``கால்பந்து உலகக் கோப்பை இந்த அணிக்குதான்!” - ஆஸ்கரை சரியாக கணித்த AI-ன் கணிப்பு

``கால்பந்து உலகக் கோப்பை இந்த அணிக்குதான்!” - ஆஸ்கரை சரியாக கணித்த AI-ன் கணிப்பு

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்தாட்ட ரசிகர்களை பித்துப் பிடிக்கச் செய்யும் ஃபிபா உலகக் கோப்பை திருவிழா. இந்த ஆண்டு இத்திருவிழா ரஷ்யாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு உலகக் கோப்பையை எந்த அணி முத்தமிடப்போகிறது என்பதை அறிய உலகமே ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.. பலரும் இந்த அணிதான் வெற்றிபெறும் என்று ஆரூடங்கள் சொல்லவும் ஆரம்பித்துவிட்டனர். இதில் அக்கிலெஸ் (Achilles) என்ற பூனையின் கணிப்பும் உண்டு.

இந்த வரிசையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச்சேர்ந்த  செயற்கை நுண்ணறிவு (Artificial intelligent) தொழில்நுட்பத்தை உருவாக்கும்  `Unanimous A.I.” என்ற நிறுவனமானது  தன்னுடைய புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆண்டின் உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணியை கணித்துள்ளதாக அறிவித்து ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. பல்வேறு கணிப்புகள் வெளிவரும்போது இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில் மட்டும் ஸ்பெஷல் கவனம் செலுத்துவதற்கான காரணம் என்னவென்றால், அமெரிக்காவின் என்.சி.ஏ.ஏ (NCAA Tournament) நடத்தும் கூடைப்பந்தாட்ட போட்டிகளிலும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற ‘கென்டகி டெர்பி’ (Kentucky Derby) குதிரைப் பந்தயங்களிலும் வெற்றியாளர்களை துல்லியமாகக் கணித்த பெருமை இந்நிறுவனத்துக்கு உண்டு. அவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்துமுடிந்த ‘ஆஸ்கார்’ விருது வழங்கும் விழாவிலும் இவர்களது கணிப்பு துல்லியமாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அவர்கள் பயன்படுத்தும் ‘திரள் நுண்ணறிவு’ (Swarm Intelligence) என்று அழைக்கப்படுகின்ற தொழில்நுட்பமானது ‘லூயிஸ் ரோசென்பெர்க்’ (Louis Rosenberg) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ``மனிதர்கள் ஒரு திரளாக அல்லது hive-mind என்று சொல்லக்கூடிய தேனீக்களிடம் காணப்படும் மனோபாவத்துடனும் முடிவெடுக்கும்போது, அவர்களின் அந்தக் குழு முடிவானது புள்ளிவிவரப்படி பெரும்பாலும் துல்லியமானதாக இருக்கும்” என்பதே இந்தச் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையாகும்.  

இதுகுறித்து ‘டெட்-எக்ஸ் டாக்’ ஷோவில் (TEDx Talk) பேசிய ரோசென்பெர்க், “ஒரு மூளை என்பது பல நுண்ணறிவு வடிவங்களை இணைக்கக்கூடிய நியூரான்களின் அமைப்பு. திரள் நுண்ணறிவு என்பது பல மூளைகளின் நுண்ணறிவுகள் இணையும் ஓர் அமைப்பு. இது பெரும்பாலான சமூக இனங்களின் பரிணாம வளர்ச்சியில் உருவான ஓர் இயற்கைப் படிநிலை. சுருக்கமான சொன்னால் இது ‘மூளைகளின் மூளையாகும்’, அது எந்தவொரு தனி நபரைவிடவும் சிறந்ததாகும்”, என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ``இதை தேனீக்களை வைத்து விளக்கமுடியும், உதாரணமாக 10000 தேனீக்கள் ஒரு கூட்டில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். புதியதாக ஓர் இடத்தில் தங்கள் கூட்டை அமைக்க அவை விரும்பும்போது, சில நூறு தேனீக்கள் மட்டும் கூட்டுக்கான புதிய இடத்தை தேடிப் புறப்படும். அதிலுள்ள ஒவ்வொரு தேனீயும் அதற்கான தனித்தனி மூளையைப் பெற்றிருந்தாலும் 10,000 தேனீக்களுக்கான ஒரு புதிய இடத்தை தேடும்போது அவை தனித்தனியாகச் செயல்படுவதில்லை. மாறாக அவை ஒன்றாக இணைந்து அவற்றின் கூட்டுக்கான இடத்தை முடிவுசெய்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒருவித நடன சமிஞ்ஞையின் (“Waggle dance”) மூலம் தகவல் பரிமாற்றம் செய்கின்றன. இவ்வாறாக, தங்கள் கூட்டுக்கான சிறந்த இடத்தை தேர்வு செய்வதைக் குழுவாக மேற்கொள்கின்றன.  உலகக் கோப்பை வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இம்முறைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.”, என்றார்.

இந்தக் கணிப்பை பொறுத்தமட்டில்,  Unanimous A.I. உருவாக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய வலைதளத்தில் ரசிகர்களுடைய கூட்டு முடிவானது பெறப்படுகிறது. அதைக்கொண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் 30க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மேற்சொன்ன தேனீக்கள் போல செயல்பட்டு  வெற்றியாளர்களைத் தீர்மானிக்கின்றனர். 

உதாரணமாக, கீழ்க்கண்ட இந்த அனிமேஷன் காட்சியைப் போலத்தான் திரள் நுண்ணறிவானது செயல்படுகிறது.

 

 

இதுகுறித்து அந்நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், ``மற்ற விளையாட்டுகளைப் போல அல்லாமல், இந்த விளையாட்டின் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு அணிக்கு பல சாதகமான முடிவுகள் கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதால் வெற்றி பெறுவதை நிர்ணயிக்கும் நிகழ்வானது (probability) சற்றே சிக்கலானதாக இருந்தது” என்றார்.

‘Swarm intelligence’ கணித்துள்ள வெற்றியாளர்களின் விவரங்கள்:
இந்த உலகக் கோப்பை போட்டியில், மொத்தமுள்ள 32 அணிகள் 8 பிரிவுகளாக அதாவது பிரிவுக்கு 4 அணிகளாக தங்களுக்குள் தலா ஒருமுறை  லீக் சுற்றில் மோதுகின்றன. அதிலிருந்து நாக் அவுட் சுற்றுக்கு முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும். அந்த வகையில் லீக் சுற்றில் வெல்லப்போகும் அணிகளாக கீழ்க்கண்ட அணிகள் கணிக்கப்பட்டிருக்கின்றன.

கால்பந்து 2018 உலகக் கோப்பை


அதற்குப்பின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றான ‘ரவுண்ட் ஆப் 16’ (Round of 16)-இல் வெற்றிபெறும் அணிகளாகக் கணிக்கப்பட்ட அணிகள் கீழே தரப்பட்டுள்ளன.

கால்பந்து 2018 உலகக் கோப்பை
            

 And the Winner is..!!
அதைத் தொடர்ந்து நாக் அவுட் சுற்றுகளான கால் இறுதி, அரையிறுதி ஆகியவற்றையெல்லாம் கடந்து இந்த முறை வாகை சூடும் அணியாகத் தேர்வு செய்யப்பட்ட அணி எது தெரியுமா?..! கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள்.

கால்பந்து 2018 உலகக் கோப்பை

ஆம். சென்ற முறை வென்ற அதே ‘ஜெர்மனிதான்’ இந்தமுறையும் உலகக் கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 19 சதவிகிதத்தை  பிரேசில் பெற்றுள்ளது. ஆகையால் ஜெர்மனிக்கும் பிரேசிலுக்கும் இடையேதான் இந்த ஆண்டுக்கான அனல் பறக்கும் இறுதிப் போட்டி நடைபெறும் என்று கணித்துள்ளது இந்நிறுவனம்.  

உலகமே ஆவலோடு எதிர்பார்க்கிற இந்தப் போட்டியில் இந்நிறுவனத்தின் ஆரூடம் பலிக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!