து கொள்ளாவிட்டால் பின்னடைவு நிச்சயம். ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டங்களில், எகிப்து அணிக்காக சலா களமிறங்குவது உறுதி என்பதால், 'ஏ' பிரிவில் எகிப்தின் ஆதிக்கம் இருக்கும் என நம்பலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்