37 ஆண்டுகளுக்குப் பின் வீழ்ந்த ஜெர்மனி... ரசிகர்களால் அதிர்ந்த மெக்ஸிகோ பூமி

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியனை வீழ்த்தியதற்காக பூமியையே அதிர வைத்துள்ளனர் மெக்ஸிகோ ரசிகர்கள்.

மெக்‌ஸிகோ

பிஃபா கால்பந்து ஃபீவர் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் இல்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் தங்களுடைய விருப்பமான வீரர் விளையாடும் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தினம் தினம் சுவாரஸ்யமாக ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது இந்தக் கால்பந்து திருவிழாவில். 

மாஸ்கோவின் லுஸ்னிகி மைதானத்தில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனியும், மெக்ஸிகோவும் நேற்று மோதிக்கொண்டன. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்குப் போட்டி தொடங்கியது. 1982 முதல் ஜெர்மனி, தான் விளையாடிய எந்த முதல் போட்டியிலும் தோற்காமல் 'டிஃபன்டிங் சாம்பியன்'ஸாக வலம் வந்துகொண்டிருந்தது. தற்போது அந்த நிலை தகர்த்தெறியப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் இரு அணிகளும் கோல் அடிப்பதற்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தன. அப்போது ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மெக்ஸிகோ வீரர் ஹெர்னாண்டஸ் எதிர் தாக்குதலைத் தொடங்க அதை கோலாக மாற்றினார் ஹிர்விங் லொசானோ

சரியாக அவர் கோல் அடித்த அதே நேரத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 11.32 மணியளவில் ஸோகாலோ நகரத்தில் சிறு செயற்கை நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது வீரர் லொசானோ, மெக்ஸிக்கோவுக்காக கோல் அடித்தபோது அதை ரசிகர்கள் கொண்டாடுவதற்காக ஒன்றாக குதித்ததால் ஏற்பட்டதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதை மெக்ஸிகோவைச் சேர்ந்த புவியியல் மற்றும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!